05.11.2008.
கல்முனையில் தமிழ் இளைஞர்கள் ஐவர் சுட்டுக்கொல்லப்பட்டமையானது படைத்தரப்பு தமிழ் இளைஞர்கள் மீது தமது கொலை வெறியை ஆரம்பித்துள்ளதையே எடுத்துக் காட்டுகின்றது. இந்த ஈனச் செயலை வன்மையாகக் கண்டிப்பதுடன் பாரபட்சமற்ற விசாரணை இதுதொடர்பாக நடத்தப்பட வேண்டும் எனத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே. பத்மநாதன் தெவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கல்முனை குறுந்தையடி கடற்கரை வீதியிலுள்ள விடுதியொன்றில் வைத்து, இளைஞர்கள், ஐவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர். இப்படுகொலைகள் தொடர்பாக வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கல்முனை குறுந்தையடி, கடற்கரை வீதியில் மாலை நேரத்தை நண்பர்களுடன் விடுதி ஒன்றில் கழித்துக்கொண்டிருந்தபோது அங்கு சென்ற விசேட அதிரடிப்படையினர் எவ்வித விசாரணையும் இன்றி மேற்படி இளைஞர்கள் ஐவரையும் சுட்டுக்கொன்றுள்ளனர் எனச் சுட்டுக் காட்டியுள்ளார்.
கொல்லப்பட்டவர்கள் குறுந்தையடி பகுதியைச் சேர்ந்த ஜெயசேகர் துஷாந்தன் வயது 20, ராஜகுபேந்தன் யோகபிரகாஷ் வயது 28, முத்துப்பிள்ளை சிறிசுதர்ஷன் வயது 28 மற்றும் திருமணமான கதிரவடிவேல் ராஜகுபேரன் வயது 26, சோமசுந்தரம் கார்த்திக் வயது 26 என அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் கொல்லப்பட்டமை அப்பகுதியில் வாழ்கின்ற தமிழர்கள் மத்தியில் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
படைத்தரப்பினர் இந்த கொலை வெறியாட்டத்தினை மேற்கொண்டுவிட்டு எமது சகோதர இனத்தின் மீது பழிபோடுவதற்கு முயற்சித்தனர்.
எனினும் விசேட அதிரடிப்படையினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தை அங்கு கூடியிருந்த தமிழ் முஸ்லிம் இளைஞர்கள் கண்டுகொண்டமையினால் இரு இனங்களுக்கிடையில் ஏற்பட்ட பதற்றம் தவிர்க்கப்பட்டுள்ளது.
கிழக்கில் அன்னியோன்யமாக வாழ்ந்துவரும் சமூகங்களிடையே கசப்பான உணர்வுகளை ஏற்படுத்துவதில் அரசாங்கமும், படைத்தரப்பினரும், எத்தனித்துவருகின்றனர்.
இதனை அனைத்தின மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஐந்து இளைஞர்களை விசேட அதிரடிப்படையினர் தான் சுட்டுக்கொன்றனர் என தெரிவித்த ஒரு சில இளைஞர்கள் படையினரால் தாக்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் எனக்கு தெரியப்படுத்தினர்.
அத்துடன் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் இனம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்து தமது செயல்களை மூடிமறைக்க முற்பட்டுள்ளனர்.
படைத்தரப்பினருக்கு தமிழ் இளைஞர்கள் மீது சந்தேகம் ஏற்படுமானால் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் அதனை விடுத்து இவ்வாறு பெறுமதியுள்ள மனித உயிர்களை மிகவும் கேவலமாக சுட்டுக்கொல்வது அநாகரிகமான செயலாகும். என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். புத்மநாதன் கண்டித்துள்ளார்.
THANKS: