தமிழக முதல்வர் கருணாநிதியைக் கைதுசெய்து தமிழகத்தில் ஆட்சியைக் கலைக்கவேண்டும் என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் கோரிக்கை விடுத்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வரும் நபர்களைக் கைதுசெய்யாமல், வேண்டுமென்றே வைகோவையும் கண்ணப்பனையும் முதல்வர் கைதுசெய்திருப்பதாக ஜெயலலிதா இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைத் தமிழர் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் என்ற போர்வையில் இராமேஸ்வரத்தில் நடைபெற்ற திரைப்படத் துறையினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, இந்தியாவின் இறைமைக்கு எதிராகக் கருத்துக்களைத் தெரிவித்த திரைப்பட இயக்குநர்களான பாரதிராஜா, சீமான், அமீர், ராம.நாராயணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது. சட்டத்தின் முன் அனைவரும் சமமானது எனவும் இதில் பாரபட்சம் காட்டமுடியாது எனவும் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கும் ஜெயலலிதா,இலங்கைத் தமிழர் விடயத்தில் கருணாநிதி நாடகம் ஆடுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசும், பேசத் தூண்டும் பாரதிராஜாவையும் சீமானையும் அமீரையும் கைது செய்யாமல், வைகோவையும் கண்ணப்பனையும் கைது செய்திருப்பதன் உள்நோக்கம் என்ன என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
மத்திய அரசாங்கம் கருணாநிதியையே முதலில் கைதுசெய்யவேண்டும் எனவும், அவரைக் கைது செய்துஇ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் கருணாநிதி தலைமையிலான அரசாங்கத்தைக் கலைக்க வேண்டுமெனவும் ஜெயலலிதா தனது அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.