ஒன்றின் மேன்மை அதன் தொன்மையில் தங்கியுள்ளது என்பதும் அது தனது தூய வடிவிலேயே அன்று தொட்டு இன்று வரை இருந்துவந்துள்ளது என்பதும் இந்தியத் துணைக்கண்டத்தின் பல்வேறு துறைகளிலும் இருந்து வருகிற மயக்கமாகும். இசையைப் பொறுத்தவரை, குறிப்பாகக் கர்நாடக சங்கீதம் என அறியப்பட்டு வரும் இசை மரபைப் பொறுத்தவரை, இவ்வாறான மயக்கம் தொன்மை, தூய்மை என்பவற்றைக் கடந்து அதற்கு ஒரு தெய்வீகத் தன்மையும் கற்பிக்கப்பட்டுள்ளதை அறிவோம். அந்த இசையைப் பயிலவும் பயன்படுத்தவும் இறை அருள் தேவை என்பதும் வலியுறுத்தி வரப்படும் ஒரு விடயமாகும்.
மேற் கூறிய அணுகுமுறைகள் மூலம் இசையின் தோற்றமும் விருத்தியும் பற்றிய வரலாற்று உண்மைகள் மக்களிடமிருந்து மறைக்கப் படுகின்றன. செம்மையான எல்லாமும் சமூக வழக்கில் இருந்து வந்த நடைமுறைகளின் சேர்க்கையாலும் செம்மைப் படுத்தலாலும் அமைந்தவை என்ற உண்மை மறுக்கப் படுகிறது. பல வேறு நாட்டார் இசை வடிவங்களிலும் சமூகச் சடங்குகள் வழிபாடுகள் போன்றவற்றிலும் தோன்றி விருத்தி பெற்ற இசை வடிவங்களே பண்ணிசை முதல் தமிழ் இசை என்று இன்று கூறப்படும் இசையினதும் கர்நாடக இசையினதும் மூலதாரங்கள் என்ற உண்மை மறுக்கப் படுகிறது.
மாறாகத் தெய்வங்கள் ஞானியருக்கும் சான்றோருக்கும் அருளியதான ஒரு தூய இசையிலிருந்து தான் அனைத்து இசைகளும் தோன்றின என்று நமக்குக் கூறப்பட்டு வந்துள்ளது. கர்நாடக இசை மரபிற்குள் எது முறையானது எது முறையற்றது என்று பத்தாம் பசலிகட்கும் நவீனத்துவவாதிகட்கும் நடுவிலான விவாதங்கள் இன்னமும் தொடர்வதற்கு இந்தத் தூய்மைக் கோட்பாடே காரணமாக உள்ளது. தூய்மை என்பது கலை வடிவத்தையும் தாண்டிக் கலைஞர்களையும் தொடுகிற போது ஏற்கெனவே கூறியபடி இறையருள் பெற்றோர் இயற்றியவை மட்டுமே ஏற்கத் தக்கவை எனவும் நிகழ்ச்சிகளில் அவை பாடப் படுவது அத்தியாவசியம் எனவும் மற்றவை சேர்க்கப்படுவது தவிர்க்கத் தக்கது எனவும் சேர்க்கப் படுமாயின் அவற்றை முதன்மைப்படுத்தக் கூடாது எனவும் இன்னமும் வாதிக்கப் படுகிறதை அறிவோம்.
இந்தப் பழமைவாதப் போக்கினுள் வர்ணாசிரமச் சாதியச் சிந்தனையும் பார்ப்பானிய ஆதிக்கம் வலுப்பெற்ற காலத்தையொட்டி உருவான தமிழ் மறுப்புக் கொள்கையும் உள்ளடங்குவன. பார்ப்பனரல்லாதார் கீர்த்தனங்களை இயற்றத் தகுதியற்றோர் என்ற கொள்கை சில நேரங்களில் அபத்தத்தின் உச்சத்தை தொட்டுமுள்ளது. உதாரணமாகக் கர்நாடக இசை மரபு கொண்டாடும் ‘சங்கீத மும்மூர்த்திகட்கு’ ஒரு நூற்றாண்டு முற்பட்டவரும் பக்தி மார்க்க மரபிற்குரியவரும் பிறப்பால் வணிகருமான கன்னட சாகித்தியக்காரரான புரந்தரதாசர் வணிகத்தில் ஈடுபட்ட பிரமாணர் என்றும் முற்பிறப்பில் பிராமணர் என்றும் கதைகள் சோடிக்கப் பட்டுள்ளதைக் கூறலாம். கர்நாடக இசை இவ்வாறு புனிதப்படுத்தப் பட்டுப் பிறப்பால் உயர்ந்தோராகிய பிராமணருக்கே உரியதாகக் காட்டப்பட்டதன் இன்னொரு விளைவாகத் திருவனந்தபுரத்தில் ஆட்சி செலுத்திய ஸ்வாதித் திருநாள் மகாராஜாவின் புகழ் பெற்ற சாகித்தியங்கள் எல்லாம் அவரது அரசவையிலிருந்த பார்ப்பனர்களால் ஆக்கப்பட்டவை என்று கதை பரப்பப்பட்டது.
