மனுகுலத்தின் வரலாறு என்பது பல்வேறுபட்ட போராட்டங்களுக்கும், முரண்பாடுகளுக்கும் மாற்றங்களுக்கும் மத்தியில் சென்று கொண்டிருக்கின்றது. மனிதர்கள் தாம் வாழும் காலகட்டத்தில் அம்முரண்பாடுகளையும் மாற்றங்களையும் எதிர்கொள்ளுகின்றனர். அவர்கள் அவ்வாறு எதிர்கொள்வதை மூன்று நிலைகளில் அவதானிக்கலாம்.
1. முதலாவது பிரிவினர் சூழலில் காணப்படும் பிரச்சினைகளையும், முரண்பாடுகளையும் கண்டு, இது இவ்வாறு தான் நடக்கும் என அடங்கி போதல். இங்கு ஊழ்வினை, விதி,மரபு, தர்மம், முன்னோர் வழி என்பவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. பெரும்பாலாக பொதுமக்களை இந்நிலைப்பாட்டில் காணலாம்.
2. இரண்டாவது பிரிவினர் சூழலில் காணப்படும் பிரச்சினைகள், முரண்பாடுகள் என்பவற்றிலிருந்து விடுபட்டு சமூகத்தை துறந்து போகின்றவர்கள். சமூகத்தை துறந்த தவம் செய்யும் ஞானியர், யோகிகள் முதலியோரை இந்நிலைப்பாட்டில் காணலாம்.
3. மூன்றாவது பிரிவினர் சமூகத்தின் பிரச்சினைகளையும் முரண்பாடுகளையும் கண்டு அவற்றினை எதிர்கொள்வதுடன் அவற்றுக்கான தீர்வினையும் முன்வைக்கின்றனர். தன்காலகட்டத்தில் காணப்படும் முற்போக்கு அல்லது பிற்போக்கு இயக்கங்களில் ஏதாவது ஒன்றினை பிரதிநிதித்துவப்படுத்தி நிற்பதுடன் சமூக மாற்றத்திற்காக உழககின்றவர்களாக காணப்படுவர். இந்நிலைப்பாட்டில் அரசியல்வாதி, இலக்கியகர்த்தார்க்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள் முதலியோரைக் காணலாம்.
ஒருவருடைய வாழ்க்கை அவரது குடும்ப மட்டத்துக்கு மேலாக சமூக வாழ்க்கையின் யாதேனும் ஒன்றின் மட்டத்தில் நிலைக்கப்படுகின்ற தேவை ஏற்பட்டுவிட்டதென்றால், அம்மனிதனின் வாழ்க்கை ஏதோ ஒரு வகையிலும் அளவிலும் சமூகப் பயன்பாடு மிக்கதாகின்றது. அவர்களின் சிந்தனையில் கொள்ள வேண்டியவற்றை தம் தேவைகளுக்கேற்ப கொள்ள முயற்சிக்கின்றார்கள். இதனால் அத்தகையோரின் வாழ்வும், பணியும் இன்றைய நிகழ்வாகின்றது.
கவிஞர் சி.வி வேலுப்பிள்ளை இவ்வாறு தான் இன்றைய நிகழ்வாகி விடுகிறார். இறந்த மனிதனின் வாழ்வும் நிறைகளும் இன்றைய பிரச்சினைகளோடு இயைபுடையதாகின்ற போது அவர்கள் பற்றிய தேடல், ஆய்வுகள், மதிப்பீடுகள் என்பன முக்கியத்துவம் உடையதாகின்றது. அவ்வடிப்படையில் கவிஞர் சி.வியைப் பொறுத்தவரையில் ஆசிரியர், பத்திரிகையாளர், அரசியல்வாதி, இலக்கியகர்த்தா என பல்துறை சார்ந்த ஆளுமைகளை உடையவர். இவ்வாளுமைகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஆய்வுக்குடட்படுத்துவதன் மூலம் காத்திரமான சில தகவல்களை வெளிக்கொணர முடியும் என்ற போதும் இவை அனைத்தும் ஒருங்கிணைந்ததாகவே சி.வி என்ற மனிதரின் சிந்தனைகள் வெளிப்பட்டுள்ளது எனலாம். அந்த வகையில் சி.வியின் இலக்கிய நோக்கிலும், போக்கிலும் இவ்வாளுமைகள் ஏதோ ஒரு வகையிலும் அளவிலும் தாக்கம் செலுத்தியுள்ளன.
சமூகம் பற்றிய அவரது கணிப்பு அக்கால சூழலிலான அவர் எதிர்கொண்ட விதம், அவரது சிந்தனைகள் என்பன அவரது இலக்கிய படைப்புக்களில் எவ்வாறு வெளிப்பட்டதென்பது இக்கட்டுரையில் ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றது.
மலையக சமூகம்
மலையக கலை இலக்கியம் குறித்து ஆய்வினை மேற்கொள்கின்ற போது அதற்கு களமாகவும், தளமாகவும் உள்ள மலையக சமூகவுருவாக்கம் பற்றிய தெளிவு அவசியமானதொன்றாகின்றது.
இலங்கையில் அந்நிய முதலாளித்துவம் நிலைகொள்ளத் தொடங்கியதும் அதன் உடன் விளைவாக பெருந்தோட்ட பயிர் செய்கை அறிமுகம் செய்யப்பட்டது. இப்பெருந்தோட்ட பயிர் செய்கையை செய்வதற்காக தென்னிந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட தொழிலாளர்களினதும், அவர்களுடன் இணைந்து வந்த வர்க்கமுமே மலையகத் தமிழர் என்று அழைக்கப்படுகின்றனர்.
தென்னிந்திய தமிழ் கிராம பின்னணியில் ஓர் நிலவுடமை சமூகமைப்பில் கட்டுண்டு கிடந்த இம்மக்கள் விவசாயிகளாகவும் விவசாய வர்த்தகர்ககளுக்குரிய சிந்தனைக் கொண்டவர்களாகவும் காணப்பட்டனர். அவர்கள் இங்கு கொண்டு வரப்பட்ட பின் ஓர் முதலாளித்துவ சமூக அமைப்பின் கீழ் (பெருந்தோட்டப் பயிர் செய்கையில்) பரந்துபட்ட தொழிலாள வர்க்கமாக மாற்றப்பட்டனர். அந்த வகையில் ஓர் கூட்டு வாழ்க்கை முறையினை கொண்டவர்களாக மாற்றப்பட்டனர். மலையகத்தில் நிலவும் இக்கூட்டு வாழ்க்கை முறையாக உழைப்புடன் அல்லது உற்பத்தியுடன் தம்மை சம்பந்தப்படுத்திக் nஅகாள்ளும் போது அதன் விளைப் பொருளால் பீறிடும் கலை இலக்கிய உணர்வுகளும் அக்கூட்டு வாழ்க்கையை பிரதிபலித்து நின்கின்றன.
