09.11.2008.
அண்மைக் காலத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் 8 உறுப்பினர்கள் கொல்லப்பட்டதுடன், 4 பேர் காயமடைந்திருந்தனர். இந்த நிலையில் அண்மையில் பதவி உயர்த்தப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் 42 உறுப்பினர்களுக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன், இராணுவத்தினரின் பாதுகாப்பைக் கோரியுள்ளார்.
கடந்த சில வாரங்களாக மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் தொடர்ச்சியாகக் கொல்லப்பட்டு வருகின்றனர். விடுதலைப் புலிகளே இந்தப் படுகொலைகளுக்குக் காரணம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இராணுவத்தினரின் பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக கருணா தனது உறுப்பினர்களை நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பிலும், வெலிகந்தவிலும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஏனைய உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படவிருப்பதுடன், விடுதலைப் புலிகளின் ஊடுருவல் தாக்குதல்கள் குறித்து உறுப்பினர்களை விளிப்புனர்வுடன் இருக்குமாறு பணிப்புரை வழங்கியிருப்பதாக கருணா கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கிழக்கு மாகாணசபைக்கான பொலிஸ் அதிகாரம் குறித்து கருணா தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக கருணா தரப்பினருக்கும், பிள்ளையான் தரப்பினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே கருணாவுக்கு ஆதரவானவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.