எனவே பார்ப்பனரல்லாத பிறர் எத்தகைய புறக்கணிப்பிற்கு உட்படுத்தப்பட்டிருப்பர் என்று மதிப்பிடுவதில் சிரமமிராது.
அடுத்தபடியாகப் புறக்கணிப்பிற்கு உட்பட்டது தமிழ். தமிழ் கர்நாடக சங்கீத சாகித்தியங்கட்கு உகந்த மொழியல்ல என்ற புனைவு இன்னமும் பரப்பப்பட்டு வருகிறது. சங்கீத மும்மூர்த்திகள் எனப்படுவோரில் தியாகராஜரும் சியாமா சாஸ்த்திரியும் பிறப்பாற் தெலுங்கர். முத்துசுவாமித் தீட்சிதர் தமிழ்ப் பிராமணர். மூவரும் மிகக் குறைந்த அளவிலேயே தமிழ்ப் பாடல்களை இயற்றினர். முன்னைய இருவரும் தமது தாய் மொழியான தெலுங்கில் எழுதியது விளங்கிக்கொள்ள முடியுமானது.
தீட்சிதர் ஏன் பெரும்பாலான பாடல்களை சமஸ்கிருதத்தில் எழுத வேண்டும்? நிச்சயமாகத் தமிழை விட சமஸ்கிருதம் இசைக்குப் பொருத்தமான மொழியாகாதே! எனவே இந்தத் தமிழ் மறுப்பின் தாக்கம் மிகச் சிக்கலானதாகிறது தமிழ் ஷஷநீச பாiஷஷஷ என்றால் தெலுங்கும் ‘நீச பாiஷ’ தான். தெலுங்கு கீர்த்தனங்கட்கு ஏற்றதென்றால் தமிழும் அதே அளவுக்கு ஏற்றதாகி விடாதா? எனவே தமிழிலே சாகித்தியங்கள் உருவாவது சமஸ்கிருத ஆதிக்கத்துக்கல்லாமல் பார்ப்பன ஆதிக்கத்துக்குச் சவாலாக அமையும் என்பதே முக்கியமான காரணமாக இருந்திருக்கலாம்.
மேற்கூறிய மும்மூர்த்திகட்கும் முன்னரே தமிழில் சாகித்தியங்களைப் புனைந்தவர்கள் இருந்தார்கள். அவர்களது பாடல்களைப் பாடக்;;கூடிய வலிய சீடப்பரம்பரை இல்லாததாலும் பிற்காலத்தில் திட்டமிட்ட புறக்கணிப்பாலும் அவற்றில் ஒரு சிறு பகுதியே எஞ்சியுள்ளது. தமிழிசை இயக்கத்தினர் கர்நாடக இசை என்பது உண்மையில் தமிழிசையே என்றும் அதிலிருந்து தமிழ் விலக்கப்பட்டு அது கர்நாடக சங்கீதமாக்கப் பட்டது என்றும் சொல்லுவர். சிலர் அதற்குமப்பால் சென்று தமிழரின் இசையைக் ஷஷகளவாடியேஷஷ கர்நாடக இசை உருவாதென்று சாகித்தியகாரர் மீதும் குற்றஞ் சுமத்துவார்கள்.
தமிழிசையா, கர்நாடக சங்கீதமா என்பது பெருமளவும் பார்ப்பன ஆதிக்கமும் பார்ப்பனிய அடிப்படையிலான தமிழ் மொழிப் புறக்கணிப்பும் பற்றிய விவாதமாகவே விருத்தி பெற்றது. உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை கர்நாடக சங்கீத மரபு, ‘சங்கீத மும்மூர்த்திகள்’ எனப்பட்டோரை இறையருள் பெற்ற மூத்தோராக முதன்மைப்படுத்திப் பின்னர், அங்கீகரிக்கப் பட்டவர்கள் பலருக்கும் அவ்வாறான இறை அங்கீகாரம் வழங்க முற்பட்டதை நாம் அறிவோம். தமிழ் நாட்டில் கர்நாடக இசையின் பரவலாக்கத்திற்கும் அதனோடொட்டிய வருமானத்திற்குமான தேவையும் சினிமாவில் இசையின் முக்கியத்துவமும் தமிழில் கர்நாடக இசைக்கான பாடல்களைப் புனையும் வாய்ப்பை உருவாக்கின. அதை விடவும் கோபாலகிருஷ;ண பாரதியாரின் நந்தனார் நாடகப் பாடல்கள், பாரதி பாடல்கள் போன்றவையும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தின.
ஊத்துக்காடு வேங்கடசுப்பையர், பாபநாசம் சிவன் போன்றோரும் மக்களைச் சென்றடையக்கூடிய விதமான பாடல்களைப் புனைந்தனர்.