இந்த அடிப்படையில் தான் மலையக இலக்கியம் இலங்கை தமிழ் இலக்கியத்தின் மிக பிரதான கூறாக் திகழ்கின்றது.
சி.வியின் காலத்தில் மலையக்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் (1934 – 1984)
சுமார் 50 ஆண்டு காலமாக (1934 – 1984) எழுத்துலகில் பணியாற்றிய சி.வியின் இலக்கிய நோக்கினை துணிபதற்கு அக்காலத்தில் இடம்பெற்ற சமூக, அரசியல், கலை, இலக்கிய நிகழ்வுகள் குறித்த தெளிவு அவசியமாகின்றது.
1939களில் மலையகத் தமிழர்களிடையே ஸ்தாபனப்பட வேண்டியதன் அவசியம் உணரப்பட்டு அதற்கான செயற்பாடுகள் இடம்பெற்றது. 1939இல் இலரங்கை இந்திய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. இது பெரும்பான்மை, தோட்டத் தொழிலாளர்களை கொண்டதாக இருந்தமையினால் ஓர் பலம் வாய்ந்த ஸ்தாபனாகக் காணப்பட்டது. இவ்வமைப்பு மலையக மக்களை ஸ்தாபனப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது அதற்கு எதிரான பல போராட்டங்கள் மலையகத்தில் இடம்பெற்றன. பல தொழிலாளர்களின் உயிர் தியாகங்களின் மீது கட்டியெழுப்பப்பட்ட ஓர் அமைப்பாகவே இது காணப்பட்டது.
1940இல் சம்பள உயர்வுகள் கோரிய போராட்டங்கள் மலையகத்தில் வலுப்பெற்றது. இவற்றில் முல்லோயா தோட்டப் போராட்டம் குறிப்பிடத்தக்கது. இப்போராட்டத்தில் கோவிந்தன் என்ற தொழிலாளி பொலீஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானார்.
இக்காலத்தில் மலையக மக்களிடையே மலையக தேசிய உணர்வும் வளர்ச்சியடையத் தொடங்கின. மலையகத் தமிழர் வளர்ந்து வரும் ஓர் தேசிய சிறுபான்மை இனத்துக்குரிய சமூகவுருவாக்கத்தை கொண்டிருப்பதனாலும், இவர்கள் சிங்கள தொழிலாளர்களுடன் இணைந்து உழைக்கும் மக்களின் நல்வாழ்வுக்கான போராட்டத்தை தொடரக் கூடியவர்களாக இரத்;ததனாலும் பேரினவாதிகளை அச்சங்கொள்ளச் செய்தது. இந்த அச்சத்தின் காரணமாக பேரினவதிகள் இம்மக்களை சிங்கள தொழிலாளர்களிலிருந்து பிரித்து வைக்கும் நடவடிக்கைகளிலும் அவர்களை நாடற்றவர்களாக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டனர். அதன் வெளிப்பாடாகவே இம்மக்களுக்கு எதிராக 1948ஆம் ஆண்டு குடியுரிமைப் பறிப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போது மலையக மக்களை பிரதி நிதித்துவப்படுத்திய அமைப்பாக இலங்கை இந்திய காங்கிரஸ் இருந்தது. குடியுரிமைப் பறிப்பு சட்டத்திற்கு எதிராக பரந்துபட்ட, போராட்டத்தை நடத்தவில்லை என்ற போதும் இதற்கு எதிரான போர்க்குணத்தைக் கொண்டிருந்தமை அதன் முற்போக்கான அம்சமாகும். இவ்வமைப்பில் சி.வி. யும் முக்கியமான உறுப்பினர்களில் ஒருவராக காணப்பட்டார்.
அவ்வாறே, குறைந்த தொழிலாளர்களை கொண்டு கூடிய லாபத்தை பெறும் நோக்குடனும், இம்மக்களின் சமூகவுருவாக்கத்தை சிதைக்கும் நோக்குடனும் கொண்டு வரப்பட்ட ஒப்பந்தமாக ஸ்ரீறிமா சாஸ்திரி ஒப்பந்தம் (1965) கொண்டு வரப்பட்டது. இந்த ஜீவ காருணியமற்ற செயலால் மலையக சமூகம் மேலும் வதைக்குள்ளாக்கப்பட்டதுடன் பல குடும்பங்கள் சிதைக்கப்பட்டன. கணவனைப் பிரிந்த மனைவி, நண்பர்களை பிரிந்து நண்பர்கள், காதலனை பிரிந்த காதலி என இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களை ஏற்றிச் சென்ற புகையிரதம் ‘அழுகை கோச்சி’ என அழைக்கப்பட்டது.
இலங்கை இந்திய காங்கிரஸ் பின்னர் இந்நாட்டு சூழலுக்கு ஏற்றவகையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸாக மற்றமடைந்தது. இவ்வமைப்பு மலையக மக்களை அதிலும் குறிப்பாக அதிகமான தொழிலாளர்களை அங்கத்தினராக கொண்டிருந்தமை அதன் பலமாக இருந்தது. ஆரம்பக் காலங்களில் மலையக மக்கள் தொடர்பான போராட்டங்களை உழகை;கும் மக்கள் சார்பாக முன் வைத்த போதினும் காலக் கிரமத்தில் அதன் போக்கு தொழிலாள வர்க்க நலனில் இருந்து அந்நியப்படுவதாக அமைந்தது. இதன் காரணமாக தொழிலாளர் பற்றிய மனித நேய உணர்வு கொண்டிருந்த திரு. வீ.கே. வெள்ளையன் போன்றோர் இவ்வியக்கத்திலிருந்து விலகி புதிய அமைப்பை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இந்தப் பின்னணியில் 1965 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதே தொழிலாளர் தேசிய சங்கம் என்ற அமைப்பாகும். இவ்வமைப்பு காலப்போக்கிலே சிதைந்து சின்னாப்பின்னமாகியது என்ற போதினும் மலையக மக்கள் தொடர்பில் மனிதாயம் சார்ந்த தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்ததில் இவ்வமைப்பிற்க முக்கிய இடமுண்டு.
சி.வி. வேலுப்பிள்ளை இவ்வமைப்பில் முக்கிய உறுப்பினராக இரந்தார் என்பதும் கவணத்தில் கொள்ளத்தக்கது.
