தமிழ்நாட்டில் முதன் முதலாக உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு நடைபெற்ற 1996 தேர்தலின் போது 6 மாநகராட்சிகள் இருந்தன. அதில், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பதவி பட்டியல் இனப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. திருச்சி மாநகராட்சி பெண்கள் (பொது) என ஒதுக்கப்பட்டது. சென்னை, மதுரை, கோவை, சேலம் நான்கும் ஆண்-பெண் இருபாலருக்கும் பொதுவானது.சென்னை மேயர் தேர்தலில் தி.மு.க வேட்பாளராக மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து ஜனதா கட்சி (சுப்பிரமணிய சாமி) சார்பில் போட்டியிட்டவர் சந்திரலேகா ஐ.ஏ.எஸ் (ஓய்வு). அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா தனது வேட்பாளரான ஜெயக்குமாரை வாபஸ் பெற்றுக்கொண்டு, தன்னால் ஆசிட் வீச்சுக்குள்ளான சந்திரலேகாவை ஆதரித்தார்.இரட்டை இலை வாபஸ் பெற்ற அந்த தேர்தலில், சுயேட்சை வேட்பாளராக இரட்டைவாள் சின்னத்தில் போட்டியிட்டார் கருப்பன் ஐ.ஏ.எஸ் (ஒய்வு). 1991-96ல் ஜெயலலிதா ஆட்சியை எதிர்த்து பஞ்சமி நில மீட்பு இயக்கத்தை முன்னெடுத்தவர். மக்கள் தொகை அடிப்படையில் சென்னை மேயர் பதவியை பட்டியல் இனத்திற்கு ஒதுக்கியிருக்க வேண்டும் என்றும், தி.மு.க அரசு செய்த சட்டத் திருத்தத்தினால் சென்னைக்குப் பதில் திருநெல்வேலி ஒதுக்கப்பட்டு விட்டது என்றும் அவர் தரப்பில் தீவிரப் பரப்புரை செய்யப்பட்டது.
மு.க.ஸ்டாலினை மேயராக்குவதற்காகத்தான் கலைஞர் அரசு இப்படி செய்துவிட்டது என்பது அவரது குற்றச்சாட்டு.தேர்தல் முடிவுகளில் மு.க.ஸ்டாலின் அமோக வெற்றி பெற்றார். மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் என்ற பெருமையையும் பெற்றார். சிங்காரச் சென்னை திட்டத்தின் கீழ் தலைநகரத்தை காலத்திற்கேற்ற நவீனத் நவீனத் தன்மையுடன் கட்டமைத்தார். அனைத்து சமுதாய மக்களின் நம்பிக்கைக்குரியவரானார். அதன்பிறகு, 2001 அ.தி.மு.க ஆட்சியில் நடந்த தேர்தலிலும் சென்னை மாநகராட்சி, மேயர் பதவி பொதுப் பட்டியலில்தான் நீடித்தது. அந்தத் தேர்தலிலும் மு.க.ஸ்டாலினையே மக்கள் தேர்ந்தெடுத்தார்கள். அதைப் பொறுக்க முடியாமல், தனிச்சட்டம் இயற்றி, அவரது பதவியைப் பறித்தது ஜெயலலிதா அரசு.2006, 2011 உள்ளாட்சித் தேர்தல்களிலும் சென்னை மேயர் பதவியைப் பட்டியல் இனத்திற்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தொடர்ந்து முன் வைத்தார்.
பட்டியல் சமூகத்தின் இயக்கத்தவர்கள் பலரும் தொடர்ந்து வலியுறுத்தினர்.கால் நூற்றாண்டு காலமாக முன்வைக்கப்படும் கோரிக்கை இது. அப்போது சென்னையின் மேயராகப் பொறுப்பேற்ற ஸ்டாலின், தற்போது தமிழ்நாட்டின் முதல்வராகியிருக்கிறார். சென்னை மேயர் பதவி, பட்டியல் இனப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.திருவள்ளுவர் ஆண்டு 2053 தை 5