கடந்த காலங்களில் இடம் பெற்ற சம்பவங்களின் உண்மைத்தன்மையை அறிக்கையிடுவதும், அதை ஏற்றுக் கொள்வதும் இன்றியமையாதது என நம்புகின்றோம். குறிப்பாக சர்வதேச மனித உரிமைகள், மனிதாபிமான நியமங்களுக்கு(சட்டங்கள்) எதிரான மீறல்கள், வன்முறையாகக் காணாமல் ஆக்குதல், நீதிக்கு அப்பாற்பட்ட கொலைகள், சட்டத்திற்குப் புறம்பாகத் தடுத்து வைத்தல், சித்திரவதைகள், வழிபாட்டுத் தலங்கள்- வைத்தியசாலைகள்- மக்கள் குடியிருப்புக்கள் மீது நடாத்தப்படும் விமானக் குண்டு வீச்சு, எறிகணை வீச்சு ஆகியனவும் இவற்றைச் செய்யும் படியாகக் கட்டளை இட்ட அதிகாரிகளின் பொறுப்பும் வெளிப்படையாகவே அறிவிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். மன்னிப்பதற்கும் அல்லது பொது மன்னிப்பு வழங்குவதற்கும் அறிக்கையிடலும் ஏற்றுக் கொள்ளலும் அவசியம் என்றே கருதுகின்றோம் என மன்னார் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ளார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் சனிக்கிழை 08 ஆம் திகதி மன்னாரில் இடம் பெற்ற போதே ஆயர் இவ்வாறு சாட்சியமளித்திருக்கிறார். மன்னர் மறைமாவட்ட ஆயர் எழுத்து மூலம் கேட்டுக்கொண்டதன் பிரகாரம் ஆணைக்குழு அமர்வுகளை மன்னாரில் நடாத்தியது.
மன்னார் ஆயர் தனது சாட்சியத்தை முழுமையாகத் தெரிவிக்க முடியாததால் மாவட்ட குழு முதல்வர் பிதா விக்டர் சோசை, மன்னார் குருமட அதிபர் பிதா சேவியர் குரூஸ் ஆகியோர் ஆயரின் சாட்சியத்தை அறிக்கையாக ஆணைக்குழு முன் வாசித்தனர்.
மன்னார் மாவட்டத்தில் மூன்று தசாப்தங்களாக பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்பு அடைந்திருக்கிறார்கள். இருந்தும் எமக்கு கொடுக்கப்பட்ட அமர்வுக்கான காலம் போதாமையாகவே இருக்கின்றது.
இனப்பிரச்சினைக்கான தீர்வும், நல்லிணக்கமும் எட்டப்பட வேண்டுமாயின் நாம் 2002 ஆம் ஆண்டுக்குப் பின்னோக்கி இன்னும் கடந்து இனப்பிரச்சினையின் ஆரம்ப காலத்தில் இருந்து நடந்த சம்பவங்களை இந்தக் குழு ஆராய வேண்டும் என கருத்து வெளியிடுகிறோம்.
உண்மையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளோ, அல்லது ஏனைய ஆயுதக் குழுக்களோ தமிழர் பிரச்சினையின் காரணமல்ல. மாறாக தமிழர் பிரச்சினையை அரசுகள் கையாண்ட முறைகளின் விளைவாகத் தோன்றியதே இக்குழுக்கள் என்பதை கூறி வைக்க விரும்புகின்றோம்.
அடிப்படைக் காரணங்களாகிய தமிழ் மக்களுடைய அரசியல் யதார்த்தம் – மொழி, நிலம், கல்வி, அரசியல் அதிகாரப் பகிர்வு இவற்றைப் புரிந்து கொள்ளும் போதுதான் நல்லிணக்கத்தை நோக்கிய பயணத்தை ஆரம்பிக்கலாம். பாடங்களையும் கற்றுக் கொள்ளலாம்.
இலங்கையில் உள்ள தமிழ் மக்களை ஏனைய இனத்தவரோடு சேர்ந்து ஒரே நாட்டிலே வாழ்ந்தாலும் அவர்களுக்கென விசேட அடையாளங்களாகிய பண்பாடு, மொழி, மதம், வதிவிடம் உண்டு என்பதை ஏற்றுக் கொண்டு இதன் வழியாக ஒரு அரசியல் தீர்வை மக்களுக்கு கொடுக்க வேண்டும்.
அதிகாரப் பரவலாக்கம் சிறு பாண்மையினருடைய உரிமைகள் அரசியல் அமைப்பிலே ஆழமாகப் பதியப்படல் வேண்டும். அரசியலமைப்பும் நீதித்துறையும் எந்தவொரு இனம், மதம், குழுவிற்கு சார்பாக இருக்கக் கூடாது. அது தெரியவும் கூடாது. அந்த வகையில் அரசியல் தீர்வு ஊடாக பிரச்சினைகள் களையப்பட வேண்டும்.
உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் வன்முறையாகக் காணமல் போகுதல், தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்கள்- நீதிக்குப் புறம்பான விசாரணைகள் அற்ற போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பனர்வாழ்வு- முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு, நிரந்தர வீடுகள்,வாழ்வாதாரம், சுகாதாரம், கல்வி, போக்குவரத்து வசதிகள், மற்றும் இடம் பெயர்ந்த முஸ்லிம் மக்கள் மீள் குடியேற்றுவதற்கு சாதகமான சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதுவேயாகும் என சாட்சியமளித்துள்ளனர்.