“எனது கணவர் கடந்த 20 வருட காலமாக பீட்டர் மெக்லரின் குறிக்கோளான இலக்கை எட்டுவதற்கான பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
ஊடகத்துறையில் பீட்டரைப்போல பலருக்கு உதவி ஒத்தாசைகள் புரிந்து ஊடகத்துறையில் பயிற்சி பெறவும் எழுதவும் உதவியுள்ளார். கடினமான சூழ்நிலையிலும் துணிவுடன் நடந்து கொள்வது குறித்து இன்று என் கணவர் போதித்து வருகிறார். எந்தச் சூழ்நிலையிலும் இரக்கமற்ற செயல்களுக்கு அவரிடம் மன்னிப்பே கிடையாது. சக மனிதர்கள் கௌரவத்துடன் நடத்தப்பட வேண்டும் என்பதே அவரது எண்ணமாகும்”
இவ்வாறு, நீதி நெறியுடன் கூடிய துணிகரமிக்க ஊடகவியலாளருக்கான பீட்டர் மெக்லர் விருது முதல் முறையாக இலங்கை ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகத்திற்கு வெள்ளிக்கிழமை அமெரிக்காவில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் வழங்கப்பட்ட போது ரொன்னேட் திஸ்ஸநாயகம் தெரிவித்தார்.
ஜே.எஸ். திஸ்ஸநாயகம் தற்போது 20 வருட சிறைத்தண்டனைக்கு உட்பட்டுள்ள நிலையில் அவருக்கு துணிகரமிக்க ஊடகவியலாளருக்கான பீட்டர் மெக்லர் விருது அமெரிக்காவில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் வழங்கப்பட்டுள்ளது.
திஸ்ஸநாயகம் சார்பில் அவரது மனைவியான ரொன்னேட் திஸ்ஸநாயகம் தேசிய ஊடக கழகத்தில் இந்த விருதினைப் பெற்றுக் கொண்டார்.
பாரிஸைத் தளமாகக் கொண்ட ஊடக உரிமைகள் குழுவான எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பும் உலக ஊடகமன்றமுமான இந்த நிறுவனத்தின் அமெரிக்க கிளையினால் திஸ்ஸநாயகம் இந்த விருதுக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிறுவனம் பிரபல ஊடகவியலாளர் பீட்டர் மெக்லரால் உருவாக்கப்பட்டதாகும். இதன் நோக்கம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த இலாபத்தைக் கருதாத வகையில் ஊடகத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாகும்.
இவ்வைபவத்தின் போது ஆரம்ப உரையில் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் மார்கல் புரோச்லி தெரிவிக்கையில், அடக்கு முறை ஆட்சி நிலவும் பிரதேசங்களில் பணிபுரியும் ஊடகவியலாளர்களுக்கு தமது மரியாதையைச் செலுத்தினார்.
இவ்வாறு சிறந்த முறையில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் அவர்களின் துணிகர செயற்பாடுகளுக்காக பீட்டர் மெக்லர் விருதினை வழங்கி ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்றார்.
இதேவேளை, நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான செயலணி, 2009 ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஊடக சுதந்திர விருதுக்கும் திஸ்ஸநாயகத்தை தெரிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது