இலங்கை அரசால் கச்சத்தீவு ஒப்பந்தம் மீறப்பட்டு வருவதாக முதலமைச்சர் கருணாநிதி குற்றம்சாற்றினார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதலமைச்சர் கருணாநிதியிடம், கச்சத்தீவு ஒப்பந்தம் என்பது முடிந்துபோன கதை; அதை மாற்ற முடியாது என்று மத்திய அயலுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா சொல்லி இருக்கிறாரே? என்று கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் கருணாநிதி, ஒப்பந்தம் முடிந்துபோன கதை என்று சொல்லப்பட்டாலும் அந்த ஒப்பந்தத்தில் இரு சாராரும் ஏற்றுக் கொண்ட பல பகுதிகள் இருக்கின்றன. குறிப்பாக அங்கே யாத்திரை செல்கின்ற மக்களுக்கு இடையூறு இருக்கக்கூடாது. கச்சத்தீவு பகுதிகளில் மீன் பிடிக்கின்ற உரிமை தமிழ்நாட்டு மீனவர்களுக்கு உண்டு.
கச்சத்தீவு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டபோது, இந்த ஷரத்துக்கள் எல்லாம் இடம் பெற்றிருந்தன. ஆனால் அதன் பின்னர் ஏற்பட்ட நெருக்கடி நிலை காலத்தில் அந்த ஷரத்துக்கள் எல்லாம் மீண்டும் இலங்கை அரசால் திரும்ப பெற்றுக்கொள்ளப்பட்டு விட்டதாக தகவல் வெளியாயின. அதை மெய்ப்பிக்கின்ற வகையில் காரியங்கள் நடைபெற்று கொண்டு இருக்கின்றன.
ஒப்பந்தத்தை பரிசீலனை செய்வது என்பது கூட பிரச்சனை அல்ல; அதற்கு முன்பு தமிழ்நாட்டு மீனவர்களுக்கும், அதைப்போல இலங்கையில் உள்ள தமிழர்களுக்கும் எந்த இடையூறும் வராமல் இருக்க வேண்டும் என்பது மிக மிக முக்கியம். ஒப்பந்தம் செய்து கொண்ட போது போடப்பட்ட ஷரத்துக்களே மீறப்படுகின்றன என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்றார்.
மத்திய அரசின் மீனவர்கள் பற்றிய சட்டத்தை எதிர்த்து குமரியில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்களே என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த அவர், இந்தச் சட்டம் நாமும் ஏற்றுக் கொள்ளாத சட்டம்தான். அதனை கடிதம் மூலமாக ஏற்கனவே மத்திய அரசுக்கு அந்தத் துறை அமைச்சருக்குத் தெரிவித்திருக்கிறேன். அவர்கள் அதைப் பற்றி சிந்திப்பார்கள் என்று நம்புகிறேன். சிந்தித்து ஏற்ற முறையில் வழிவகுப்பார்கள் என்றார் கருணாநிதி.