தமிழிசை இயக்கத்தின் வருகை கர்நாடக இசைக் கச்சேரிகளில் தமிழிலும் சிலவற்றை பாடலாம் என்ற சலுகைக்கு வழி செய்தது. எனினும் அதனால் கர்நாடக இசைத்துறையில் இன்னமும் ஆதிக்கச் செலுத்தும் பார்ப்பனியச் சிந்தனையை முறியடிக்க இயலவில்லை. இன்று தமிழிசை ஆர்வலர்கட்குரிய ஒரு செயற்பட்டுத் தளம் உள்ளது. அதன் சமூக நோக்கமும் வர்க்கக் கண்ணோட்டமும் கர்நாடக இசைத் துறையினதை விடச் சிறிய முற்போக்கானதாக இருப்பதற்கு அதன் பார்ப்பனிய விரோதத் தமிழ்த் தேசியவாத அனுகுமுறை காரணமாக உள்ளது.
எனினும் தமிழிசை பற்றிய வாரலாற்றுப் பார்வையும் தமிழிசை இயக்கத்தின் வர்க்க நிலைப்பாடும் தமிழிசையை நாட்டார் இசைக்கும் பரந்து பட்ட மக்களை முன்னோக்கிக்கொண்டு செல்லக்கூடிய மக்கள் இசை இயக்கத்திற்கு நெருக்கமாகக் கொண்டுவர உதவும் என்று எதிர்பார்க்க இயலாது.
கர்நாடக இசையின் தொன்மை, தூய்மை, தெய்வீகத்தன்மை என்பன பற்றிய மாயைகள் உடைக்கப்பட்டு அது மரபு வழி வந்த பல்வேறு இசை வடிவங்களின் செம்மைப்படுத்திய தொகுப்பு என்பது உறுதியாக நிலை நிறுத்தப்படவேண்டும். கர்நாடக இசை பற்றிய புனைவுகளும் அதன் நடைமுறைகளும் மக்களிடம் இருந்து இசையை அந்நியப்படுத்தும் நோக்கிலானவை என்பது பரவலாக விளக்கப்பட வேண்டும். இவை பற்றியும் தமிழிசை இயக்கத்தினர் கவனஞ் செலுத்த வேண்டும். தமிழிசை என்பது பார்ப்பனிய நீக்கம் பெற்ற தமிழ் மேட்டுக்குடி இசையாக இல்லாமல் தமிழ் மக்களின் பல்வேறு இசை மரபுகளையும் மக்கள் சார்ந்த இசை வடிவங்களையும் ஒருங்கிணைக்கும் பரந்துபட்ட இசை இயக்கமாக முன்னெடுக்கப் படுமாயின் அது தமிழ்ப் பண்பாட்டு அடையாளத்துக்கு வளஞ் சேர்க்கும்.
சினிமா, கூத்து இசை வடிவங்களைக் கர்நாடக இசை மரபு இழிவாகக் கருதி நிராகரித்து வந்தாலும் சினிமாவின் மூலம் கிட்டக்கூடிய வருமானம் சமரசங்கட்கு வழிசெய்துள்ளது. அதைவிட, அந்நிய இசை மரபுகளுடன் இணைந்து இசையமைக்கும் ஃபயூஷன் இசை வடிவங்கள் இன்றைய பூகோளமயமாக்கற் சூழலிற் செல்வாக்குப் பெற்று வருவதையும் நாம் கவனிக்க வேண்டும்.
பழமைவாதம் என்பது அந்நிய மேலாதிக்கத்துடன் சமரசம் செய்யத் தயங்குவதில்லை. அதன் தயக்கமெல்லாம் தனக்கு கீழ் நசுக்கப்படும் மக்களின் கலை, மொழிப் பண்பாட்டுக் கூறுகளினால் தனது ‘செவ்வியல்’ வடிவங்கள் மாசுடுவது பற்றியதே.
நன்றி : புதியபூமி
ஆக்க பூர்வமான் கட்டுரை.தமிழனை இன்னும் முட்டாளாக்க பிராமண்ர் தொடர்ந்தும் கோயில்க்ளீள் சம்ஸ்கிரக மொழியில் மந்திரம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.திரு கருணானிதி அய்யா கால்த்தில் கூட தமிழில் பூஜை கைகூடவில்லை இது தமிழனுக்கு தொடரும் கேவலம்.மார்க்ழி மாத இசை விழாக்கள் தெலுங்கில் மட்டுமே பாடுகின்றன்.தெலுங்கர்கள் பாடியும் ஆடியும் தமிழ் மொழியை வசிய்ம் செய்வதாக் பிராம்ணரெ கதை பரப்பிகிறார்கள்.
தங்கரூபன்
என்ன பெரிய அதிசயம் நடந்துள்ளது .திருவாளர் சிவசேகரம் “பார்ப்பனர் ” என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளா.அப்படி எல்லாம் அதாவது பார்பனர் என்று எழுதுவது தவறு என்றும் காலச்சுவட்டில் எழுதிய நினைவுக்கு வருகிறது.
