ஒலுவில் பிரதேசத்தில் இலங்கையில் ராஜபக்ச பாசிச அரசின் கடற்படை அதிகாரி ஒருவர் வீடொன்றினுள் புகுந்து பெண்களிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். அவரை மடக்கிப் பிடித்த உள்ளூர் வாசிகள் தடுத்துவைத்திருந்தனர். அம்பாறை ஒலுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள கடற்படைச் சிப்பாய்கள் தலையிட்டு அவரை விடுதலைசெய்துள்ளனர். இவ்வாறான பாலிய வன்முறைகள் தொடர் நிகழ்வாகிவிட்டதால் நேற்று அங்கு வாழும் தமிழ் முஸ்லீம் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தையடுத்து அங்கு விரைந்த அக்கரைப்பற்று காவல் துறையினரிடம் குறித்த நபரைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஒலிவில் பிரதேசத்து பாடசாலைக் கட்டடமொன்றை ஆக்கிரமித்துள்ள கடற்படையினர் பொது மக்களின் அன்றாட வாழ்க்கையைச் சீர்குலைத்து வருவதாக உள்ளூர் வாசி ஒருவர் இன்று காலை தெரிவித்தார். தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் இணைந்து இப் போராட்டங்களில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார்.
இனவெறியூட்டி வளர்க்கப்பட்ட இலங்கை இராணுவம் வன்னியில் பெண்கள் மீதான வன்முறைகளில் ஈடுபட்டுவருவதாக செய்திகள் வெளியாகின. ஒலுவில் மக்கள் போராடியதை அடிப்படையாகக் கொண்டு வன்னியிலும் ஏனைய பகுதிகளிலும் இராணுவத்தின் மக்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க இச்சந்தர்ப்பதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.