காஞ்சிபுரம் அருகே நடந்த என்கவுண்ட்டர் குறித்து முழு உண்மைகளை வெளிக்கொணர உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்க மாநிலக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலக்குழு கூட் டம் மார்ச் 28 ஞாயிறன்று தாம்பரம் மாநிலக்குழு அலுவலகத்தில் ஜி. பெருமாள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பெ. சண்முகம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் ச.பழனிச்சாமி, மாநில அமைப்பாளர் ஏ.வி.சண்முகம், துணை அமைப்பாளர்கள் சகாதேவன், ஆனந்தன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
தமிழகத்தில் “என்கவுண்ட்டர்” என்ற பெயரில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை காவல்துறை சுட்டுக்கொல்வது தொடர்கதையாகி வருகிறது. மனித உரிமைகளை யோ, சட்டவிதிமுறைகளைப் பற்றியோ கொஞ்சமும் கவலைப்படாமல் காட்டுமிராண்டித்தனமான முறையில் இப்படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. மார்ச் 26ந் தேதி காஞ்சிபுரத்திற்கு அருகில் குறவர் சமுதாயத்தைச் சார்ந்த நட ராஜன் என்பவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மாண்டு போன நடராஜனின் பெற்றோரின் வாக்குமூலத்திலிருந்து இது உறுதியாகிறது. காவல் துறையினரின் இந்த அத்து மீறலை மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை வெளியிட்ட பத்திரிகை செய்தியிலும், முதல் தகவலறிக்கையிலும் பெயருக்கு முன்னால் சாதியின் பெயரை குறிப்பிட்டு தொடர்ந்து இழிவுபடுத்தி வருகிறது. காவல்துறையின் இந்த அணுகுமுறைக்கு வன் மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். தமிழக முதல்வர் இதில் தலையிட்டு காவல்துறையினரின் இந்த அணுகுமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனக் கோருகிறது.
என்கவுண்ட்டர் என்ற பெயரில் நடைபெற்றுள்ள நடராஜனின் மரணம் குறித்து முழு உண்மைகளை வெளிக்கொணர உயர்நீதி மன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென மாநிலக் குழு அரசை வற்புறுத்துகிறது.
பல்வேறு பட்டியலில் வைக்கப்பட்டுள்ள குறவரின மக்களை பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டுமென நீண்டகாலமாக வற்புறுத்தப்பட்டு வந்தது. தமிழக அரசு, பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தின் ஆய்வுக்கு உட்படுத்தி விரிவான அறிக்கையை பெற்று குறவரினத்தின் அனைத்துப் பிரிவினரும் பழங்குடியினர் தான் என 23.10.08 அன்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
இந்தியப் பதிவாளர் அவர்கள் கூடுதல் விபரங்கள் கேட்டு இப்பரிந்துரையை மாநில அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். இந்திய பதிவாளர் சின்னஞ்சிறு காரணங்களைக் கூறி மீண்டும் மீண்டும் திருப்பி அனுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பதை சுட்டிக்காட்டுகிறோம். தமிழக அரசு, இதில் அவசரமாக செயல்பட்டு பதிவாளர் கேட்டுள்ள விபரங்களை தெளிவாக அனுப்பி, குறவரினத்தவரை பழங்குடியின பட்டியலில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோருகிறோம்.
தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் உள்ள குறவன் இனத்தவருக்கு தாழ்த்தப்பட்டோர் சான்றிதழ் தர பல வட்டாட் சியர்கள் மறுத்துவருகின்றனர். இதனால் குழந்தைகளின் படிப்பும், வேலை வாய்ப்பும் பெறமுடியாமல் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். எனவே, குறவன் சாதியைச் சார்ந்தவருக்கு தாழ்த்தப்பட்டோர் சான்றிதழ் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாநிலக் குழு கேட்டுக் கொள்கிறது.