இக்காலப்பகுதியில் மலையகத்தில் திரு. இளஞ்செழியன் தலமையிலான திராவிட முன்னேற்ற கழகம் தோன்றி வளர்ந்திருந்தது. இதன் காரணமாக மலையக மக்களிடையே தி.மு.க கருத்துக்கள் பரவி ஜனரஞ்சம் அடைந்திருந்தது. இதில் அங்கம் வகித்த பலர் பின்னாட்களில் இடதுசாரி இயக்கங்களில் இணைந்தனர். இது இதன் முற்போக்கான அம்சமாக காணப்பட்டது. மலையகத்தை அடித்தளமாக கொண்டு இவ்வியக்கம் செயற்பட்டதால் இந்திய திராவிட முன்னேற்ற கழக போக்கிலிருந்து அந்நியபட்டதாகவும் அதே சமயம் உழகை;கும் மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டதாகவும் அமைந்திருந்தது. இதன் பின்னணியில் தான் இப்போக்கு சார்ந்த பண்பாட்டு இயக்கங்களும் இலக்கியங்களும் தோன்றின. இவ்வியக்கம் மலையக மக்கள் தேசிய இனம் என்ற சிந்தனைப் போக்கை அங்கிகரித்ததுடன் அதற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களையும் முன்வைத்தது.
இன்னொரு புறத்தில் இதேகாலத்தில் பண்பாட்டு ரீதியாக கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகள் முன் எடுக்கப்பட்டன. மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்துக்குக் கூடாக மலையக இலக்கியம் வளர்க்கப்பட்டது. அவ்வமைப்பின் தலைமை, பாட்டாளி வர்க்க இலக்கியம் என்பதை அதன் கருத்தியலாக ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் அதனால் தொழிலாளர்களின் பிரச்சினைகளை இலக்கிய பரப்பில் நிராகரிக்க முடியவில்லை. எனவே, மனிதாபிமான அடிப்படையிலான இலக்கிய நடவடிக்கைகளே இவர்களில் முதன்மை பெற்றுக் காணப்பட்டன.
இதே காலச் சூழலில் திரு.சண்முதாசன் தலைமையிலான இடது சாரி இயக்கமானது புதியதோர் பரிணாமத்தை எட்டியிருந்தது. இவ்வியக்கம் மலையக மக்களிடையே வேர் கொண்டு கிளை பரப்பிய போது தொழிலாளர்கள், புத்திஜீவிகள், மாணவர்களென பல்வேறுபட்ட ஆளுமைகளை தன் நோக்கி ஆகர்ச்சித்திருந்தது. உழைக்கும் மக்களின் நல்வாழ்வுக்கான போராட்ட முனைப்பை இவ்வியக்கம் உணர்த்தி இருந்தது. இக்காலக்கட்டத்தில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்கு மடக்கும்பர, மேபீல்ட், பதுளை கீனாகலை ஆகிய இடங்களில் இடம்பெற்ற போராட்டங்களை உதாரணமாகக் கூறுலாம்.
மலையக தமிழர் ஓரு சமூகமாக கூடி வாழ்வதனை சிதைக்கும் முகமாக பல குடியேற்றவாதத் திட்டங்களை அரசு அவ்வப்போது மேற்கொண்டு வந்தள்ளது. 1977ம் ஆண்டு நுவரெலியா மஸ்கெலியா தொகுதியில் 700 ஏக்கர் காணியை சுவீகரித்து தமது குடியேற்றவாத நடவடிக்கையை மேற்கொள்ள அரசு முயற்சித்தது.
இதற்கு எதிரான போராட்டம் கிளர்ந்ததுடன் இப்போராட்டத்தில் டெவன் தோட்டத்தைச் சேர்ந்த சிவனு லட்சுமணன் என்ற இளைஞர் பலியானார். இதனை எதிர்த்து மலையகத்தில் தொழிலாளர்கள் புத்திஜீவிகள் பாடசாலை மாணவர்கள் என பலத்தரப்பட்டோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டமை இப்போராட்டத்திற்கான பலமான அம்சமாகும்.
தொடர்ந்து வந்ந காலப்பகுதிகளில் கேவலமானதோர் அரசியல் பின்னணியில் மோசமான இன வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. முலையக தமிழர்கள் தங்களது உடமைகளை இழந்ததுடன் தமது கலாசார பண்பாட்டுப் பராம்பரியங்களையும் இழந்தனர். பலர் புலம் பெயர்ந்து இந்தியாவிற்கு சென்றனர். அந்நாட்டிலும் இன்று வரை தமது இருப்பையும் அடையாளங்களையும் இழந்து பல்வேறு விதமான அடக்கு முறைகளுக்கும் சுரண்டலுக்கும் உட்பட்டு வருகின்றனர். இவ்வகையில் உடமை இழப்பு, புலம் பெயர்வு என்பன ஒரு சமூதாயத்தின் இருப்பு என்றவகையில் பல்வேறுவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தது.
சி.வி.யின் எழுத்துக்கள்
சி.வி.யை நாம் புரிந்து கொள்வதற்கும் ஆராச்சிக்குட்படுத்தவும் எம் முன்னுள்ளவை அவரது எழுத்துக்கள் தான். அவர் ஆற்றிய சொற்பொழிவுகள், அவரது கடிதங்கள், குறிப்புக்கள்,; நூல்வடிவம் பெறாத கட்டுரைகள்,ஆக்கப் படைப்புக்கள், வரைந்த கேலிச் சித்திரங்கள் என்பன முறையாக கிடைத்திருப்பின் அவர் குறித்த பூரணத்துவமான ஆய்வினை வெளிக்கொணர முடியும். மேற்குறிப்பிட்ட சில விடயங்கள் அவர் பற்றிய ஆய்வுகளுக்கு தடையாக உள்ள காரணிகளாகும். எனினும் கிடைக்கப்பெற்ற சில ஆதாரங்களை ஒழுங்குபடுத்தி அவரது சமூக நோக்கு பற்றிய ஆய்வினை மேற்கொள்வோம். அவ்வகையில் இக்கட்டுரை ஓர் ஆரம்ப முயற்சியே தவிர முடிந்த முடிவல்ல என்பதையும் கூறவிழைகின்றேன்.
ஆய்வு வசதிக்காக அவரது எழுத்துக்களை பின்வருமாறு வகைப்படுத்திக் கொள்வது சிறப்பான ஒன்றாகும்.
