“ஒற்றையாட்சியின் கீழ் நிரந்தர தீர்வை அடைய முடியாது” என தமிழர் விடுதலை கூட்டணித் தலைவர் வீ .ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.
நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் எனக் கருதி பொது நிலைப்பாடு ஒன்றை வலியுறுத்தும் முகமாக தமிழர் விடுதலை கூட்டணி சில தீர்மானங்களை வெளியிட்டுள்ளது.
கூட்டணியின் தலைவர் வீ ஆனந்த சங்கரியின் கையொப்பத்துடன் கூடிய மேற்படித் தீர்மான அறிக்கையிலேயே அவர் தனது கருத்தை இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
“ஒற்றையாட்சியின் கீழ் நிரந்தர தீர்வை அடைய முடியாது. எனவே இனப்பிரச்சினையின் நிரந்தர தீர்வுக்கு இந்திய அரசியல் சாசனத்தை ஒத்த தீர்வே பொருத்தமானதாகும்.
இதன் அடிப்படையில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களவர்கள் அனைவரும் அவர்கள் முன்னர் வாழ்ந்த இடங்களிலேயே மீள்குடியமர்த்தப்பட வேண்டும்.
சகல உயிரிழப்புக்களுக்கும் சொத்தழிவுகளுக்கும் முழு அளவிலான நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும்.
வடக்கு, கிழக்கு இணைப்பு பிரச்சினை இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு அமைய பொது ஜன வாக்கெடுப்பின் மூலம் தீர்க்கப்பட வேண்டும்.
பிழையான வழியில் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள், அவர்களின் விருப்பத்திற்கேற்ப கல்வி கற்க ஏதுவாக பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
தாமாக விரும்பி புலிகள் இயக்கத்தில் இணைந்தவர்களுக்கு தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.
தற்பாதுகாப்புக்கேனும் ஆயுதம் தாங்கியுள்ள குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட்டு, அவற்றுக்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
அகதிகளை மீள்குடியமர்த்தும் பணிகள் அரசாங்க அதிபரிடமும் அவரின் கீழ் கடமையாற்றும் அரச பணியாளர்களிடமும் ஒப்படைக்கப்பட வேண்டும்” என ஆனந்த சங்கரி தமது யோசனையில் குறிப்பிட்டுள்ளார்