தியாகய்யரின் கீர்த்த்னைகள் என்னென தமிழ் கீர்த்தனங்களிருந்து திருடப்பட்டதென்பதை இசை அறிஞ்ர் எஸ். ராமநாதன் விளக்கிகாட்டினார்.தான் பிறப்பால் தெலுங்கர் ஆக இருந்தாலும் தெலுங்கு தேசத்திற்கு ஒரே ஒரு முறை தான் தியாகய்யர் போய் இருக்கிறார்என்று அவர் பற்றிய வரலாறு சொல்கிறது .அவர் கேட்ட தெல்லாம் தமிழ் இசை தான் .கோவிலில் வாசிக்கப்பட்ட நாதஸ்வர இசை மற்றும் தேவார இசை தான்.இதெல்லாம் கேட்டு விட்டு அவர் இன்று “கவி பேரரசுகள் “போல் டியுனுக்கு பாட்டு எழுதினார்.அவர் ஒரு பார்ப்பனர் என்பதாலேயே அவர் எதோ பெரிய அறிவு மேதை போலவும் கொண்டாட படுகிறார். அவர் எழுதியதும் கொச்சை தெலுங்கு தான் .பின்னால் வந்தவர்கள் அதை செப்பனநிட்டார்கள் என்பதே உண்மை.இதை இசை அறிஞ்ர்கள் எல்லாம் நிருபித்துவிட்டார்கள்.தியாகய்யருக்கு முன்பே தமிழ் நாட்டில் வாழ்ந்த “மும்மூர்த்திகள்”முத்து தாண்டவர் போன்ற இசை மேதைகள் தான் கீர்த்தனை வடித்தை உருவாகியர்கள்.செவ்வியல் எனப்படுதேல்லாம் கிராமிய இசையில் / நாட்டுபுற இசையிலிருந்தே தோன்றியவை என்பதும் உலக அளவில் நிரூபிக்க பட்டு விட்டது.
எப்படியெல்லாம் பழைய தமிழ் பண் களின் பெயர்களை எல்லாம் மாற்றி சமஸ்க்ருத பெயர்களாக மாற்றினார்கள் என்பதும் நிரூபிக்க பட்டு விட்டன.
பார்பனர்களின் இசை பற்றிய திமிரை அப்ரகம் பண்டிதர் என்பவர் 1917 லிலேயே பார்ப்பன இசை அறிஞ்சர்கள் என்போரையும் வாடா இந்திய இசை அறிஜர்களையும் வெளிநாட்டு இசை அறிந்ஜர்களையும் அழைத்து மிகப்பெரிய மாநாடு கூட்டி தனது மகள் மாரையே வீணை வாசித்து காட்டி
சுருதி பற்றிய மிகதேளிவான் விளக்கங்களை கொடுத்து கர்னாடக இசை என்பது தமிழிசை தான் என்பதை எல்லாரும் ஒப்பு கொள்ள வைத்தார்.இதை எல்லாம் பார்ப்பன இசை அறிஞ்சர்கள் எல்லாரும் ஒப்பு கொண்ட அவர்கள் தங்கள் கைப்பட எழுதிய கடிதங்களை எல்லாம் மிகப்பெரிய புத்தகமாக வெளியிட்டார்.இவ்வளவும் நடந்து என்ன ? தமிழருக்கு எருமை தோல் என்பது தான் முடிவு????!!!!
செளந்தர்,
உங்களுடன் எனக்கு அடிப்படையில் முரண்பாடில்லை. இக் கட்டுரை “மக்கள் மரபும் செவ்வியல் மரபும்” பற்றிய ஒரு ஒப்பீட்டுத் தொடருக்குரியது.
கர்நாடக சங்கீதம் என்ற பேரே தவறானது. அதற்கு ஒரு தமிழ் விரோத நோக்கம் உண்டு. கர்நாடக மாநிலத்தின் அதி முக்கியமான சாகித்தியக்காரரும் “சங்கீத மும்மூர்த்திகட்கு” முற்பட்டவருமான புரந்தரதாசர் ஓரங்கட்டப்பட்டுத் தான் இந்தச் “சங்கீத மும்மூர்த்திப்” படிமம் உருவாகிறது. எனவே வேறு நோக்கங்களும் கவனிப்புக்கு உரியனவாகின்றன.
கர்நாடக இசை என்ற பேரில் செவ்வியற் படுத்தலின் போது சமஸ்கிருதமாக்கல் வலுவாக இருந்ததனால், ராகங்கட்குப் பண்களின் பேர்களைச் சூட்டாது தவிர்க்கும் போக்கும் செயற்பட்டுள்ளது. 72 தாய் ராகங்கள் அடையாளங் காணப்பட்டது பிற்காலச் செவ்வியற் படுத்தலின் போக்கிலானது. (பெருவாரியான ரசாயன மூலகங்கள் கண்டுபிடக்கப்பட்ட பின்பு அவற்றின் வகைப்படுத்தல் மேலும் பல மூலகங்களைக் கண்டுபிடிக்க வழி செய்தது போல, இவ் வகைப்படுத்தலும் மேலும் சாத்தியப்பாடுகளை இயலுமாக்கியது என்பது முக்கியமானது. ஒரு நல்ல இசை மரபுக்கு எத்தனை ராகங்கள் தேவை என்பது இன்னொரு விடயம்). இந்தத் தாய் ராகங்களிலிருந்து தான் மற்ற ராகங்கள் அனைத்தும் பிறந்தன என்பது இசையின் தோற்றத்தின் வரலாற்றையே தலைகீழாக்குவது.