1. நாட்டார் பாடல்கள் சேகரிப்பு
2. கவிதை
3. நாவல்
4. பிற முயற்சிகள்
நாட்டார் பாடல்கள் சேகரிப்பு
சி.வி. பெரியாங்கங்காணியான தனது தாத்தாவின் வீட்டில் வசித்ததனால் நாட்டார் பாடல்களை ரசிக்கவும், அவற்றினை சேகரிப்பதற்குமான சூழ்நிலை கிடைத்தது. தோட்டத் தொழிலாளர்கள் விசேட தினங்களில் பெரிய கங்காணியின் வீட்டிற்கு சென்று நாட்டார் பாடல்களை பாடி பரிசு பெற்றனர். மலையக நாட்டார் பாடல்கள் தொடர்பான சேகரிப்பு, ஆய்வு என்பன ஆங்காங்கே திட்டுக்களாகவும், தீவுகளாகவும் இடம்பெற்ற போதிலும் அவை முழுமை அடையவில்லை எனலாம். சி.வி வேலுப்பிள்ளை அவர்கள் மலையக நாட்டார் பாடல்கள் சிலவற்றை சேகரித்து மலைநாட்டு மக்கள் பாடல்கள் என்ற தலைப்பில் வெளியிட்டமை இத்துறையில் குறிப்பிடத்தக்க சாதனையாக அமைந்து காணப்படுகிறது.
உழைக்கும் மக்களின் நல்வாழ்வுக்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு இம்மக்களின் நம்பிக்கைகள், விருப்பு-வெறுப்புக்கள், மகிழ்ச்சி, துன்பம், அவர் தம் உறுதிப்பாடு என்பவற்றை பிரதிபலிக்கும் நாட்டார் பாடல்கள் தொடர்பான சேகரிப்பு, ஆய்வு என்பன முக்கியத்துவமுடையவையாகின்றன. அத்துடன் இன்றைய மக்கள் இலக்கியம் யாவும் மக்களிடம் காணப்படும் நாட்டார் வழக்காறுகளும், உரையாடல்களும் வளமிக்க மொழியில் பட்டைத் தீட்டப்பட்டே உருவாக்கமடைகின்றன. இத்தகைய பின்னணியில் தான் பாரதியின் கார்க்கியின் படைப்புக்கள் உருவாக்கமடைந்தன.
சமூகவுணர்வுடனும் நாட்டார் பாடல்கள் குறித்த சரியான பார்வையுடனும் சி.வி இம்முயற்சியினை மேற்கொண்டுள்ளார். இவருக்குப் பின்னர் மலையக நாட்டார் பாடல்கள் சேகரிப்பில் ஓர் நீண்ட இடைவெளி காணப்படுகின்றது.
இத்தொகுப்பில் அடங்கிய பாடல்கள் அனைத்தும் அவருக்கு மனப்பாடம். மேடைகளில் பேசும் போதும் சாதாரண உரையாடல்களின் போதும் இந்நாட்டார் பாடல்களை மேற்கொள் காட்டியே பேசுவார். அவர் உழைக்கும் மக்களை நேசித்தவர். இதன் வெளிப்பாடாகவே இந்நாட்டார் பாடல்களையும் நேசித்தார். (தகவல் திருமதி. தவமணி ஜெயராமன்) சி.வி.யின் இம்முயற்சி மலையக இலக்கியத்திற்கு இவர் ஆற்றிய முக்கிய பங்களிப்பாக அமைந்து காணப்படுகின்றது.
மிக அண்மையில் மு.சிவலிங்கம் சி;வி;யின் தொகுப்பில் அடங்காத சில மலையக நாட்டடார் பாடல்களை தொகுத்து நுலால வெளியிட்டார். இந்நூல் மலையக நாட்டர் இலக்கியத்திற்கான புது வரவாக காணப்பட்ட போதினும் அவற்றில் சில விரசம் மிக்கப் பாடல்களும் தொகுக்கப்பட்டுள்ளன. இப்பாடல்கள்யெல்லாம் சி.வி.க்கு தெரியாது என்பதல்ல. ஆனால் சி.வி. மிக நிதானத்துடனும் சமுதாயப் பார்வையுடனும் தொகுத்தமையினாலேயே அவற்றை தமது தொகுப்பில் தவித்திருக்கின்றார் என கருத இடமுண்டு.
கவிதை
கவிஞரின் ஆளுமையை மதிப்பிடுவதற்கு அவரது கவிதைப் படைப்புக்கள் மிக முக்கியமானவையாகும். கவிதைத்துறைதான் அவரை இலக்கிய உலகில் கணிப்புக்குரியவராக்கியது. இவரது கவித்துவ ஆளுமையை பத்மினிஜிலி, விஸ்மாஜினி வேஃவேயர் வழிப்போக்கன் ஆகிய கவிதை நாடகங்களின் மூலமாக மதிப்பிடலாம். எனினும் அவரது கவித்துவ ஆளுமையின் உன்னத அறுவடையாக அமைந்தது ஐn ஊநலடழn வுநய புயசனநn என்ற தொகுப்பாகும். ஏனைய கவிப்படைப்புக்கள் யாவும் இத்தொகுப்பிற்கான படிக்கற்கள் எனக் கூறின் அது மிகையாகாது. இத்தொகுப்பு முதலில் ரசிய மொழியிலும், பின்னர் தமிழ் மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டது. சி.வி கடைசி வரை தமிழில் கவிதை எழுதவில்லை. அவர் ஆங்கில கல்வியில் கொண்டிருந்த ஈடுபாடும் புலமைத்துவமும் இதற்கு காரணமமாக அமைந்திருக்கலாம்;. முதலில் இத்தொகுப்பின் மொழிபெயர்ப்பு பற்றி நோக்கி பின்னர் கவிதை பற்றி பற்றி நோக்குதல் பயன்மிக்க ஒன்றாகும்.
சி.வி. வேலுப்பிள்ளையின் படைப்புகளில் In Ceylon Tea Garden என்ற கவிதைத் தொகுப்பும் ,Born to Labour விவரண தொகுப்பும் முக்கியமானவையாகும். சி.வி. வேலுப்பிள்ளை அவர்கள் கடைசிவரை தமிழில் கவிதை எழுதவில்லை. அவரது ஆங்கில கவி வரிகள் இவ்வாறு பிரவாகம் கொண்டிருந்தன.
“To the tom – toms throp
The clawn lies startled
Trembling upon the tea
The last dew bead is fresh
Before the moring treads
On this mating hour
Where suffering and pain
Decay and death are one
In the breathing of men”
சக்தி பாலையாவின் மொழிபெயரப்;பு இவ்வாறு அமைந்துக் காணப்படுகின்றது.
