தமிழக தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் சொத்து மதிப்பை தாக்கல் செய்து வருகிறார்கள். பொதுவாகவே அரசியல் இருப்பவர்கள் கோடீஸ்வரர்கள் என்பதால் அவர்களின் சொத்துக்களை தெரிந்து கொள்வதில் பொதுமக்களிடம் ஒரு ஆர்வம் இருக்கும். அந்த வகையில் இந்த தேர்தலிலும் முக்கிய தலைவர்களின் சொத்து மதிப்பு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.
எடப்பாடி பழனிசாமியின் சொத்து மதிப்பு!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த சொத்து மதிப்பில்
தனக்கு 47,64,542 ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதில் ரொக்கமாக 6 லட்சம் ரூபாய் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். அவர் மனைவி ராதாவின் பெயரில் சுமார் 1.04 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்கள் இருக்கின்றன.தன்னை விவசாயி என்று சொல்லும் முதல்வரின் பெயரில் வேளாண் நிலம் எதுவும் இல்லை. அவர் மனைவியின் பெயரில் 6 ஏக்கர் விவசாய நிலமும், அவர்கள் குடும்பத்துக்கு 15.65 ஏக்கர் நிலமும் இருக்கிறது. விவசாய நிலம் மட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமியின் பெயரில் எந்தவொரு அசையாத சொத்துக்களும் இல்லை. மாறாக 15 லட்ச ரூபாய்க் கடன் மட்டும் இருக்கிறது. அவர் மனைவி பெயரில் 1.78 கோடி ரூபாய் மதிப்பிலும், அவர்கள் குடும்பத்துக்கு 2.9 கோடி ரூபாய் மதிப்பிலும் அசையாத சொத்துக்கள் இருக்கின்றன. வருமான வரிக் கணக்கில் காட்டப்பட்டிருக்கும் அவரது ஆண்டு வருமானம், கடந்த 2 ஆண்டுகளில் பலமடங்கு அதிகரித்திருக்கிறது. 2015-16, 2016-17, 2017-18 நிதி ஆண்டுகளில் 4 லட்ச ரூபாய்க்கும் குறைவாக இருந்த அவரது ஆண்டு வருமானம், அடுத்த வருடம் 10 லட்ச ரூபாயைத் தொட்டது. 2019-20 நிதி ஆண்டிலும் சுமார் 8 லட்ச ரூபாய் வருமானமாகக் காட்டப்பட்டிருக்கிறது.
#
ஸ்டாலினின் சொத்துமதிப்பு!
4,94,84,792 ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்கள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், இவர் பெயரிலோ, இவர் மனைவியின் பெயரிலோ வாகனங்கள் எதுவும் இல்லை! இவரின் அசையாத சொத்துக்களின் மதிப்பு 2,24,91,410 ரூபாய். 2018-19 நிதி ஆண்டில் சுமார் 18 லட்ச ரூபாயாக இருந்த அவரது வருமானம், அடுத்த ஆண்டு சுமார் 10 லட்ச ரூபாய் கூடியிருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் 28,78,120 ரூபாய் வருமானம் என்று வருமான வரிக் கணக்கில் காட்டியிருக்கிறார் ஸ்டாலின்.
தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் 2.86 ஏக்கர் வேளான் நிலம் இவர் பெயரில் இருக்கிறது. அந்த நிலத்தின் நடப்பு மதிப்பு தோராயமாக 2,17,490 ரூபாய் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. வேளச்சேரி சீதாபதி நகரில் இருக்கும் அவர் வீட்டின் நடப்பு சந்தை மதிப்பு 92,42,296 ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதேபோக, திருவாரூர் மாவட்டத்தில், சுமார் பதினேழரை லட்சம் மதிப்பிலான வீடு ஒன்றும் இருக்கிறது. ரொக்கமாக தன்னிடம் 50,000 ரூபாய் மட்டுமே இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார் ஸ்டாலின். அவர் மனைவி துர்கா ஸ்டாலினிடம் 25,000 ரூபாய் ரொக்கம் இருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.
#
தினகரனின் சொத்துமதிப்பு
டிடிவி தினகரன் தமது பெயரில் உள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு 19,18,485 ரூபாய் என்றும், அசையா சொத்துகளின் மதிப்பு 57,44,008 என்றும் வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.அவரது மனைவி பெயரில் உள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு 7,66,76,730 ரூபாய் என்றும் அசையா சொத்துகளின் மதிப்பு 2,43,76,317 ரூபாய் என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.தமது வாரிசுதாரர் பெயரில் அசையும் சொத்தாக 1,39,76,777 ரூபாய் இருப்பதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சீமானின் சொத்து மதிப்பு!
சீமான் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில், ‘அவருடைய அசையும் சொத்தும் 31,06,500 ரூபாயும், அசையா சொத்து ஏதுமில்லை என்றும் தெரிவித்துள்ளார். அவருடைய மனைவிக்கு அசையும் சொத்து 63,25,031 ரூபாயும், அசையா சொத்து 25,30,000 ரூபாயும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 65,500 ரூபாய் மட்டுமே வருமானம் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 2019-2020-ம் ஆண்டு வருமானம் 1,000 ரூபாய் மட்டுமே என்று சீமான் குறிப்பிட்டுள்ளார்.இந்த வகையில் சீமான் நாளொன்றுக்கு 2.77 ரூபாய் சம்பாதிப்பவராக உள்ளார்.
#
கமல்ஹாசனின் சொத்து மதிப்பு !
கமல்ஹாசனுக்கு 45 கோடியே 9 லட்சம் ரூபாய் அளவில் அசையும் சொத்தும், 131 கோடியே 84 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அசையா சொத்தும் இருப்பதாக வேட்புமனுவில் கூறப்பட்டுள்ளது. அதோடு அவரது கடன் அளவு 49 கோடியே 50 லட்சத்து 11 ஆயிரத்து 10 ரூபாயாகும். மொத்தமாக கமல்ஹாசனின் சொத்து மதிப்பு 176 கோடியே 93 லட்சத்து 46 ஆயிரத்து 476 ரூபாயாக உள்ளது.
மேலும் அவருக்கு 2 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பில் லெக்சஸ் மாடல் காரும், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பி.எம்.டபிள்யூ காரும் உள்ளதாக வேட்புமனுவில் கூறப்பட்டுள்ளது. கமல்ஹாசனுக்கு லண்டனில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடு உள்ளது.