தமிழிசை என்று நாம் கூறும் போது (தமிழகத்துத்) தமிழர் விருத்தி செய்ததை மட்டுமே குறிக்கிறோமா? அதையே பிறர் பின்பற்றியதென்றும் சொல்லப் பார்க்கிறோமா? எனின், பிற சமூகங்களின் இசை மரபுகளின் இடம் என்ன? இவற்றைப் பற்றி நாம் நிதானமாகச் சிந்திப்பது நல்லது.
இந்தியத் துணைக் கண்டத்தில் இசை பல்வேறு பிரதேசங்களிலும் பல்வேறு பண்பாட்டுச் சூழல்களிலும் மக்கள் மத்தியிலிருந்து உருவானது. ஒவ்வொரு பிரதேசத்துக்குமுரிய அடையாளங்கள் அடிப்படையாய் இருந்தாலும் இசை அனுபவங்கள் பரிமாறப்படடு வந்த சூழலில் ஒரு பகுதி வெளியிலிருந்தும் வந்திருக்க வாய்ப்புண்டு. இதையும் நாம் மனதிற் கொள்வது தகும்.
எல்லா இசை மேதைகளும் மக்கள் வழக்கில் இருந்த இசையில் இருந்து தான் தமது ஆக்கங்களுக்கான ஊட்டத்தைப் பெற்றார்கள். (இன்றைய அனுபவமும் அதுவே.) “செவ்வியற்படுத்தலின்” போக்கில் இந்த உண்மை மறைக்கப்படுகிறது. இதுவே எனது பிரதான அக்கறை.
தியாகராஜர் மீதான என் மதிப்பிற்கு முக்கியமான ஒரு காரணம் அவர் பயன்படுத்திய எளிமையான தெலுங்கு தான். உங்கள் குறிப்பு அதனை மேவும் வலுப்படுத்தியுள்ளது. நன்றி.
தங்கரூபன்
பார்ப்பான் என்பது ஒரு நிந்தனைச் சொல்லாகப் பயன்பட்டதைக் கருத்திற் கொண்டே பார்ப்பனியம் என்பது தவிர்க்கத்தக்கது எனப் பரிந்துரைத்தேன்.
பிராமணியம் என்ற சொல்லில் மொழியும் மதமும் கூட வற்புறுத்தப் படுவதை உணர்ந்ததால் சாதியம் பற்றிப் பேசுகையில் பார்ப்பனியம் என்பது கூடப் பொருந்தும் என்பதை ஏற்றுச் சில காலமாகவே அச் செல்லைப் பயன்படுத்தி வருகிறேன். பார்ப்பான் என்பதில் உள்ள நிந்தனை பிற சாதியினரையும் இழிவுபடுத்தப் பயன்படுத்தும் ஒருமையிலேயே தங்கியுள்ளது என்பதை அப்போது நான் கருதவில்லை. விளக்க வாய்ப்பளித்ததற்கு நன்றி.
“தமிழிசை என்று நாம் கூறும் போது (தமிழகத்துத்) தமிழர் விருத்தி செய்ததை மட்டுமே குறிக்கிறோமா? அதையே பிறர் பின்பற்றியதென்றும் சொல்லப் பார்க்கிறோமா? எனின், பிற சமூகங்களின் இசை மரபுகளின் இடம் என்ன? இவற்றைப் பற்றி நாம் நிதானமாகச் சிந்திப்பது நல்லது.”
மிகவும் சரியாக குறிப்பிடுள்ளீர்கள்.கொடுக்கல் ,வாங்கல் மூலமே இந்த உலகம் வளர்ந்துள்ளது.ராகங்கள் பற்றி சிந்திக்கும் போது குறிப்பாக 5 ஸ்வரங்களை கொண்ட ராகங்களான (மோகனம்,ஹிந்தோளம் )போன்றன சீன ,இந்தோனேசிய, வியட்னாம் ,கம்போடியா ,ஜப்பான் ,நேபாளம் போன்ற நாடுகளில் மிக தாராளமாக கேட்கலாம். தடுக்கி விழுந்த இடமெல்லாம் மோகனம் ராகம் தான் கேட்கும். 1972 இல் வெளிவந்த சீன இசைத்தட்டு ஒன்று என் இசை சேகரிப்புகளில் இருக்கிறது.அதில் ஒரு பாடல் தலைவர் மாவோவின் வாழ்த்துப்ப் பாடல் .என்ன அதிசயம் அது எந்த விதமான பிசகும் இல்லாத ஹிந்தோள ராகம் தான்.ஏன் இதை சொல்கிறேன் என்றால் இவை அங்கிருந்து இங்கு வந்ததா இல்லை இங்கிருந் அங்கு போனதா என்பது எனக்கு தெரியாது.
மற்றும் ஒரு செய்தி அக்பர் காலத்தில் தஞ்சையிலிருந்து கோபால் என்ற இசை கலைஞர் தலைமையில் ஒரு குழு ஒன்று சென்று இசை கற்பித்தார்கள் என்பது.
