தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணாவால் பரிந்துரை செய்யப்பட்ட இரண்டு பிரதிநிதிகளை ஏற்றுக்கொள்ள முடியாதென சர்வகட்சிப் பேரவை நேற்று அறிவித்துள்ளது.
சர்வகட்சிப் பேரவையின் அமர்வுகளில் ஏற்கனவே இரண்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் அங்கம் வகித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எஸ்.கமலநாதன் மற்றும் சின்னய்யா ஆகியோரை தனது பிரதிநிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் கருணா அம்மான் பரிந்துரை செய்துள்ளார்.
தற்போது சர்வகட்சிப் பேரவையின் அமர்வுகளில் பங்கேற்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களாக சிவகீதா பிரபாகரன் மற்றும் அசாத் மௌலானா ஆகியோரை எதிர்கால அமர்வுகளில் கலந்துகொள்ளக் கூடாதென கருணா அம்மான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நேற்றைய அமர்வுகளில் கலந்துகொள்வதற்காக கருணாவினால் அனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிரதிநிதிகளையும் ஏற்றுக்கொள்ள முடியாதென சர்வகட்சிப் பேரவை அறிவித்துள்ளது.
சில காலங்களாக பேரவையில் பிரதிநிதித்துவம் வகிக்கும் உறுப்பினர்களுக்கு பதிலாக புதிய உறுப்பினர்களை ஏற்றுக்கொள்ள முடியாதென பேரவையின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பொதுச் செயலாளர் கைலேஸ்வரராஜாவினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதமொன்றும் நேற்றைய அமர்வுகளின் போது வாசிக்கப்பட்டது.
கிழக்கில் தொடரும் சிவிலியன் படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமது கட்சி உறுப்பினர்கள் பேரவையின் அமர்வுகளை பகிஷ்கரிப்பதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கட்சியின் தலைவர் என்பதனை உறுதிப்படுத்துமாறு கருணாவிடம் கோருவதற்கு சர்வகட்சிப் பேரவை தீர்மானித்துள்ளது.
கட்சியின் உத்தியோகபூர்வ தலைவர் என்பதனை கருணா நிரூபித்தால், அவரது பிரதிநிதிகளை ஏற்றுக்கொள்ளக் கூடிய சாத்தியம் இருப்பதாக பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
எதிர்வரும் வாரத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் அமைப்பு ரீதியான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட உள்ளதாக கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.
மேலும், கிழக்கின் பாதுகாப்பு நிலவரம் குறித்து பாதுகாப்பு செயலாளர் கோதபாய, இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் கருணா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.