பேரிகை கொட்டெழு
பேரொலித் துடிப்பும்
புலர்த லுணர்த்தப்
புரளுமாம் வைகறை
பாரிலே கதிரொலி
பன்நடப் பயிலுமுன்
பசுந்தளிர் தேயிலை
பள்ளி கொள் தூய
எஞ்சிய முத்தாம்
எழில் மிளர் பனித்துளி
எழுலான் இறைக்கும்
இதலார்ப் பணமுற
பஞ்சலம் வேதனை
சாதல், அழிவு
சகலமும் ஒன்றென
சாந்தல் வேளைக்கண்
(இலங்கை தேயிலைத் தோட்டத்திலே பக்கம் 01)
இம்மொழிப்பெயர்ப்பில் சி.வி.யின் கவிதைகளில் காணப்பட்ட இயல்பான மண்வாசைன பண்பும் அவற்றோடு இணைந்த சொற்களும் காணப்படவில்லை. சத்தி .பாலையாவின் கவிதை தொகுப்பினை மொழிபெயரப்;பு தொகுப்பு எனக்கூறுவதை விட தழுவல் எனக் கூறுவதே பொருந்தும்.சி.வி அவர்கள் அரசியல் வாதியாக தொழிற்சங்கவாதியாக இருந்தவர். இலக்கிய தளத்தில் இயங்கிய சக்தி பாலையா இத்தகைய உணர்வுகளை எவ்வாறு எதிர் கொண்டார் என்பதும் சுவாரசியமானதோர் வினாதான். நந்தலாலா சஞ்சிகை குழுவினரும் சி. வியின் கவிதை மொழிபெயர்ப்பு முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். அம் மொழிப்பெயர்ப்பு வரிகள் பின்வருமாறு அமைந்துக் காணப்படுகின்றது.
‘பிரட்டின் அதிர்வில்
விடியலே அதிர்ந்துப்போய்
தேயிலை மீது
சரிந்து கிடந்தது
விடியல் பொழுதின்
ஆக்கிரமிப்பின் முன்னர்
இறுதியாய் சொட்டும் – இப்
பனித்துளி புதிது.
பொருந்தும் இந்த
பொழுதின் கணத்தில் தான்
துயரும் நோவும்
நசிவும் இழப்பும்
இம் மக்களின் மூச்சில்
இவ்வாழ்கையின் முகிழ்ப்பின்
அம்சம் ஒன்றென
ஆகிப் போயின
இம்மொழிபெயரப்;பு உள்ளடகத்திலும் உருவகத்திலும் சிதைவடையாது காணப்படுகின்றது. முல்லியப்பு சந்தி திலகர் தொகுத்து வெயிட்டுள்ள சி. வுp. யின் In Ceylon Tea Garden தொகுப்பு (ஆங்கிலத்தில் சி.வி. எழுதிய ஆங்கில கவிதைகளையும் மொழிப்பெயர்ப்பையும் சேர்த்து) இத்தகைய ஆய்வுகளுக்கு உந்து சக்தியாக அமைந்துள்ளது.
சி.வி.யின் படைப்புகள் மலையக மக்களின் பிரச்சினைளை உள்நின்று நோக்குவதுடன், மலையக வாழ்க்கை முறையின் நடப்பியலை, புரிந்து கொண்டு நியாயத்தின் பக்கம் நின்று சிறுகதை எழுத முனைந்தவர் அவர். பெரும்பாலும் இவரது கவிதைகள் நாட்டார் இலக்கியத்தின் இன்னோரு வடிவமாக அமைந்துக் காணப்படுகின்றது. இத்தொகுப்பில் அடங்கியுள்ள கவிதைகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது மலையக கலாசார தளத்தையும் மக்களின் உணர்வுகளையும் ஒன்றாக இணைத்து காதலிக்கின்ற பண்பினை நாம் சி.வி.யில் காணலாம்.
நாவல்
சி.வியில் எழுதிய நாவல்களில் எல்லைப்புறம், பார்வதி, வளமற்ற வாழ்வு, காதல் சித்திரம், வீடற்றவன், இனிப்படமாட்டேன். ஆகிய நாவல்கள் நேரடியாக தமிழில் எழுதியவை ஏனையவை யாவும் பொன் கிருஷ்ணன் சுவாமியால் தமிழில் மொழி பெயரப்;பு செய்யப்பட்டவை.
இவற்றில் காதல் சித்திரம், வீடற்றவன், இனிப்படமாட்டேன், வாழ்வற்ற வாழ்வு ஆகிய நாவல்கள் நூலுரு பெற்று விட்டன. ஏனையவை யாவும் நூலுருப் பெறல் இன்றியமையாத ஒன்றாகும். இவரது நாவல்களில் வீடற்றவன், இனிப்படமாட்டேன், வாழ்வற்ற வாழ்வு ஆகிய நாவல்கள் எனது பார்வைக்கு கிட்டியதால் இந்நாவல்களில் அவரது உலக நோக்கு எவ்வாறு வெளிப்படுகின்றது என்பதை ஆராய முற்படுகின்றேன்.
வீடற்றவன் இவரது மிக முக்கிய நாவல்களில் ஒன்றாகும். மலையக மக்களிடையே தொழிற்சங்க அமைப்பை உருவாக்குதல், அவற்றினை ஸ்தானப்படுத்துதலின் போது ஏற்படுகின்ற இடர்பாடுகள் என்பவற்றை சித்திரிக்கும் நாவலாக அமைந்து காணப்படுகின்றது.
நாவல் தோற்றம் பெற்ற காலத்தில் (1960களில்) மலையக மக்களிடையே வீறு கொண்டெழுந்த எழுச்சிகள், போராட்டங்கள் போன்றவற்றை இந்நாவல் உள்வாங்க தவறி விடுகின்றது. மாறாக கோர்ட், வழக்கு முதலியவற்றின் மூலமாக இம்மக்களுக்கு விடுதலை வாங்கி கொடுக்கலாம் என்ற பார்வையை முன்வைக்கின்றது. இப்போக்கு அக்காலத்தில் மிதவாத இயக்கம் மேற்கொண்டிருந்த ஓர் நடவடிக்கையாகக் காணப்பட்டது. அந்தவகையில் ஒரு போக்கினை சுட்டிக் காட்டுகின்ற நாவலாசிரியரின் அதன் மறுபக்கத்தை சுட்டிக் காட்டத் தவறி விடுகின்றார்.
நாவலின் கதாநாயகன் இராமலிங்கம் இறுதியில் பலாங்கொடை காட்டில் கடவுளே எனக்கு போகும் வழி தெரியவில்லையே|| என புலம்புவது இந்நாவலின் சோர்வு வாதத்திற்கு தக்க எடுத்துக்காட்டாகும்.