சாருகேசி என்ற ஒரு ராகம் தமிழில் இருக்கிறது .பொதுவாக ஆங்கில படங்களில் அரேபிய நாட்டை பற்றிய படங்களில் பாலை வன காட்ட்சிகளுக்கு வரும் பின்னணி இசையை கவனித்தால் அது சாருகேசி ஆகத்தான் பெரும்பாலும் இருக்கும்.படங்களில் வரும் காட்சி படுத்தலுக்கு அப்பாலும் தனியே அவற்றை கேட்கும் போது மனதில் ஒரு வெறுமை ,சூனிய உணர்வை மிக ஆழ மாக என்னுள் ஏற்படுவதை நான் உணர்ந்திருக்கிறேன்.ஆனால் தமிழில் அந்த ராகத்தை கேட்கும் போது அந்த உணர்வு இருப்பதில்லை.அது முற்றிலும் வேறு கோணத்தில் இங்கே பயன் படுத்தியிருக்கிறார்கள்.சிந்துபைரவி ராகம் என்பது முகலாயர்களுடன் இந்திய வந்தது என்பது உறுதி செய்யபட்டுவிட்டது.அதுபோல் சாருகேசியின் பிறப்பிடம் எது என்பது எனக்கு தெரியாது.சில வேளைகளில் அது அங்கிருந்து வந்திருக்கலாம்.
” அந்தமான் கைதி ” என்ற படத்தில் கண்டசாலாவும் ,p.லீலாவும் பாடிய “யாரோ யாரோ ” என்ற பாடலும்.சீர்காழி கோவிந்தராஜனும்,p.லீலாவும் பாடிய “இரவினில் வருவதேனோ ,உன் பிறவியின் கோணம் இதானோ …ஊர் என்ன பேர் என்ன ஓ வெண் நிலாவே ” என்ற பாடலும் மேலே சொன்ன உணர்வை ஏற்படுத்துபவை.அந்தமான் கைதி படத்திற்கு t. கோவிந்தராஜலு நாயுடு எனவரும் ,”இரவினில் வருவதேனோ” T.V.ராஜூ என்கிற இசையமைப்பாளர்கள் இசை அமைத்துள்ளார்கள்.இளையராஜா இசையமைத்த முந்தானை முடிச்சு படத்தில் சின்னஞ்சிறு கிளியே என்ற பாடலும் ,”மல்லு வேட்டி மைனர் ” படத்தில் சின்ன மணி பொண்ணு மணி ..என்ற பாடலும் மேல் சொன்ன பாடல்களுக்கு நிகரானவை .அந்த பாடல்களில் உள்ள கவிதை நயம் வேறுபட்டிருக்கும்.
கீரவாணி என்றொரு ராகம் .அது பழைய தமிழ் ராகம்.அதை இந்திய இசைமேதை ரவிசங்கர் 1960 இல் வட இந்தியாவில் அறிமுகம் செய்தார்.இந்த ராகம் கிரேக்க நாட்டு இசையுடன் நன்றாக ஒத்து போகும் .இதன் பூர்வீகமும் ஆராய பட வேண்டும்.
மிக முக்கியமாக தமிழர் கலைகள் என்பது மிக உயர்ந்த நிலையில் உள்ளவை. இசையை பொறுத்தவரை அவர்கள் மிக நீண்ட வரலாற்றை கொண்டவர்கள். முன்னோடிகள.சிலப்பதிகாரம் பல செய்திகளை கூறுகிறது.பார்ப்பனர் கொண்டாடும் “கர்னாடக இசையின் பிதாமகர் “என்கிற சாரங்கதேவர் எழுதிய “சங்கீத ரத்னாகரம் ” என்ற நூல் கி.பி. 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது.நாட்டியமும் அவ்வாறே .தமிழில் அது சதிராட்டம்.
தமிழ், தமிழ் எனப் பேசி இவற்றை எல்லாம் தமது சுய நலனுக்கும் ,ஆட்சிக்கும் ,பதவிக்கும் மட்டும் பயன் படுத்தியவர்கள் பின் இவற்றை எல்லாம் கண்டு கொள்ளாமல் விட்டதுடன் பார்ப்பனீயத்துடன் சமரசமாகியதும் இவற்றின் வளர்சி நின்று போனது .இறைவனை தமிழில் பாடினால் என்ன சமஸ்கிருத்தத்தில் பாடினால் என்ன ? தமிழசை இயக்கத்தின் வளர்ச்சி ஓரளவுக்கு மேல் வளர முடியாததற்கு இந்த சமரசம் தான் காரணம் என எண்ணுகிறேன்.
யாரை எதிர்த்து இந்த இசை இயக்கம் வளர்ந்ததோ அவர்களிடமே சரண் அடைந்ததும் ஒரு காரணம். திராவிட இயக்கம் தேய்ந்து அண்ணா திராவிட் முனேற்ற கழகம் என்று மாறிய பரிமாணம் போல.( அதன் தலைவி ஒரு பார்பன பெண்)
இதை இன்னமும் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பார்ப்பனர்கள் இன்னமும் கம்பீர மாக உலா வருகிறார்கள்.
