01.09.2008.
மாஸ்கோ: பல ஆண்டுகளாக அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த சோவியத் யூனியன் எனும் வல்லரசின் சிதைவுக்குக் காரணமானவர் என ரஷ்யர் அல்லாதவராலும் விமர்சிக்கப்படும் கார்பசேவ், மீண்டும் வெளிச்சத்துக்கு வருகிறார். ரஷ்யாவில் சுதந்திர ஜனநாயகக் கட்சி எனும் பெயரில் புதிய கட்சியை ஆரம்பிக்கிறார்.
இரும்புத் திரை நாடு என வர்ணிக்கப்பட்ட சோவியத்தின் கடைசி அதிபர் மிகையீல் கார்பசேவ். 1985 முதல் 1990 வரை சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராரகவும், 1990 முதல் 1991 வரை சுப்ரீம் சோவியத்தின் அதிபராகவும் இருந்தவர்.
பெரோஸ்த்ரைகா, கிளாஸ்நாட் எனும் பொருளாதார – அரசியல் சீர்திருதக்தங்கள் மூலம், ரஷ்யாவில் மக்களாட்சி, தேர்தல் முறையைக் கொண்டு வந்தார்.
இதன் விளைவு ஒன்றுபட்ட சோவியத்தின் 15 நாடுகளும் துண்டு துண்டாகச் சிதறின.
இந் நிலையில்தான் மீண்டும் அரசியலுக்கு வரும் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார் கார்பசேவ். சில மாதங்களுக்கு முன்பு வரை தான் கடும் வறுமையில் வாடுவதாகவும், அதைப் போக்க பத்திரிகைகளில் பகுதி நேரமாக எழுதுதல் மற்றும் கல்லூரிகளில் கெஸ்ட் லெக்சரராக பணிபுரிதல் என பல வேலைகளைச் செய்வதாகவும் கூறிவந்தார் கார்பசேவ்.
ரஷ்யப் பிரதமராக விளாடிமிர் புடின் வந்த பிறகு மீண்டும் கம்யூனிஸ பாணி ஆட்சி முறைக்கு மாறத் தொடங்கியுள்ளது ரஷ்யா. பழையபடி இரும்புத் திரை நாடாக ரஷ்யா மாறத் தொடங்கிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் நாடு முன்பிருந்த நெருக்கடியான பொருளாதார நிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. பழையபடி அமெரிக்காவுடன் மோதுமளவுக்கு தனது பலத்தையும் வளர்த்துக் கொண்டு வருகிறது.
இதைக் கடுமையாக விமரச்சிக்கத் தொடங்கியுள்ளார் கார்பசேவ்.
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தான் கொண்டுவந்த சுதந்திரத்தை மக்களுக்கு முழுமையாகக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகவே மீண்டும் அரசியலுக்கு வருவதாகவும், அதற்காக புதிய கட்சியான சுதந்திர ஜனநாயகக் கட்சியைத் துவங்கியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தக் கட்சியைத் துவங்க அவருக்கு பக்கபலமாக இருப்பவர் ரஷ்யாவின் பெரும் பணக்காரரான அலெக்ஸாண்டர் லெபதேவ்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள புடின், கார்பசேவ் கட்சி ஆரம்பிப்பதால் எங்களுக்கு ஒரு கவலையும் இல்லை, என்று கூறியுள்ளார்.
77 வயதான கார்பசேவ் மீண்டும் ஒருவேளை தேர்தலில் போட்டியிட்டால், 1996-தேர்தலில் பெற்ற 1 சதவிகித ஓட்டுக்களையாவது பெறுவாரா என்பது சந்தேகம்தான் என கிண்டலடித்திருக்கிறது கார்டியன் பத்திரிக்கை.