இனிப்படமாட்டேன் இவரது இறுதி நாவலாகும். 1984இல் வெளிவந்தது. இந்நாவலையும் சி.வியின் வாழ்க்கையையும் உற்று நோக்குகின்றவர்களுக்கு இது ஓர் சுயசரிதையாக அமைந்த நாவல் என்பது புரியும். தமிழர் ஒருவர் சிங்கள பெண்ணை மணம் முடித்து வாழுகின்ற போது ஏற்படுகின்ற முரணையும் அவ்விருவருக்கும் பிறக்கும் மகனுக்கு சமூகத்தில் ஏற்படுகின்ற முரணையும் சித்திரிப்பதாக இந்நாவல் அமைகின்றது. குறிப்பாக 80களில் தோற்றம் பெற்ற இந்த நாவல் இக்காலகட்டத்தில் மலையகத்தில் தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனவன்முறைகளை சிறப்பாக சித்தரிக்கின்றது என்ற போதினும் அதன் மறுப்பறமாக மலையக சமூக இருப்புக்கான உணர்வும் எவவாறு நிலைக்கொள்ளப்படுகின்றது என்பதை வெளிக் கொணரத்தவறிவிடுகின்றது. இதனை இக்காலக்கட்டத்தில் வெளிவந்த ஆனந்த ராகவனின் நண்பனே என்றும் உன் நினைவாக என்ற சிறுகதை மிக நேர்த்தியுடன் சித்தரிக்கின்றது எனலாம்.
சி.வியின் படைப்புக்கள் அனைத்திலும் சிலாகித்துப் பேசப்படுகின்றதொரு விடயம் மலையக மண்ணின் மனம் கமழும் பேச்சு வழக்கு முறையை தனது படைப்புக்களில் சிறப்பாக கையாண்டுள்ளமையாகும். இவர் நாவல் எழுதத் தொடங்கிய காலக்கட்டத்தில் தேசிய இலக்கிய கோட்பாடு, தேசிய இயக்கம் என்பன தத்துவார்த்தப் போராட்டங்களாக முன்வைக்கப்பட்டுள்ளன. இச்சந்தர்ப்பத்தில் மொழி தூய்மை வாதத்திற்கு எதிராக பேச்சு மொழி இலக்கியத்தில் கையாளப்பட்டது.
இத்தகைய காலப் பின்புலத்தில் சி.வியின் படைப்புக்களிலும், இத்தகைய மக்கள் சார்பு பண்பினை ஆதரித்தமை அவரது எழுத்துருக்களின் தனிச் சிறப்பாகும். இத்தகைய பேச்சு மொழியினை கையாண்டமை அவரது படைப்புக்களை அழகுப்படுத்தியது எனலாம்.
சி.வி.யின் பிற முயற்சிகள்
மேற்குறிப்பிட்டவை தவிர சி.வியின் இலக்கிய நோக்கினை மதிப்பிடுவதற்கு ‘முதற்படி’ (கட்டுரை தொகுப்பு) ‘உழைக்கப் பிறந்தவர்கள’; (விவரணத்தைத் தொகுப்பு) ஆகிய நூல்களும், அவ்வப்போது பத்திரிகைகள் வரைந்து வெளியிட்ட கேலிச் சித்திரங்களும் முக்கியமானவையகளாகும்.
முதற்படி என்ற நூல் மலையகத் தமிழர் பற்றிக் கூறுகின்ற சிறிய கட்டுரைத் தொகுதியாகும். முலையகத் தமிழர்களிடையே இலங்கை இந்திய காங்கிரஸ் உருவாகியது பற்றியும் அது இம்மக்கள் குறித்து மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றியும் குறிப்பிடுகின்றது. இனக் குரோதமின்றி சிங்கள மக்களுடன் ஜக்கியப்பட வேண்டும் என்ற உணர்வை வெளிப்படுத்துகின்ற சி.வி காலனித்துவ எதிர்ப்பு கொண்டவராய் காணப்படுகிறார் என்பதை பின்வரும் வரிகள் எடுத்துக் காட்டுகின்றன.
ஆரிய திராவிடர்களாகிய நாம் சிங்கள சகொதரர்களுட்கு ஆங்கில மோகம் தனியலாயிற்று அறிவு புலர்ந்தது||
நாமிருக்கும் நாடு நமதென்ப
தறிந்தோம் – இது
நமக்கே யுரிமையா மென்பதறிர்தோம்
என்ற நாதத்தின் எதிரொலி இங்கு பிறந்தது. என்றாலும் ஆங்கில மோகம் நம் சுய அறிவைக் கொலை செய்வது வழக்கம். இதிலிருந்து சுகமடைவது சற்று கஷ்டமாவதால் சிங்களவர்களுக்கு வாழ்க்கைப் போராட்டத்தில் அயர்வும், ஏமாற்றமும் ஏற்பட்டது. இது மட்டுமா? மூலதனமும் வியாபாரமும் இந்திய வர்த்தகர்களிடம் பொன் விளையும் இறப்பர் – தேயிலை தோட்டங்களின் வெள்ளையர் கையில் அந்நியர் இலங்கையில் நடத்திவரும் சுரண்டல் கைங்கரியத்திற்கு ஆயுதமாக இருப்பவர்கள் இந்திய தொழிலாளர்கள் என்பது தான் இவரின் அபிப்பிராயம். மற்றொரு புறத்தில் யாழ்ப்பாணத் தமிழர்கள் அயர்வு தெரியாத் திறமையால் கோட்டை பிடிப்பது போல எல்லா உத்தியோகங்களையும் கவர்ந்து வந்ததிலிருந்து சிங்களவர்கள் மனம் வெதும்பி இருக்க வேண்டும். இந்நிலையில் நாமிருந்தால் எப்படி நடந்து கொண்டிருப்போம் என்பதற்கு சிங்களவர்கள் இந்தியராக இருந்தால் உடன் பதில் சொல்வார்கள். (முதற்படி பக். 10)
இதன்மூலம் சிங்கள மக்களுக்கு இம்மக்களின் நிலைமைகளை எடுத்துத் தெளிவுபடுத்தி ஜக்கியப்பட வேண்டியதால் ஆரியரும் காலனித்துவத்திற்கு எதிராக போராட வேண்டியதன் அவசியம் இரத்தின சுருக்கமாக எடுத்துக் காட்டப்படுகின்றது.
சி.வி வழிப்போக்கன் என்ற புனைபெயரில் எழுதிய தேயிலைத் தோட்டத்திலே என்ற தொடர் சித்திரத்தில் தான் மலைநாடு என்ற சொல் முதன் முதலாக பயன்படுத்தப்படுகின்றது என சிலர் கூறுகின்றனர். இக கூற்றில் பல வாதபிரதிவாதங்கள் காணப்பட்ட போதும் அவர் மலையகம் என்ற சொல்லை வெறும் புவியியல் அர்த்தத்தில் மாத்திரம் பயன்படத்தியவர் அல்லர். அதன் உள்ளார்ந்த அர்த்தத்தையும் உணர்ந்தே பயன்படுத்தியுள்ளார். எடுத்துக்காட்டாக:
கூனியடிச்ச மலை
கோப்பிக் கன்று போட்ட மலை
அண்ணனைத் தோத்த மலை
அந்தா தெரியுதடி||
என்ற மலையக நாட்டார் பாடலுக்கு கவிஞர் இவ்வாறு விளக்கம் பிரதானமானது.