இசை என்ற பேராற்றலை கம்யுனிச இயக்கமும் சரியாக பயன் படுத்த வில்லை.
இலங்கை ,இந்திய சூழலில் தமிழ் ,தமிழர் என்று பேசப்பட்டபோதேல்லாம் அப்படி பேசிய வர்களால் /அவர்களின் பதவி ஆசையாலும் ,நடத்தையாலும் தமிழர்களின் உண்மையான பெருமைகள் எல்லாம் கேலிக்கிடமானது.இதை தான் கவிஞர் சுபத்திரன்அவர்கள் “தமிழே உன்னை பாட மாட்டேன் ..ஏனென்றால் நீ என்னை எம்பி ஆக்கிவிடுவாய்” என்று எழுதினார் போலும்.
இசை என்ற பேராற்றலை கம்யுனிச இயக்கமும் சரியாக பயன் படுத்த வில்லை.
இலங்கை ,இந்திய சூழலில் தமிழ் ,தமிழர் என்று பேசப்பட்டபோதேல்லாம் அப்படி பேசிய வர்களால் /அவர்களின் பதவி ஆசையாலும் உண்மையான் தமிழர்களின் பெருமைகள் எல்லாம் கேலிக்கிடமானது.
நன்றி
தமிழன் தன் இனத்தை மற்றவரிடமிருந்து விலக தனிமைப்படுத்துவதற்கு அதாவது கட்சி அரசியலுக்காக பார்பனரை கையில் எடுத்தது மட்டுமல்லாது திராவிட குடும்பமொழிகளையும் அதே காரணங்களை காட்டி முட்டாள்களின் இருப்பிடமாக தமிழ்மக்களை ஆக்கிவிட்ட்டான்,உண்மையில் தெலுங்கு,மலையாளம் தமிழ் ஒன்றாயிருந்து இப்படிப்பட்டவர்களாலும் அந்நிய செர்கைகளாலும் பிரிந்தன,தமிழ் மொழியுருவை இதற்கான முறையில் மாற்றியவர் ஒரு இத்தாலியர்(தமிழ் படித்தபின் பண்டிதரானவர்,பதினாறாம் நூற்றாண்டில் இந்த சதியை புரிந்தார்,இதனால் நம் பழைய தமிழ்மொழியை நம்மால் வாசிக்கமுடியாமல் போனது,அப்போதே மலையாளமும் பிரிந்தது)சமஸ்கிரிட்,தமிழ் சமகாலத்தவை என்கின்றனர் ஆய்வாளர்,அப்படியாயின் இப்போது இவர்கள்போடும் கூச்சல்கள் விசமல்லவா!!ஒன்றினுள் இன்னொன்று உள்வாங்கப்பட்டிருக்கலாமே ஒழிய ஆதிக்கம் செலுத்தியிருக்க முடியாது,அன்றைய தமிழ்,சமஸ்கிரிட் எழுத்துருக்கள் ஒரே வடிவுடனமைந்திருக்கின்றன!!பின்னர் மாற்றி பிரித்தவர் மீண்டும் மீண்டும் பிரித்து தமிழையும் தமிழரையும் அழிப்பதே உண்மை!!
சௌந்தர், மிக்க நன்றி. உங்களிடமிருந்து பல விடயங்களைக் கற்க முடிந்தது. பிறரும் பயனடைவர். நீங்கள் அறிந்தவற்றை (ஏலவே வந்திராவிடின்) நூல் வடிவிலோ இங்கு கட்டுரை வடிவிலோ தருவீர்களயின் அனைவரும் பயனுறுவோம்.
இடதுசாரி இயக்கம் இசையைப் பயன்படுத்தியது போதாது என்பதை ஏற்கிறேன். பயன்படுத்தவில்லை என்று சொல்ல மாட்டேன். தமிழகத்தில் குழுக்களை அமைத்துச் செயற்படுகிறார்கள். இலங்கையில் இடைக்கிடை முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆள் வலிமை இல்லாமை ஒரு பிரச்சனை.
Sri, வீரமாமுனிவர் இல்லாவிடின் தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற மேலும் பல காலம் எடுத்திருக்கும். அவர் செய்த எதுவுமே பழந் தமிழ் எழுத்தை வாசிக்க இயலாமற் செய்ததல்ல.
மெய்யெழுத்துக்களுக்குக் குத்துப் போட்டு வேறுபடுத்தலை மீளப் புகுத்தினார். எகர-ஏகார, ஒகர-ஓகார வேறுபாடுகளை ஐயமின்றி அறிய இரட்டைக் கொம்பைப் புகுத்தினார். இது எவ்வாறு பழைய சுவடிகளை வாசிக்க ஊறு செய்தது என விளங்கவில்லை.
அதை விட அருமையான ஒரு தமிழ்க் காவியமும் படைத்தார். பரமர்த்த குரு கதையையும் வழங்கினார். தமிழ் வளர்ப்பதில் இஸ்லாமும் கிறிஸ்தவ மதங்களும் வழங்கிய பங்கு பெரிது. தீவிர அந்நியத் துவேஷம் தீவிர அந்நிய மோகத்தின் அளவுக்குக் கேடானது.
