: திரைப்படத்தினைத் திறனாய்வு செய்யும் அறிவெல்லாம் எனக்கில்லை என்பதால் கர்ணன் திரைப்படம் மிக நன்றாயிருக்கிறது, அழகியலுடன் எடுக்கப்பட்டிருக்கிறது, திரையில் காட்டப்படா மக்களின் வாழ்வைக் காட்டியிருக்கிறது. பாராட்டுகள், வாழ்த்துகள் தோழர் மாரி செல்வராஜ் என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.ஒரு சிலர் இந்தப் படத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் மக்களின் வலியை நம்முள் இத்திரைப்படம் சரியாகக் கடத்தவில்லை என்று பதிவிட்டிருக்கின்றனர். அதற்குக் காரணம், பேருந்தை வைத்தெல்லாமா சாதியப் பிரச்சனை வரும் என்று அவர்கள் நினைப்பது தான் என்று நினைக்கிறேன். நிழலின் அருமை வெயிலில் நின்றால் தான் தெரியும். இந்தப் பேருந்து விஷயத்தை மட்டுமே எடுத்துக்கொண்டாலும், தமிழ்நாடு தொடர்ந்து நிழலில் நிற்பதற்குக் காரணம் முத்தமிழறிஞர் கலைஞர். டி.வீ.எஸ் , எஸ்.ஆர்.வீ.எஸ் என்று பெரும் முதலாளிகள் மட்டுமே கோலோச்சிய பேருந்துத் துறையை 1970களின் தொடக்கத்திலேயே அரசுடைமையாக்கி, அரசு போக்குவரத்துக் கழகங்கள் கண்டு குக்கிராமங்களுக்கும் பேருந்து வசதி செய்து கொடுத்ததால் தான். இதை அவர் செய்து முடித்தும் பேருந்து வசதியில்லாத கிராமங்கள் நிறைய இருந்தன. எங்கள் சொந்த ஊரான வளையமாபுரம் (வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்டது) என்ற சிற்றூருக்கு 1996 வரையிலுமே சரியான சாலை வசதி கிடையாது,
பாதிக்கு மேல் கப்பிக்கல் ரோடு தான். 1983-84 வரை மண் ரோடு தான். பேருந்து வசதி கிடையாது . மாணவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் என அனைவருமே பத்து கிலோமீட்டர் தள்ளியிருக்கும் கும்பகோணம் எனும் பெரிய ஊருக்குச் செல்ல வேண்டுமென்றால் 2.5 கிலோமீட்டர் வலங்கைமானுக்குச் சைக்கிளில் அல்லது நடந்து வந்து, மன்னார்குடி, பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டையிலிருந்து கும்பகோணம் செல்லும் பேருந்திலேறி கும்பகோணம் வரவேண்டும். 1996 இல் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக்குப் பிறகு தான் அந்தவூருக்கு மினிபஸ் வந்தது. இந்த பின்தங்கிய கிராமத்தில் இடைநிலை ஆதிக்கச் சாதிக்காரனே கடுமையான கஷ்டங்களை அனுபவிப்பவன். அவன் தனக்கும் கீழாக மற்றொரு சமூகத்தை அடக்கினால், சாதிய அடக்குமுறையும் சேர்ந்து அவர்களின் நிலை எவ்வாறிருக்கும் என்பதை உணர்ந்தால் தான் அந்த வலி புரியும்.படத்திலிருக்கும் வசனத்தில் ஒன்று IPS காவல்துறை அதிகாரி பேசுவது “ஓ, இவனுங்க பஸ்ஸுவேண்டாம்ன்னு சொல்றவனுங்க இல்ல, பஸ்ஸு வேணும்ன்னு சொல்றவனுங்களா”. இதில் பஸ்ஸு வேண்டாம்ன்னு சொல்றவங்க யாரு ? 1996 -இல் முத்தமிழறிஞர் கலைஞரின் அரசு உருவாகிறது. உருவாகிய பிறகு பாண்டியன் போக்குவரத்துக் கழகத்திலிருந்துப் பிரித்து விருதுநகரைத் தலைமையிடமாகக் கொண்டு வீரன் சுந்தரலிங்கம் போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்படுகிறது. வீரன் சுந்தரலிங்கம் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர். இடைநிலை ஆதிக்கச் சாதியினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வீரன் சுந்தரலிங்கம் பெயர் தாங்கிய பேருந்துகள் தங்கள் ஊருக்குள் வருவதைத் தடை செய்தனர்.