காடுகளை அழித்து புதிய மலைகளை உருவாக்கும் போது சாவு என்பது சர்வ சகஜமானது. மலையகத்தின் ஒவ்வொரும் நிச்சயம் சிரம் தாழ்த்தி மரியாதை செலுத்த தக்க யாரோ ஒரு தங்கையின் அண்ணனைத் தோத்த மலைகளாதானிருக்கும். மலையகத்தின் மலைகள் மீது உங்களுக்கு ஏறிடும் சந்தர்ப்பங்கள் கிடைத்தால் உங்கள் காலடிகளை கவனமாக எடுத்து வையுங்கள். ஏனெனில் அவை அண்ணனைத் தோத்த மலைகள் (மலைநாட்டு மக்கள் பாடல்கள் பக் – 96)
இம்மக்கள் எங்கிருந்தோ வந்து தயாராக இருந்த பொருளாதாரத்தை சூரையாடியவர்கள் அல்லர். மாறாக தமது உதிரத்தையும், உயிரையும் வார்த்து அந்த அத்திவாரத்தில் கட்டியெழுப்பப்பட்டதே மலையக பொருளாதாரமாகும்.
ஒரு புறமான சமூகவுருவாக்கமும் மறுபுறமான ஒடுக்குமுறைகளும் இம்மக்கள் வளர்ந்து வரும் ஓர் தேசிய சிறுபான்மை இனம் என்ற உணர்வை ஏற்படுத்தியது. இந்த அர்த்தத்தில் தான் மலையகம், மலைநாடு என்ற பதங்கள் பிரஞ்சை பெற்றன. இந்த அர்த்தத்தை உணர்ந்த சி.வி மலைநாடு என்ற பதத்தை பயன்படுத்தியுள்ளார் என்பதில் இருநிலைப்பட்ட கருத்துக்களுக்கு இடமில்லை.
சி.வியின் முக்கியமாக பிறிதொரு நூல் டீழசn வழ டுயடிழரச என்ற விவரணத் தொகுப்பாகும். இதனை மாவெலி பத்திரிக்கையில் திரு.பி.ஏ. செபஸ்டின் தமிழில் மொழிபெயர்த்து தொடராக வெளியிட்டார். குழந்தை பிறப்பு முதல் இம்மக்களின் வாழ்க்கை, மக்களிடையே காணப்பட்ட கலை, கலாசார நிகழ்வுகள், அவர்களுடன் உறவு கொண்ட மனிதர்கள், உறவுத்தன்மை என்பன சிறப்பாக சித்திரிக்கப்படுகின்றன. ஆங்கிலத்திலும், மலையக மண்வாசனை மிக்க நடையை சி.வி கையாண்டுள்ளார். மலையக மக்களின் வாழ்க்கையை இலக்கியமாக்கினார் என்பதற்கு இவரது இந்நூல் சிறந்த சான்றாகும். இயற்கையையும், மனிதவுணர்வுகளையும் ஒன்றாக காதலிக்கின்ற போக்கினை இந்நூலில் காணலாம். அந்த வகையில் ஐn ஊநலடழளெ வுநய புயசனநn என்ற கவிதை தொகுப்பிணை போல இந்நூலும் முக்கியத்துவமும் சிறப்பும் உடையதாகும். மலையக மக்களின் துன்பம் தோய்ந்த வரலாற்றினை எடுத்துக் கூறும் இவரின் பிறிதொரு நூல் நாடற்றவர் கதை|| ஆகும்.
சி.வியின் இலக்கிய நோக்கு
அவரது இலக்கிய நோக்கு அவரது காலத்தில் எவ்வாறு வெளிப்பட்டது என்பதனை நோக்குவதற்கு அவரது காலத்தில் தோற்றம் பெற்ற கவிதை சில வரிகளை இங்கொருமுறைக் கறித்துக் காட்டவேண்டியது அவசியமானதொன்றாகும். (ஜில். சுல்தான் பாடியது)
தண்டுக்கலா தோட்டத்திலே திண்டு
முண்டு கணக்கப்பிள்ளை
துண்டு துண்டா வெட்டிடாங்க
யாரோ தாங்க
கண்ட துண்டமாக போச்சிங்க
கழுத்து முண்டம்
கைலாசம் சேர்ந்திருச்சிங்க||
…..
கூலிக்காரன் வாயில் மண்ணைப்
போடவுமே அஞ்சமாட்டான்
சக்சைக் கட்டி துரைமாருக்கு
அச்சமுடன் தான் நடப்பான்.
60களில் மலையகத்தில் மக்கள் இயக்கம் புதிய பரிணாமத்தை எட்டியதுடன் அது அம்மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடத் தூண்டியது. அதன் முதல் வெளிப்பாடாக தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக மற்றும் தொழிலாள பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய கணக்குப்பிள்ளைமார்கள், கங்காணிகள், கண்டக்கையாக்கள் ஆகியோரின் கொடுமைகளை எதிர்த்துப் போராடினர். தொழிலாளர்களுக்கு எதிராக நின்ற தோட்ட உத்தியோகத்தர்கள் (குறிப்பாக கணக்குபிள்ளைமார்கள்) பலரின் கைகள் வெட்டப்பட்டன. பலர் வெட்டிக் கொல்லப்பட்டனர். இது அக்காலக்கட்டத்தில் ஏற்பட்டிருந்த அரசியல் கொந்தளிப்பையும் எழுச்சியையும் காட்டுகின்றது.
