10.11.2008.
அதிகரித்துவரும் கடல் மட்டம் மாலத்தீவுகளை மூழ்கடிக்கும் அபாயம் அதிகரித்து வருவதால், தமக்கு புதிய ஒரு தாயகத்தை வாங்குவதற்கான புதிய நிதியம் ஒன்றை ஏற்படுத்த தனது புதிய அரசாங்கம் விளையும் என்று அந்த நாட்டின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரான முஹமட் நஷீட் தெரிவித்துள்ளார்.
அந்த நாட்டின் சுற்றுலாத்துறையின் மூலம் கிடைக்கும் பணத்தில் இருந்து இந்த நிதிக்கு முதலீடு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மாலத்தீவுகளின் பெரும்பாலான தரைப்பகுதி ஒரு மீட்டரை விட சிறிது கூடுதலான அளவுக்கே கடல்மட்டத்தை விட உயரமாக உள்ளது.
இந்த தீவுக்கூட்டம் இறுதியாக இந்துசமுத்திரத்தில் அப்படியே மறைந்து போய்விடும் என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் நினைக்கிறார்கள்.
உலகிலேயே மிகவும் தாழ்வான நாடு இந்த மாலத்தீவுகள். – இதன் மிகவும் உயர்வான தரைப்பகுதி கடல் மட்டத்தில் இருந்து சில மீட்டர்கள்தான் உயரமாக இருக்கும்.
இந்த நூற்றாண்டில் உலகெங்கும் கடல் மட்டம் சுமார் 60 சென்டிமீட்டர்கள் உயரலாம் என்று ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.
ஒருவேளை தமது நாட்டை விட்டு தாம் வெளியேற நேர்ந்தால், வாங்கப்போகும் புதிய இடத்தில் தமது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்பது மாலத்தீவு அதிபரின் எதிர்பார்ப்பு.
தமது பிராந்தியத்திலேயே, கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கலாச்சாரத்தை கொண்ட நாடுகளில் அப்படியான காணியை வாங்க அவர்கள் விரும்புகிறார்கள். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளை இதற்காக அவர்கள் விரும்புகிறார்கள்.
இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்காதுபோனால், மாலத்தீவுகளின் மூன்று லட்சம் மக்களின் எதிர்கால சந்ததி சுற்றுச்சூழல் அகதிகளாக மாற நேரிடலாம் என்று அதிபர் முஹமட் நஷீட் அஞ்சுகிறார்