உணர்வின் வெளிப்பாட்டில் நிகழும் வடிவமாய்க் கவிதைகள் இன்று காத்திரமானதாய் எழுந்து நடைபோடும் காலமிது. தோழில்நுட்பம் அறிவியல் என்று பல மைல்கல்லைத் தாண்டி வேகமாக பயணிக்கும் இன்றைய யதார்த்த உலகிலும், நெருக்கடி மிகுந்த இந்தத் தருணங்ளிலும் இயற்கை, சூழல், சமூகம் குறித்த குறிப்புகளோடு கவிஞர்கள் தமது அக்கறையையும், கருத்துக்களையும் பகிர்ந்த வண்ணமே உள்ளனர். நம் கண்முன் கரைந்து காணமல் போகும் கணப்பொழுதுகளைக் காப்பாற்றி மீண்டும் எம்முன் உயிர்பித்துத் தரும் சக்தி கவிஞர்களுக்குண்டு.
கவிதைக்கான பல வரையறைகள் விளக்கங்கள், கவிஞர்களாலும் விமர்சகர்களாலும் சொல்லப்பட்டிருக்கின்றன. கவிதைகள் தரமானதாக வளமானதாக இருக்க வேண்டும் என்றால் என்ன? கவிதையின் வளம் எப்படி எங்கே இருக்கின்றது? கவிதைகளில் வரும் கருத்துக்களாலா? சொற்களின் ஜாலங்களா? புரியாத புதிர்களாகத் தோற்றங்கொள்வதாலா அல்லது யதார்த்தங்களைப் பேசுவதாலா? வர்ணனைகளா? சீறுவதாலா? சீண்டுவதாலா? எது கவிதை? அனைத்திலும் சில வீதங்கள் கலந்து கவிதை வீசும் போதுதான் எம் நரம்புகளில் எங்கோ அதிர்வு ஏற்படுகிறதா?
நள்ளிரவுச் சூரிய தேசத்தில் சுருண்டோடும் புலம் பெயர்ந்தோரின் வாழ்க்கை நதியில் மூழ்கி எழும் இளஞ்சூரியக் கதிர்களாக இளவாலை விஜயேந்திரனின் கவிதைகள் தன் தரிசனம் தருகிறது. நோர்வே மண்ணின் வாழ்க்கை முறையை பல கோணங்களில் வெளிப்படுத்திச் செல்லும் அவருடைய கவிதைகள் அநேகம். தன் வாழ்நிலையில் பெற்ற அனுபவங்களையும் தன் சமூகத்தையும் தனது வரிகளில் மீட்டி எமக்குள் அதிர்வை ஏற்படுத்திப் போகின்றன.
சுதந்திர மனித ஆளுமை, வாழ்நிலை அபத்தங்கள், தாய்நிலம் சார்ந்த பாதிப்பு, தக்கவைத்துக்கொள்ள வேண்டிய நம்பிக்கை சார்ந்த உணர்வுகள் அவரது கவிதைகளில் அழுத்தம் பெறுகின்றன. மொழி ஆளுமையும் நேர்த்தியும் சீரான நதி போல வரிகள் நெடுக சலசலத்து ஓடுகிறது.
கவிஞருடைய அநேக கவிதைகள் 1987ல் இருந்து 1992 காலகட்டத்தில் எழுதப்பட்டவையே. கவிஞன் எழுதுவதும் வாசகன் புரிந்து கொள்வதும் முற்றிலும் வேறுபட்ட விடயங்களாகக்கூட இருக்கலாம். பின் வரும் கவிதையிலும் ஏன், எதுக்கு, என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை வாசகனிடமே விட்டுவிடுகிறார் கவிஞர். விரும்பியும் விரும்பாமலும் காலத்தின் கட்டாயத்தில் துப்பாக்கிகள் சுமந்தவர்களைப் பாடும் கவிதையில் உள்ள உண்மையான அழைப்பும் பிணைப்பும் வலியை உணரச்செய்கிறது.
கவிஞருடைய நிறமற்றுப் போன கனவு ஒன்று எழுந்து வந்து வாசகரின் இரவுகளை வலித்து வீங்கிய தன் விரல்களால் இப்படி எழுப்புகிறது.
இறந்துபோன மனிதர்கள்
துப்பாக்கியோடு திரிகிறார்கள்.
அழுதுகொண்டிருந்த வஜிரா
திடீரெனச் சரிக்கிறாள்.
கனவு அறுபடச்
சற்று முன்பாய்த்
தெளிவாகத் தெரிகிறது
அவளது கையிலும்
துப்பாக்கி.
கவிதைகள் என்பது உணர்ச்சிகளின் தங்குதடையற்ற பிரவாகம் என்றால், புலம் பெயர்ந்த தமிழனொருவனின் தனிமையின் சோகத்தை மட்டுமல்லாது தனது அடையாளத்தை, சுயத்தை இழந்த வாழ்க்கைமுறையை இதைவிடக் கச்சிதமாய் மொழிவது சாத்தியமா என்ன?