பேருந்துகளை அடித்து நொறுக்கிக் கலவரம் செய்தனர். சாலை மறியல் செய்து தென்மாவட்டமே கலவர பூமியானானது. இது நடந்தது 1997 இல். முடிவில், முத்தமிழறிஞர் கலைஞர் வீரன் சுந்தரலிங்கத்தின் பெயரை மட்டும் நீக்க முடியாது என்பதில் திட்டவட்டமாக இருந்தார். இந்தச் சிக்கல் தான் பஸ்ஸு வேண்டாம்ன்னு சொல்ற சிக்கல். இந்தப் பிரச்சனையில் கலைஞர் நின்றது தாழ்த்தப்பட்டோர் பக்கம். அப்ப, பஸ்ஸு வேணும்ன்னு சொல்ற சிக்கல், போலீஸ் அராஜகம் எல்லாம் நடந்தது. அது நடந்தது 1991 முதல் 1996 வரை நடந்த ஜெயலலிதா ஆட்சியில். அன்றைய ஜெயலலிதா ஆட்சியில் தமிழ்த் தேசியர்கள் போற்றிப் புகழும் இராஜமாதா சசிகலாவும், இராஜமாதாவின் கணவர் நடராஜனும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை ஒன்றிணைத்து அதனை அண்ணா திமுகவின் வாக்கு வங்கியாக மாற்றினர். அதன் விளைவுதான் அந்தக் கலவரங்களும், ஏராளமான உயிர்ப்பலிகளும். “நான் பிறந்தது வேறு சமூகமாக இருந்தாலும், வளர்ந்ததும் என்னை வளர்த்ததும் சமூகமே. அதனால் சமூகத்தைச் சேர்ந்த ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வராக்குவதில் பெருமையடைகிறேன்” ன்னு சொன்னது வேறுயாருமில்லை,
ஜெயலலிதா தான்.ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற இக்கலவரத்தினால் மேலெழுந்து அந்த மக்களுக்குப் பாதுகாப்பு அரணாக தோன்றியவர்களில் ஒருவர் Dr. கிருஷ்ணசாமி. அன்று திரு. ஜான் பாண்டியன் பாட்டாளி மக்கள் கட்சியில் இளைஞரணிச் செயலாளராக இருந்தார். Dr. கிருஷ்ணசாமி 1996 தேர்தலில், ஜெயலலிதா எதிர்ப்பு அலையையும் தாண்டி சுயேச்சையாக (ஜனதா கட்சிச் சின்னத்தில்) வெற்றி பெற்று சட்டமன்றம் சென்றார்.1994-95ல் தூத்துக்குடியின் கலெக்டராக இருந்தவர் ஒரு குறிப்பிட்ட இடைநிலை ஆதிக்கச் சாதியைச் சார்ந்தவர் என்பதால் கொடியன்குளம் கலவரம் ஏற்பட்டது. அதனால் 1996 இல் அமைந்த முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில், மேலும் தென்மாவட்டங்களில் சாதிக் கலவரம் நடைபெறாமல் தடுக்க பட்டியலினம் உள்ளிட்ட மூன்று பெரும்பான்மை சாதியினர் தென்மாவட்டங்களில் வருவாய்த்துறை மற்றும் காவல் துறையின் முக்கிய பொறுப்புகள் வகிக்கத் தடையாணை பிறப்பித்தார். 2001ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு அந்த அரசாணை நடைமுறை படுத்தப்படவில்லை என்று சொன்னது வேறு யாருமில்லை, Dr. கிருஷ்ணசாமியே தான்.வரலாறு இவ்வாறிருக்க, 1996க்கு முன் நடந்த கொடியன்குளம் கலவரத்தையும், 1997 இல் நடந்த வீரன் சுந்தரலிங்கம் போக்குவரத்துக் கழகப் பிரச்சினையும் குழப்புவது போல் மாரி செல்வராஜ் காட்டியிருப்பது முதல் தவறு. Dr. கிருஷ்ணசாமி சொல்வது போல், அன்று மாவட்ட ஆட்சியராக இருந்தவருக்கு இக்கலவரத்தில் நேரடி தொடர்பு இருக்கும் போது, அவரை மிகவும் நல்லவர் போல் காட்டியிருப்பது இரண்டாவது தவறு.
