24.01.2009.
காங்கோலிய கிளர்ச்சிக்குழுவின் தலைவரான லாரண் என்குந்தா அவர்கள் ருவண்டா பிராந்தியத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காங்கோ ஜனநாயகக் குடியரசின் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
காங்கோலியப் படைகளால் எல்லையைக் கடந்து ருவண்டாவுக்கு போகச் செய்யப்பட்ட என்குந்தா அவர்கள், அங்கு ருவண்டாப் படையினரால் கைது செய்யப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மத்திய ஆபிரிக்காவில் சடுதியாக மாறி வருகின்ற இராஜதந்திர நிலைமைகளின் மத்தியில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ருவண்டாவின் கூட்டாளியாக கிழக்கு காங்கோவில் செயற்பட்டுவந்தவர் அவர். ருவண்டாவில் 1994 ஆம் ஆண்டு இனப்படுகொலையை அடுத்து அங்கிருந்து வெளியேறி செயற்படுகின்ற ஹூட்டு இன படையின் தாக்குதல்களில் இருந்து டூட்சி இன மக்களை பாதுகாக்கும் காவலனாகத்தான் எங்குந்தா தன்னை பிரகடனப்படுத்தியிருந்தார்.
முன்னாள் மனோதத்துவ மாணவனான என்குந்தா 90களில் அருகே உள்ள ருவண்டாவில் தன்னுடைய இனத்தை சேர்ந்தவர்களுடன் சேர்ந்து ஹூட்டு இன தீவிரவாதிகளுக்கு எதிராக போராடினார்.
பின்னர் அவர்களை அருகே உள்ள காங்கோவுக்குள் துரத்தவும் அவர் உதவினார். அத்துடன் காங்கோலிய இராணுவத்தின் ஜெனரலாகவும் அவர் ஆனார்.
2004 ஆம் ஆண்டில் படையில் இருந்து விலகிய அவர் தனக்கென ஒரு கிளர்ச்சிக்குழுவை ஆரம்பித்தார். அந்த குழுவுக்கு ருவண்டாவில் உள்ள தனது நண்பர்களின் முழுமையான ஆதரவையும் அவர் பெற்றார்.
தன்னை ஒரு படைச் சிப்பாயாக அல்லாமல், ஒரு அரசியல் தலைவராகவே எப்போது காண்பிக்க முனைவார் என்று அவரைச் சந்தித்த செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
ஜெனரல் என்குந்தாவுக்கு ஆரம்பத்தில் ருவண்டாவின் பூரண ஆதரவு இருந்து வந்தது. இந்த ஆதரவு காரணமாக காங்கோலியர்கள் மிகுந்த ஆத்திரமும் அடைந்திருந்தனர்.
ஆனால், அவரது படையினரால் அடுத்தடுத்து காங்கோலியப் படைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை தாக்குப் பிடிக்க முடியாமல் காங்கோலியப் படை தடுமாறியது.
இருந்தபோதிலும் கடந்த நவம்பர் நடுப்பகுதியில் ருவண்டாவின் நிலைப்பாட்டில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. காங்கோ அரசாங்கத்துடன் அவர்கள் கூட்டாக நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கோலியப் படையினருடன் ருவண்டா இராணுவம் இணைந்து ஹூட்டு கிளர்ச்சிக்காரர்களை அடக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த புள்ளியில் ஜென்ரல் என்குந்தா அவர்கள் தன்னை இந்த புதிய அணியின் பின்னால் சேர்த்துக்கொண்டிருக்க முடியும். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. தன்னால் காங்கோவின் கிழக்கில் பிடிக்கப்பட்ட இடங்களில் இருந்து காங்கோ படைகளுக்கு எதிரான தனது அழுத்தங்களை தொடரப்போவதாக அவர் மிரட்டினார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் மேலும் சங்கடத்தை ஏற்படுத்தும் வகையிலாக வெளியான ஐ. நா அறிக்கை ஒன்றில், ருவண்டாவின் அதிபர் வட்டாரத்துக்கும், ஜெனரல் என்குந்தாவுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து தெளிவான ஆதாரங்கள் வெளியிடப்பட்டன.
இந்த நிலையில் இவரது நடவடிக்கைகள் அந்தப் பிராந்தியத்தில் ருவண்டாவின் திட்டங்களுக்கு தடையாக வரவே, அவர் மீதே நடவடிக்கை எடுப்பது என்று றுவண்டா முடிவு செய்துவிட்டது.
அந்த நேரத்தில் என்குந்தாவின் படையில் ஏற்பட்ட ஒரு பிளவும் ருவண்டாவுக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அதனால், தற்போது அவர்கள் அவரைக் கைது செய்துள்ளனர்.
இருந்தபோதிலும் அவரது படையைச் சேர்ந்த பல போராளிகள்- அவர்களில் எண்ணிக்கை 2000 பேர் வரை இருக்கலாம்- அவர்கள் இன்னமும் அவருக்கு விசுவாசமாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனால் இப்போது இங்குள்ள கேள்வி என்னவென்றால், என்குந்தா கைது செய்யப்பட்ட பின்னரும் அவர்கள் தொடர்ந்தும் சண்டையிடுவார்களா, அல்லது புதிய சமரசங்களை ஏற்று காங்கோலிய இராணுவத்தில் இணைந்துவிடுவார்களா என்பதுதான்.
அவரது கைது சில தரப்புகளால் வரவேற்கப்படுகின்றது. இருந்தபோதிலும், இது அங்கு மேலும் கொலைகள் அதிகரிப்பதற்கு காரணகாமாகலாம் என்று ஐ. நா வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது.
மூலம்:BBC.