நிலக்கரி வயல்களைப் பெற்றவர்கள் பட்டியலில் அம்பானியின் பெயர் இல்லையே என்று வாசகர்கள் வியந்திருக்கலாம். ம.பி மாநிலத்தில் சசான், ஜார்கண்டில் திலையா ஆகிய இரண்டு இடங்களில் மீப்பெரும் அனல்மின் திட்டங்களை இயக்குகிறது ரிலையன்ஸ் பவர். இங்கே உற்பத்தியாகும் மின்சாரத்தை யூனிட் ரூ.1.19 விலையில் அரசுக்கு விற்கவேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் அம்பானிக்கு 2007இல் இலவசமாக நிலக்கரி வயல்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலக்கரியை வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது என்பது நிபந்தனை.
மகாராட்டிரா மாநிலம் சித்ராங்கி எனும் இடத்தில் வணிக ரீதியில் மின்சாரத்தை விற்கும் 4000 மெகாவாட் அனல்மின் நிலையத்துக்கு இந்த இலவச நிலக்கரியைப் பயன்படுத்திக் கொள்ள முறைகேடாக அனுமதித்திருக்கிறது மன்மோகன் அரசு. இதனால் அம்பானிக்கு கிடைக்கும் ஆதாயம் 1.2 இலட்சம் கோடி என்கிறது சி.ஏ.ஜி அறிக்கை.