முகமுகம்
கால்நடைகள் போல் மனிதர்
வேகமுறும்
‘காள் யோஹான்’ வீதியிலே
சூடடிப்பு வயல்வெளியில்
கிளம்புகிற புழுதியெனச்
சத்தம் விழுங்குகிற காற்று
மார்பில் முகம் புதைத்துப்
பேசுதற்கு
என்னருகில் இன்று யாருமில்லை
உனது முகம் இல்லை
எனக்கும் முகம் இல்லை
நான் இழந்து போனவை என்று தனது வெள்ளை அறிக்கை ஒன்றில் இப்படிப் பட்டியலிடுகிறார். கவிதையின் வடிவத்தை, மொழியை மாற்றும் போது சுவை குறைபாடு இருக்கத்தான் செய்கிறது. கவித்துவத்தோடு கிடந்த பலவரிக் கவிதையைப் பிய்த்து பிராய்ந்த குற்ற உணர்வோடு நான் சில வரிகளை கீழே தருகிறேன்.
ஒரு துண்டு நிலம்
வேலியிடப்பட்ட கிணறு
தட்டிக் கூரைகளின் தொகுதி
ஊஞ்சலாடும் குருவி
காத்திருக்கிற கண்கள்
கேட்காமல் பெறுகின்ற திட்டுக்கள்
புழுதிமணம்
ஆலமரம்
இப்போது எஞ்சியதெல்லாம்
ஒரு பேனை
சில கிறுக்கல்கள்
இன்னொரு நாட்டின்
கடவுச்சீட்டு
தன் தேசம் கொடுத்த இயற்கையின் மீதும் இன்பத்தின் மீதும் கொண்ட பற்றுதலில் எடை குறைந்து நிற்கிறது பிறபொருள். இது வாழ்க்கையின் மீதான விமர்சனம் எனலாமோ?
யேசுநாதர்
சிலுவையில் அறையப்பட்டது போல்
உனது மாமனையும்
சுவரில் அறைந்தனர்
நானறிவேன்தான்
எனக்கவரைத் தெரியும்தான் ஆனாலும்
என்னைக் கேளாதே
நான் உனக்குப் பதில் சொன்னால்
எனது குருதியை
இன்னொரு சுவரில்
நீ காண நேரிடும்
நடைபெற்ற, (பெறும்) அபத்தங்களை உணரும் விதத்தில் இக்கவிதையில் ஒவ்வொரு வரியும் செதுக்கப்பட்டிருக்கிறது. எம்மையும் சிந்தனைச் சிலுவையில் ஓங்கி அறைந்துவிடுகிறது. பேச்சு சுதந்திரம் இழந்த ஒரு மனிதன் கவிஞனாக தன் சுதந்திர தாகத்தை தணிக்கும் மொழியை கையிலெடுத்த கவிதையாக அனைத்து ரகசியங்களும் வெளிச்சப்படுத்தப்படும் கவிதை இது.
மூளை கழற்றிய மனிதர்
மூளையை கழற்றி
ஒரு கரையில் வைத்துவிட்டு
முகம்கழுவிப் பின்வந்து
மூளை செருகிப் புறப்படுதல் வழமையெனில்
இந்த உலகம் எவ்வாறிருக்கும்
அமெரிக்க அதிபர்
முகங்கழுவும் வேளையெல்லாம் காவலுக்கு
முப்பதுபேர் செல்வார்கள்
கனத்த துவக்கோடு
முப்பது பேரும் இல்லாதுவிட்டாலும்
அந்த மூளையினைத் தூக்கி
யாரும் மாட்டார்கள் என்பதனை
முப்பதியொருவரும் அறியார்’
நுண்ணிய நகைச்சுவையுணர்வோடு எம் சில கேலிச்சித்திரங்களை கண்முண் இக்கவிதை கொண்டுவந்துவிடுகிறது. கிண்டல் மொழி கொண்டு எம்மை தன் கருத்துள் ஆழத் தீவிரப்படுத்துத்துவதை நாம் கவனித்தே ஆகவேண்டும்.
காணிநிலம் வேண்டும்
‘ஊரில் காணியோடும்
வீடு கிணற்றோடும்
இன்னொரு ‘ஜெயப்பிராதா’
அமைய வேண்டும்
சேர்த்த காசை
வீட்டுக்கனுப்பு முன்னம்’
அகதியாய் ஏதிலிகளாய் அலைந்து திரியும் பனித்தேசத்தில் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் கிடக்கும் ஏக்கங்களையும் ஏமாற்றங்களையும் வெளிப்படையாகவே பகிர்ந்து கொள்கிறார் கவிஞர்.
எனது வாசகம்
சல்மன் ருஷ்டி
உனக்கென்ன…
போலிஸ் காவல்
எனக்கு?