“அன்றைய தமிழ்,சமஸ்கிரிட் எழுத்துருக்கள் ஒரே வடிவுடனமைந்திருக்கின்றன!!பின்னர் மாற்றி பிரித்தவர் மீண்டும் மீண்டும் பிரித்து தமிழையும் தமிழரையும் அழிப்பதே உண்மை!!”
இது தகவல்களைக் குழப்பமாக விளங்கிக் கொண்ட ஒருவரின் கூற்று.
தயவு செய்து கனதியான ஆய்வுகளப் பாருங்கள்.
திரு .சிவசேகரம் அவர்களே , தாங்கள் சுட்டி காட்டிய படி “இடதுசாரி இயக்கம் இசையைப் பயன்படுத்தியது போதாது ” என்ற கருத்து தான் மிக சரியானது .என்னுடைய கருத்தும் அது தான் .தவறுதலாக பயன்படுத்தவில்லை என எழுத்விட்டேன்.
இந்தியாவில் பொதுவுடைமை கட்சி ஒன்றுபட்ட கட்சியாக இருந்த காலத்தில் அவர்கள் உண்டாகிய கலை குழுவில் இயங்கிய பல கலைஞர்கள் பலர் இந்திய சினிமாக்களில் மிக சிறந்த இசையமைப்பாளர்களாக விளங்கினார்கள். அவர்களில் ஹேமந்த் குமார்,அனில் பிஸ்வாஸ் ,சலில் சௌத்ரி (போன்றோர் ஹிந்தி சினிமா இசையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏறபடுத்தியவர்கள்). M.B.சீனிவாசன் ,T. சலபதி ராவ் ,இசை ஞானி இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் ( இவருடன் மேடைகளில் பாடித்திரின்தவர் தான் இளையராஜா ) சலில் சௌத்ரி இசையமைத்த படம் தான் “செம்மீன் ” என்ற மலையாள படம் , ஹிந்தியில் அவர் இசையமைத்த” மது மதி ” பட பாடல்கள் மிகவும் புகழ் பெற்றவை. அதில் வரும் பாடல் தான் ஆஜாரே பரதேசி என்கிற லதா மங்கேஷ்கரின் பாடல்.
T. சலபதி ராவ் ,இசை அமைத்த படங்கள் தமிழில் பல உண்டு.மீண்ட சொர்க்கம் , புனர்ஜெனம் போன்றவை மிக புகழ் பெற்றவை.” கலையே என் வாழ்க்கையை திசை மாற்றினாய் ” , ” என்றும் துன்பம் இல்லை இனி சோகம் இல்லை ” போன்றவை சில உதாரணங்கள். M.B.சீனிவாசன் இசையமைத்த பாடல் தான் ” தென்னகீற்று ஊஞ்சலிலே தென்றலில் ஆடிடும் ” என்ற பாடல்.
“கர்னாடக இசை தமிழிசையே ” என்ற தலைப்பில் 1999 இல் இலங்கை தினகரன் பத்திரிகையில் நீண்ட கட்டுரை ஒன்று எழுதினேன்.தாங்கள் விரும்பினால் தங்கள் பார்வைக்கோ அல்லது “இனிஒரு ” விரும்பினால் இங்கு வெளியிடலாம்.
மற்றும் ஜிப்சி இன மக்களின் இசை பற்றியும் ஒரு நீண்ட கட்டுரை காலச்சுவடு சஞ்சிகையில் வெளிவந்தது.நீங்கள் இந்த கட்டுரை படித்திருக்கக் கூடும்.
எனக்கு இசையில் மிகுந்த ஆர்வம் உண்டு.நிறைய குறிப்புகள் அங்கங்கே
எழுதி வைத்துள்ளேன்.தங்கள் கட்டுரை என்னை மறுபடியும் தூண்டியுள்ளது
மிக்க நன்றி.
tsounthar@yahoo.co.uk
சிவசேகரத்தின் கட்டுரை இசை பற்றிய ஒரு கலந்துiராடலுக்கான ஆரம்பம். குறிப்பாக தமிழிசை பற்றி. நன்றிகள் அவருக்கு. சௌந்தர் பல விடயங்களைக் கோடி காட்டியிருக்கிறார். சிவசேகரம் குறிப்பிடுவது போல அவரிடமிருந்து அறியவும் கற்வும் நிறைய உண்டென்று நினைக்கிறேன். இனியயொரு முடிந்தால் அவருடைய கட்டுரைகளை மீள்பிரசுரம் செய்யலாம். அது பயன்மிக்கதாக இருக்கும். இனியொருவுக்கு அதில் ஏதேனும் வசதியீனம் இருப்பின் சௌந்தர் எனது மி;ன்னஞ்சலுக்கு அவருடைய கட்டுரைகளை அனுப்பி வைப்பாராயின் நான் மகிழ்வேன். எனது மின்னஞ்சல் ravana@usa.com.
மிகவும் சரியாகவே சொல்லியிருக்கிறீர்கள், ராவணா.
செளந்தர் தயவு செய்து ஒத்துழைக்க வேண்டும்.