தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. பெரும்பான்மை கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரங்களையும் துவங்கி விட்ட நிலையில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவிப்பதில் திணறி வருகிறது.
தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 25 தொகுதிகளையும் பெற கட்சியில் செல்வாக்கு உள்ளவர்கள் போட்டி போடுகிறார்கள். வசந்த் அன்கோ முதலாளி வசந்தகுமாரின் மகனை கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் இறக்க காங்கிரஸ் முடிவு செய்திருக்கும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் அந்த தொகுதியை கட்சிக்காக உழைத்த பலரும் கேட்டு வருகிறார்கள்.
இது தவிற 25 தொகுதிகளையும் பணக்காரர்களுக்கு மட்டுமே ஒதுக்குவதாகக் கூறி மூன்று குழுக்கள் கட்சி தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனுக்குள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கட்சியில் இருந்து விலகி மீண்டும் இணைகிறவர்களுக்கு உடனே சீட் கொடுப்பதாக இந்த போராட்டம் நடக்கிறது. வசதி படைத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று எம்.பி விஷ்ணு பிரசாத் காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று காலையில் அவரது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவருக்கு போட்டியாக கே.எஸ்.அழகிரி ஆதரவாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு தொகுதியில் உள்ள விஜயதாரணி என்ற பெண் வேட்பாளர் கடந்த இரு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டே பாஜகவோடும் பேசிக் கொண்டிருந்தார். சென்னையிலேயே தங்கியிருக்கும் விஜயதாரணி தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்வதற்காக சென்னையிலேயே இருப்பார். தொகுதிப்பக்கம் சென்றால் தொலைக்காட்சிகளுக்குச் செல்ல முடியாது என்பதால் சென்னையில்தான் இருப்பார். இவருக்கும் சீட் வழங்கக்கூடாது என போராடுகிறார்கள்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்குள் நடந்து வரும் போராட்டம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு,// காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் தற்போது கொந்தளித்துக்கொண்டிருக்கின்ற உணர்வுகளை நான் அறிவேன். தொகுதி,வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை. நிறைய தவறு நடக்கிறது. தட்டிக்கேட்டேன். பதிலில்லை. தொண்டர்களின் இரத்தத்தை குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள் நியாயத்தின் குரலை செவிமடுக்கவில்லை.
நீண்டகாலம் கட்சிக்கு உழைத்த வெற்றி வாய்ப்புள்ள உண்மையான விசுவாசிகள் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சீட் பெறமுடியும் என்பது அக்கிரமம். காங்கிரஸ் கட்சி தொண்டர்களில் இரத்தத்திலும், வியர்வையிலும் உருவானது. இதை அழிக்க யாருக்கும் உரிமையில்லை.எனது தலைவர் Rahul Gandhi பணம் தான் பிரதானமென நினைத்திருந்தால் இன்று நான் எம் பி கிடையாது. இந்த தலைவர்கள் தொண்டர்களுக்கு மட்டுமல்ல தன்னை நம்பிய தலைவருக்கும் துரோகம் செய்கிறார்கள். நமது கட்சியையும், நமது தலைவரின் கௌரவத்தையும் தொண்டர்களாகிய நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.
உண்மையான கட்சி விசுவாசிகளுக்கு கண்முன்னால் இழைக்கப்படும் துரோகத்தை கண்டு எனது இரத்தம் கொதிக்கிறது. எனது யுத்தத்தை நான் தொடர்வேன். தொண்டர்களின் குரலாக தொடர்ந்து ஒலிப்பேன். நடப்பது நடக்கட்டும். எதிரிகளை மட்டுமல்ல துரோகிகளையும் எதிர்கொள்ளும் வலிமை நமக்கு உண்டு.// என்று குறிப்பிட்டுள்ளார்.
திமுகவிடம் 25 தொகுதிகளைப் பெற்று வேட்பாளர்களைக் கூட அறிவிக்க முடியாமல் காங்கிரஸ் கட்சி திணறி வருவது திமுகவை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.