இத்தகைய போராட்டங்கள், எழுச்சிகள் என்பன சி.வ.pயின் படைப்புகளில் காணமுடியாதிருப்பது அவரது உலக நோக்கின் துரதிஷ்டவசமே ஆகும். அவரது உலக நோக்கு குறித்து மதிப்பீடு செய்வதற்கு ஹார்க்னெஸ் எனும் பெண்மணி (ஊவைல புசைட) என்ற நாவலை வாசித்து விட்டு ஏங்கல்ஸ் எழுதிய குறிப்பினை இவ்விடத்தில் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
‘விமர்சனம் என்று நான் கூற வேண்டியது எதுவென்றால் கதை போதியளவிற்கு யாதார்த்த பூர்வமானதாக இல்லை என்பது தான். என்னைப் பொறுத்தவரையில் யதார்த்த வாதம் என்பது உண்மையான விபரங்களை தருவது மட்டுமல்லாது வகை மாதிரியான கதாபாத்திரங்களை மறுசிருஷ்டி செய்வதாகும். நீங்கள் படைத்துள்ள பாத்திரங்கள் போதியளவிற்கு வகைமாதிரியானவையாக உள்ளன. ஆனால், அவர்களை சூழ்ந்துள்ள, இவர்களை இயக்குகின்ற சூழல்கள் அந்தளவிற்கு வகைமாதிரியானவையாக அமையவில்லை. நகரத்து பெண்ணில் தொழிலாளர் வர்க்கமானது தனக்கு தானே உதவி செய்ய இயலாத அப்படி செய்யக்கூட முயற்சிக்காத கையறு நிலையில் உள்ள ஒரு கூட்டமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. தாங்கவொண்ணாத அத் துன்பத்திலிருந்து அவர்களை கை தூக்கிவிடும் முயற்சிகள் எல்லாம் அந்த மக்களுக்கு மேலிருந்து வருகின்றனவேயொழிய அவர்கட்கு மத்தியிலிருந்து வரவில்லை. செயின்ட் சைமனும், ரொபட் ஓவனும் வாழ்ந்த அந்த 1800 அல்லது 1810 இல் கதை நடப்பதாக இருந்தால் அது சரிதான். ஆனால் 1887ல் தீவிரமான பாட்டாளி வர்க்க போராட்டங்கள் பலவற்றையும் கடந்து 50 ஆண்டு காலமாக பங்கு கொண்ட ஒருவருக்கு இது யதார்த்தமானதாக இருக்க முடியாது.
தங்களை சூழ்ந்துள்ள ஒடுக்குமுறை யந்திரத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கம் கண்டனம் முழங்குவதும் தாங்களும் மனிதப்பிறவிகள் தாம் எனும் நிலையினை மீட்டுக் கொள்ள கொந்தளித்து கிளம்பி அரைகுறை உணர்வு பூர்வமாகவோ அல்லது முழு உணர்வுப் பூர்வமாகவோ முயல்வதும் வரலாற்றில் யதார்த்த உலகில் (னுழஅயin ழக சுநயடளைஅ) நாங்கள் இடம்பெற வேண்டும் எனக் கேட்க அவற்றிற்கு இடமுண்டு. (அருணன்(1998) மார்க்கிசியமும் அழகியலும்இ சிட்டி பதிப்பகம்இ மதுரை .ப. 46;)
மேற்குறிப்பிட்ட ஏங்கல்சின் இரத்தின சுருக்கமான இக்கருத்தினை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது மலையக மக்களின் வாழ்வியலை படைப்பாக்கித் தந்த சி.வியின் எழுத்துக்கள் அன்றைய காலச்சூழலில் தோட்டத் தொழிலாளர்களின் பல்வேறுபட்ட எழுச்சிகளையும் இயக்கங்கஙை;களையும் பொருளாகவும், பின்னணியாகவும் கொள்ளவில்லை. 1948 ஆண்டு இடம்பெற்ற மலையக மக்களுக்கு எதிரான வாக்குரிமைப் பறிப்பும் அது தொடர்பில் ஏற்பட்ட சத்தியாகரக போராட்டமுமே அவர் ஐn ஊநலடழளெ வுநய புயசனநn என்ற கவிதை தொகுப்பினை எழுதுவதற்கு ஆதாரமாக அமைந்தது எனக் குறிப்பிடுவர். இக்கவிதை தொகுப்பில் குடியுரிமை பறிப்பு சம்பந்தமாக நேரடியான சம்பவங்கள் இடம்பெறவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. ஆதேசமயம் மலையக மக்களின் வரலாறும் அவர்களின் சமூக இருப்பும் குறித்த அக்கறை இக்கவிதைத் தொகுப்பில் அடங்கியுள்ளமை அதன் பலமான அம்சங்களில் ஒன்றாகும்.
எனவே, தான் எடுத்துக் கொண்ட காலத்தினை முழுமையாக சித்திரிக்கவும் அந்த சூழலில் இயங்கக்கூடிய உண்மையான மாந்தர்களை சித்திரித்துக் காட்டவும் அவரது எழுத்துக்கள் தவறிவிடுகின்றது.
முடிவுரை
சுமார் 50 ஆண்டு காலமாக எழுத்துலகில் திகழ்ந்த சி.வி. மலையக மக்களின் வாழ்வியலைப் படைப்பாக்கித் தந்தார் என்பதில் இருநிலைப்பட்ட கருத்துக்களுக்கு இடமில்லை. எனினும் அவரது காலத்தில் நிகழ்ந்த முனைப்புற்ற போராட்டங்களையும் எழுச்சிகளையயும் இலக்கியமாக்க தவறிவிடுகின்றனர். இது இவரது இலக்கிய நோக்கின் பலவீனமாகும். இவ்வாறாக சி.வியின் எழுத்துக்களை நோக்குகின்ற பொது கொடுமைகளை கண்டு குமுறுகின்ற ஒரு மனிதாபிமானியின் நெஞ்சம் தெரிகின்றது. ஆனால் இம்மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை முன்வைக்கும் தத்தவார்த்த பார்வை இல்லை என்பதும் தெரிகின்றது. முடிவாக சி.வி பற்றிய ஆய்வுகளை சமூகவியல் பார்வைக்கு உட்படுத்துகின்ற போது அவரது வெற்றிகள் மட்டுமல்ல தோல்விகளும் அடுத்த தலைமுறையினருக்கு ஆதர்சனமாக அமையும்.
மலையக மக்களின் வாழ்வை எண்ணும் போது
“காண்பெதெல்லாம் தொழிலாளி செய்தான் _ அவன்
காண கிடைத்தது வறுமையோ …. ”
என்று பாரதி தாசன் எழுதியது ஞாஜபகம் வரும்.மூத்த ஈழத்து எழுத்தாளர் ஒருவர் என்னிடம் ” நான் தமிழில் எழுதினாலும் ,என்னை அறியாமல் நான் ஆங்கிலத்தில் தான் சிந்திப்பேன் ” என்று ஒரு முறை சொன்னார் .அப்படி ஒரு மயக்கம் மூன்றாம் உலக நாட்டு கல்விமான்களிடம் இருப்பது வேடிக்கையானது.
சிறு திருத்தம், மலையக தமிழர் ஓரு சமூகமாக கூடி வாழ்வதனை சிதைக்கும் முகமாக பல குடியேற்றவாதத் திட்டங்களை அரசு அவ்வப்போது மேற்கொண்டு வந்தள்ளது. 1977ம் ஆண்டு நுவரெலியா மஸ்கெலியா தொகுதியில் 700 ஏக்கர்(7000ஏக்கர் என வரவேண்டும்) காணியை சுவீகரித்து தமது குடியேற்றவாத நடவடிக்கையை மேற்கொள்ள அரசு முயற்சித்தது.
அவ்வாறே சில ஆங்கிலச் சொற்கள் எழுத்து காரணமாக தமிழ் எழுத்துகளாகவே காணப்படுகின்றன.