கனவும் காலமும்
மீண்டும் ஒரு காட்டு வழி பயணம்
தொடரக் கூடும்
முன்னரை விட கடுமையானதாய்!
நெடுங் கனவுடன் இணைந்து
எஞ்சியிருப்பவர்களுடன்
வந்து போனகடற் பயணங்களும்
இருண்டு தெரிந்த பாதைத்தடங்களும் நினைவலைகளில் அலையும்
பாதியில் நின்று போன பயணம் தொடர
சொந்த நிலத்தில்
மீண்டும் ஒரு தலைமறைவு காலம் வாய்க்கும்
எனில்
இந்த தடவை எமக்கு
ஒரு பிடி சோறிடுவது தென்னிலங்கை தாய்!
செண்பகங்கள் கண்களில் தென்படுவதாகவும்
வண்ணத்து பூச்சிகள் தைரியமடைந்துள்ளதாகவும்
அணில்களும் தவளைகளும் குதூகலித்து திரிவதாகவும்
மாற்றங்களை நண்பர்கள் பட்டியலிடுகையில்
முகங்களில் , மனங்களில்
ஒளி வழிவதை மறைக்க முடிவதில்லை
யாருக்கு தெரியும் இது நம்பிக்கை நிறைந்த
வாழ்வுக்கான தொடக்கம் என்பது?
தெற்கின் இனிய காற்று மிக நுட்பமாய் வந்து
ஆழ்ந்த புரிதலுடன்
நலம் விசாரிக்க
வடக்கின் கிழக்கின் வெம்மை தணியும்
வழியெல்லாம் பூக்கள் மலர
கண்ணீரும் பசியும் உலவும்
வாழ்வு எனும் நெடு வீதியில்
தனித்த பயணம் இனி ஏது?
பறிபோகும் எதிர்காலத்தை பற்றிப் பிடிக்க
இனி அகதிகளாவதில்லை அனாதைகள் ஆவதில்லை
இனவாதிகளுக்காய் எங்கோ வாழும் தலைவர்களுக்காய்
இனி யாருக்காய் வாழ்வதென்று
உயரும் கரங்கள் காற்றில் எழுகின்றன!