27.11.2008.
இந்திய அரசாங்கத்துடனான உறவுகளை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள விரும்புவதாக விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தனது மாவீரர் தின உரையில் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கி, தமிழீழப் போராட்டத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டுமெனவும், கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்புணர்வுகளை மறந்து இந்தியவுடனான உறவுகளைப் புதுப்பிக்க விரும்புவதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கும், முன்னைய இந்திய ஆட்சிபீடத்துக்கும் இடையிலான உறவுகளை இலங்கை அரசாங்கமே தனது கபட நாடகங்களால் சீர்குலைத்துவிட்டன எனத் தெரிவித்த விடுதலைப் புலிகளின் தலைவர், தமிழீழப் போராட்டத்துக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் எழுச்சிகொண்டு ஆதரவு தெரிவித்துவரும் தமிழக உறவுகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
தனியரசுப் போராட்டத்துக்கு ஆதரவாகக் குரல்கொடுப்பதுடன், விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்குவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் பிரபாகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சமாதானப் பேச்சுவார்த்தைகளில் தாம் ஆர்வம்காட்டியபோதும், இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காக சமாதனம் பேசுவதாக நாடமாடிவிட்டு தற்பொழுது தமிழ் மக்கள் மீதான இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்திருப்பதாகவும், தமிழர்களுக்கு எதிரான மோதல்கள் ஆரம்பித்ததாகவும், அரசாங்கத்தின் போர் நடவடிக்கைகளால் தமிழர்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகளின் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து போராடுவோம்
எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் தமிழர்களின் விடிவுக்காகத் தொடர்ந்தும் போராடப்போவதாக வே.பிரபாகரன் தனது மாவீரர் தின உரையில் தெரிவித்துள்ளார்.
சிங்கள ஆக்கிரமிப்பு தமிழர் பிரதேசத்திலிருந்து அகலும்வரை எத்தனை சவால்கள் வந்தாலும், எத்தனை சக்திகள் எதிர்த்தாலும் அதற்கு எதிராகத் தொடர்ந்தும் போராடப் போவதாகத் தெரிவித்திருக்கும் அவர், தமிழர்களைக் அழித்துவிட்டு யாருக்கு அரசியல் தீர்வை இலங்கை அரசாங்கம் முன்வைக்கப்போகிறது எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழர் இனப்பிரச்சினை விடயத்தில் கடந்த 60 வருடங்களாக ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் அடக்குமுறையென்ற ஒரே பாதையிலேயே பயணிப்பதால் தமிழர்களுக்குத் தீர்வொன்றை முன்வைக்க அது தயாரில்லையென்பது தெளிவாவிட்டது எனவும் விடுதலைப் புலிகளின் தலைவர் தனது மாவீரர் தின உரையில்மேலும் குறிப்பிட்டார்.
தமிழீழப் போராட்டத்துக்கு உலகெங்கும் வாழும் தமிழர்கள் தொடர்ந்தும் உதவிகளைச் செய்யவேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.