மோடி ஆட்சிக்கு வந்த இந்த ஏழு ஆண்டுகளில் நாடு அதள பாதாளத்தை நோக்கிச் சென்றுள்ளது. மோடிக்கு வேண்டிய தொழிபதிபர்கள், பாஜக ஆதரவு இந்து சாமியார்கள்,மடாலயங்கள், ராமர்கோவில் கமிட்டி, ஆர்.எஸ்.எஸ் உட்பட இந்துத்துவ பரிவாரங்களே மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்.
வேலையின்மை, வறுமை, பசி, பணத்தட்டுப்பாடு, விலைவாசி உயர்வால் மக்கள் பெரும் இன்னல்களை அனுபவிக்கின்றனர். வரவிருக்கும் ஐந்து மாநில தேர்தல்களிலும் பாஜக வெல்வது கடினம்தான். ராமர் இம்முறை கை கொடுப்பாரா என்ற சந்தேகம் பாஜகவுக்கு இருக்கிறது. அதனால் மீண்டும் இந்துத்துவ வெறி பேச்சுகளும் தாக்குதல்களும் மிகத் திவிரமடைகின்றன.
நாஜி ஜெர்மனியின் உறுதியேற்பு போல இந்துச் சாமியார்கள் அங்காங்கே முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களை கொல்ல வேண்டும் என்று சபதம் மேற்கொண்டு வருகிறார்கள். உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘தர்ம சன்சத்’ நிகழ்ச்சியில், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மக்களைக் கொல்ல அழைப்பு விடுத்து, பல பேச்சாளர்கள் வெறுப்பு பேச்சுக்களை பேசினர்.ஹரித்வார் தர்ம சன்சத் நிகழ்ச்சி யதி நரசிம்மானந்த் கிரி என்பவரால் ஏற்பாடு செய்யப்பட்டது, இவர் கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சுக்களை பேசியதாகவும், வன்முறையைத் தூண்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்.
கடந்த சில வாரங்களாகவே கர்நாடக மாநிலம் முழுக்க தேவாலயங்களுக்குள் புகுந்து பிரார்த்தனைகாளை நிறுத்தி விட்டு இந்து ஸ்லோகங்களை இந்துத்துவக் கும்பல்கள் பாடி வருகிறார்கள்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு எதிராக நாடு முழுக்க கத்தோல்க்க தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.இயேசுவின் சிலைகள் நொறுக்கப்பட்டுள்ளன. பாதிரியார்கள் மீதும், கிறிஸ்தவ பெண் துறவிகள் மீதும் தாக்குதல் நடந்துள்ளது.
இதற்கிடையில் கர்நாடக எம்பி தேஜஸ்வி சூர்யா மடாலய விழா ஒன்றில் பேசும் போது “இந்து மதத்தை விட்டு வெளியேறிய அனைவரையும் மீண்டும் மதம் மாற்றுவது மட்டுமே இந்துக்களுக்கு எஞ்சியிருக்கும் ஒரே வழி. வரலாற்றின் போக்கில் சமூக, அரசியல், பொருளாதார காரணங்களுக்காக இம்மதத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானவர்கள் மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும்” என்று பேசியுள்ளார்.
நாடு முழுக்க வெறுப்புப் பேச்சுகள் மூலமும் சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதலை திவீரபப்டுத்துவதன் மூலமும் மோடி அரசு தன் தோல்வியை மறைக்கப்பார்க்கிறது.
மேலும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக மிகப்பெரிய இனப்படுகொலைக்கு திட்டமிடப்படுகிறதோ என்ற அச்சமும் மக்களிடம் பரவி வருகிறது. காரணம் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு நமது அரசியலமைப்பு விளிம்பு நிலை மக்களுக்கு வழங்கி வந்த பல பாதுகாப்பு அம்சங்கள் தகர்த்தெரியப்படுகிறது. குடியுரிமை திருத்தச் சட்டம், குடியுரிமைக் கையேடு, வாக்காளர் அடையாள அட்டையை தூய்மைப்படுத்துதல், தொகுதிகளை மறுவரையறை செய்வது என சிறுபான்மை மக்களை நாடற்றவர்களாக்கும் செயல் அதிகரித்து வரும் நிலையில். மீண்டும் மோடிக்கு ஆட்சிக்கு வந்தால் அல்லது வருவதற்கு முன்பே பரந்து பட்ட அளவில் சிறுபான்மை மக்களை அழித்தொழிக்கும் நடவடிக்கை முடுக்கி விடப்படுமோ என்ற அச்சம் மக்களிடம் நிலவுகிறது.