இலங்கையை இராணுவமயப்ப்படுத்தும் நோக்கில் மகிந்த ராஜபக்ச குடும்ப அரசு மேற்கொண்டுவரும் தலைமைத்துவப் பயிற்சி என்ற செயன்முறை மக்களைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
மாதுருஓயா இராணுவ முகாமில் மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியில் கலந்துகொண்டிருக்கும், பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றிருக்கும் மாணவியொருவரை உயரமான மதிலொன்றின் மீதிருந்து கீழே குதிக்கச் சொல்லிக் கட்டளையிடப்பட்டு, அவர் குதித்ததால் அவரது இடது காலில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
அனுராதபுரம், தேவாநம்பியதிஸ்ஸ புரம், திஸாவெவ, வடவந்தனா வீதி, இலக்கம் 343 எனும் முகவரியில் வசிக்கும் இருபது வயதான கே.எஸ்.செவ்வந்தி எனும் மாணவியே தலைமைத்துவ பயிற்சியின் போது இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் 22ம் திகதி மாணவி செவ்வந்தி தலைமைத்துவப் பயிற்சிக்காக மாதுருஓயா இராணுவமுகாமுக்கு பயிற்சிக்காகச் சென்றுள்ளதோடு, எட்டு நாட்கள் தொடர்ந்து அப் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார். எட்டாவது தினத்தில் உயரமான மதிலொன்றின் மீதிருந்து குதிக்கும்படி பயிற்சி அதிகாரியொருவர் இட்ட கட்டளைக்குக் கீழ்ப்படிந்து குதித்தபோதே அவரது இடது காலுக்கு சேதம் நேர்ந்துள்ளது.
மாதுருஓயா இராணுவ முகாமில் வைத்து அவருக்கு தற்காலிக சிகிச்சை கொடுக்கப்பட்டபோதும் குணமடையாததால் இரண்டு தினங்களின் பிற்பாடு அரலகங்வில வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளார். அங்கும் குணமடையாமல் போகவே பொலன்னறுவை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
அங்கு வைத்து எக்ஸ் கதிர் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்ட மாணவி செவ்வந்தியின் இடது பாதமானது அறுவைச் சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட வேண்டுமென எலும்பு, மூட்டுக்கள் சம்பந்தமான விஷேட வைத்திய நிபுணர் திரு. குஸல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.