காபூல் விமான நிலைய குண்டு வெடிப்பிற்கு பதிலடியாக அமெரிக்கா ஆளில்லா ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது இந்த தாக்குதலில் ஐ.எஸ் கே என்ற திவீரவாத குழுவின் முக்கிய தளபதி கொல்லப்பட்டுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் நாட்டிற்குள் போரை நடத்திய அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்து வெளியேறி வரும் நிலையில் மொத்த ஆப்கானிஸ்தானையும் தலிபான்கள் கைப்பற்றி விட்டார்கள். அமெரிக்கா, பிரிட்டன் படைகள் தங்கள் நாட்டினரோடு ஆப்கானை விட்டு வெளியேற விரும்பும் ஆப்கான் மக்களையும் மீட்டு வரும் நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று காபூல் விமான நிலையத்தின் வெளியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதில் 13 அமெரிக்க ராணுவத்தினர், மருத்துவர், கடற்படையினர் பலியாகினர்.
இத் தாக்குதலுக்கு ஐ.எஸ் கோரோசான் என்ற திவீரவாதக் குழு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இத்தாக்குதலுக்கு பழி வாங்குவோம் என்று அறிவித்த நிலையில்,நங்கார்கர் என்ற மாகாணத்தில் ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா ஐ.எஸ். கோரோசான் போராளிகள் மீது தாக்குதல் நடத்தியதில் அதன் முக்கிய தளபதியும், காபூர் குண்டு வெடிப்பிற்கு திட்டமிட்டவர் என்று சந்தேகிக்கும் நபரும் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.