இதெல்லாம் நடந்த அண்ணா திமுக ஆட்சிக்கு சான்றாகும் வகையில் திரையில் ஒரு இடத்தில் கூட ஜெயலலிதாவின் படமோ, அண்ணா திமுக போஸ்டரோ இல்லை என்பது எதேச்சையாக நடந்ததாக எடுத்துக் கொள்ள முடியாது. இது மூன்றாவது தவறு.சரி, திமுக ஆட்சியில் பட்டியல் சாதியினர் மீது அரசவன்முறையே நிகழவில்லையா என்றால், இல்லை. நிகழ்ந்திருக்கின்றன. எடுத்துக்காட்டாக, அதிகம் பேசப்பட்ட மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர் பிரச்சினை. காவல்துறை தடியடிக்குப் பயந்து தாமிரபரணி ஆற்றில் குதித்து 17 பேர் மாண்டனர். காரணம் என்னவாக இருந்தாலும், அது அரச வன்முறை தான். தவறு தான். ஒருவேளை மாரி செல்வராஜ் அந்தக் கதையைப் பூஞ்சோலை தோட்டத் தொழிலாளர் பிரச்சினை என்று படமாக எடுத்து, 1999 க்குப் பதில் 2002 என்று போட்டாலும் தவறு தான்.மாரி செல்வராஜ் பதின்ம வயதினை அடைந்து, தன்மக்களுக்கான அரசியலைத் தேடத் தொடங்கிய போது நிகழ்ந்த நிகழ்வாக மாஞ்சோலைப் பிரச்சினை இருந்திருக்கலாம். அதனால் அவருக்குத் திமுக மீது ஒரு ஒவ்வாமை கூட இருக்கலாம்.
அதையெல்லாம் நான் புரிந்து கொள்கிறேன். ஆனால், வரலாற்றை மாற்றிச் சொல்லித் திரைப்படங்கள் மூலம் பிரச்சாரம் செய்வது அறமாகாது. வீரன் சுந்தரலிங்கம் பெயரினை நீக்க முடியாது , அது அறமன்று – நீக்கினால் பெரியார், அண்ணா, பசும்பொன் முத்துராமலிங்கம் உட்பட அனைவரின் பெயர்களையும் மாவட்டங்களிலிருந்தும், பேருந்துகளிலிருந்தும் நீக்குவேனென்று சொல்லி நீக்கினாரே முத்தமிழறிஞர் கலைஞர் அவரும் தஞ்சாவூர் மாவட்டத்தில் கடும் அடக்கு முறைக்கு உள்ளான சாதியில் பிறந்தவர் தான் என்பதை மாரி செல்வராஜ் தெரிந்து கொள்ள வேண்டும். கலைஞரின் இந்த நீக்கத்தினை ஜெயலலிதாவின் சாதனையாக ஒரு பேட்டியில் சொன்னவர் ஆய்வாளர் தொ.ப (இந்து தமிழ் பேட்டி என்று நினைக்கிறேன்). திமுக ஒவ்வாமை எவ்வாறு ஒருவர் கண்களை மறைக்கும் என்பதற்கு இது இன்னொரு எடுத்துக்காட்டு.சமரசமின்றித் தலித் அரசியல் பேசுங்கள் மாரி செல்வராஜ். ஆனால், பகை முரண் எது, நட்பு முரண் எது என்று அறிந்தும் அறியாதவர் போலிருக்காதீர்கள்.
அந்த இடத்தில் சறுக்கியதால் தான், உழைக்கும் மக்கள், தங்களின் ஒப்பற்ற தலைவர்களாக மேலேற்றிய இரு மருத்துவர்கள் , இராமனின் பெயரையும், கிருஷ்ணனின் பெயரையும் தாங்குவதாலோ என்னவோ, இந்துத்துவத்தின் காலடியில் அந்த உழைக்கும் மக்களை அடகு வைத்துவிட்டனர். அண்ணா திமுக வையும் திமுகவையும் ஒன்றென சொல்லும் அரசியலே அறமற்றது எனும் போது, அண்ணா திமுகவின் வழக்குகளையெல்லாம் திமுகவின் மேல் திருத்தி எழுதுவது எப்படி நேர்மையாகவிருக்கும்.வரலாற்றினைப் பிழையாகச் சொல்லாமல், தொடர் வெற்றிகளைக் குவிக்க மனமார்ந்த வாழ்த்துகள்.வீரன் சுந்தரலிங்கம் போக்குவரத்துக் கழகப் பேருந்து தொடர்பான படங்களை மருத்துவர் ஷியாம் கிருஷ்ணசாமியின் ட்விட்டர் பக்கத்திலிருந்து எடுத்துக்கொண்டேன்.