வாழ்க்கை முழுதும் நூல்களை எழுதிக் குவிப்பதைவிட உருப்படியான ஒரு படிமத்தை கொடுப்பதே சிறந்தது என்ற கருத்திற்கிணங்க எத்தனையோ வருடங்களாக எழுத்துலகத்தில் வாழ்ந்தாலும் கவிஞரின் ‘நிறமற்றுப்போன கனவுகள்’ கவிதைத் தொகுப்பின் கனம் அதிகம். அதைப் போலவே மேற்கண்ட வரிகளின் ஆழமும். இவருடை இந்தத் தொகுப்பில் வேறு பத்திரிக்கைகளில் வெளிவந்த பல நல்ல காத்திரமான கவிதைகள் சில இடம் பெறவில்லை.
இளவாலை விஜேந்திரனின் கவிதைகள் என்பது ஒரு காலகட்டத்தில் தன் செயற்பாட்டை நிறுத்திக் கொண்டது ஏன் என்ற கேள்வி அவர் கவிதைகளின்பால் காதல் கொண்டவர்களின் கேள்வியாக இன்னமும் இருக்கிறது.
வலைப்பின்னல்களென்று வந்த பின்னால் கணக்கிலடங்கா கவிஞர்கள் பிரசவதித்திருக்கிறார்கள். இந்த நெருக்கடியிலும் இளவாலை விஜயேந்திரனின் கவிதைக்கான இடம் இன்னமும் வரும் என்ற நம்பிக்கை சுமந்து காலியகவே காத்திருக்கிறது. ‘நிறமற்றுப்போன கனவுகள்’ இல் இடம்பெறாத இரு வரிகள்…
இந்தக் கைகளை
எந்தக் கங்கையில் கழுவுவேன்
சில வரிகளுக்குள் உலகத்தையே அடக்கிவிடும் வல்லமை கவிதைக்குண்டென்றால் இவருடைய இந்தக் கவிதை வரிளை எடுத்துச் சொல்லலாம்.
இக்கவிதை வரிகள் கவிஞரின் வீரியத்தை பலதேசம் வரை பரவச் செய்த வரிகள். கா. சிவதம்பி போன்றோர்களாலும் அதிகம் காவிச் செல்லப்பட்டு பேசப்பட்ட கவிதை. வெறும் இருவரிகளே என்ற போதும் வாசிக்கப்படாத மீதி முன் வரிகள் கோரமான ஓவியங்கள் சிலவற்றை வரைந்து போகிறது. வெகுசில சொற்களே மட்டுமே எழுந்து, எளிதில் அடங்கா மனஅலைகளை கிளப்பிவிடும் வல்லமை கொண்டதென குறிப்பதற்குச் சான்று.
Ilavalai Vijayendran’s verses have deeply touched my heart. My heart goes to the indescribable tragedy that has gripped the fate of Elam Tamils. I becken justice for the unfortunate populace left behind without a direction towards dawn.
Dont u have a proper picture of the poet, the still that appears does not make him a poet
நான் கவிதைகள் பெருமளவு வாசிக்கவிட்டாலும், சில கவிஞர்களின் கவிதை வரிகள் என்றும் மனதில் நிற்கும், அதில் இளவாலை விஜயேந்திரன், சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன். சுகன், போன்றோர்.
.இதில் இளவாலை விஜயேந்திரனின் கவிதைகளின் பல வரிகளை நான் நண்பர்களிடம் மீள ஒப்புவிப்பது உண்டு . என்னுடைய வீட்டுச் சுற்றுப்புறங்களிலும் பல பனை மரங்கள் நிற்கின்றது , அதில் பலரைப் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு கவிதையும் வரவில்லை . ஆனால் இந்தக் கவிஞர் எழுதுகிறார் . முழு வரியும் ஞாபகம் இல்லை
நினைவில் உள்ளவற்றை எழுதுகிறேன் கவிதா மிகுதியை நிரப்பிங்கள் ( 90 களில் என்பது ஞாபகம்)
…….
எங்கே போனார்கள்
……
பலகாலம் குண்டெறிந்தும்
தலை குனியாப்
பனைமரம் மீதேறிப்
பால் கறக்கும் முதியவரைக் கேட்டேன்
காசு வயல் கதிரறுக்கக்
கனடா போய்ச் சேர்ந்தார்கள்
………………
……
..
இதில் முழு வரிகளும் சரியாக ஞாபகம் இல்லாவிட்டாலும் இந்தச் சில வரிகளுக்குள்- தாயக வாழ்க்கை, எஞ்சியுள்ள மக்கள்,குண்டுகள் அழிக்கின்ற நிலமை,புகலிடத்தை பற்றிய மக்களின் எண்ணம், புகலிட மக்களின் வலி இன்னும் பல, வேறு ஒரு கவிஞரால் இவ்வளவு விடயதைச் சில வரிகளால் சொல்ல முடியுமா என்பது கேள்விக்குறியே.வியஜேந்திரன் உங்கள் இரசிகர்கள் பலர் , உங்கள் கவிதை வேண்டி நிற்கிறார்கள், எத்க்தனையோ சஞ்சிகைகளும் , வலைப்பக்கங்களும் உங்கள் கவிதயை எதிர்பார்த்திருக்கின்றன.உரிமையுடன் கேட்கிறொம் உடனே எழுதத் தொடங்குங்கள்