இலங்கை, பதுளை மாவட்டத்திலுள்ள கொஸ்லந்தை, ஹல்தும்முல்லை, மீரியபெத்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வசித்து வந்த ஒரு முழுக் கிராமமே நேற்று (29.10.2014) மண்ணுக்குள் புதையுண்டு போயுள்ளது. கிட்டத்தட்ட இருநூறுக்கும் அதிகமான மக்களை, அவர்கள் நேசித்த மண்ணே உயிருடன் விழுங்கிக் கொண்டுள்ளது. சடலங்கள் மீட்கப்படுகின்றன. 2004 இல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்திற்குப் பிறகு, இலங்கையில் பல நூறு உயிர்களைக் காவுகொண்ட இயற்கை அனர்த்தம் இதுவாகும். அதே போல இலங்கை, மலையக வரலாற்றில் இதுவரை இடம்பெற்றுள்ள மண் சரிவு அனர்த்தங்களில், இப்போது நிகழ்ந்துள்ள இந்த அனர்த்தத்தை மிகவும் மோசமான ஒன்றாகவும், பாரிய அழிவுகளை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிடப்படலாம்.
இக் கிராமத்தில் குறைந்தபட்சம் ஐம்பத்தேழு தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த முந்நூற்றைம்பது நபர்களாவது வசித்திருக்கலாம் என நம்பப்படுவதோடு, இந்த அனர்த்தம் நிகழ்வதற்கு முன்னர் வெளிப் பிரதேச பாடசாலைக்குச் சென்ற சிறுவர்,சிறுமியர்,வேலைகளுக்காகச் சென்ற சில தொழிலாளர்கள் என ஒரு சிலரே அனர்த்தத்தில் சிக்கிக் கொள்ளாமல் காப்பாற்றப்பட்டுள்ளனர். இழப்புக்கள் சம்பந்தமாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சரும், போலிஸ் ஊடகப் பேச்சாளரும் ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்துச் சொல்லி தப்பித்துக் கொள்ள முற்படுகின்றனர். என்ற போதிலும், பல நூற்றுக்கணக்கான மக்களை நேற்று முதல் காணவில்லை. மண்ணுக்குள் புதையுண்டவர்களை மீட்கும் முயற்சி, நேற்று காலநிலையைக் குறிப்பிட்டு கைவிடப்பட்டதோடு, இன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. நேற்றே முழுமையாக நடந்திருந்தால் ஒருவேளை சிலரையாவது உயிருடன் காப்பாற்றியிருந்திருக்கலாம்.
மலேசிய விமானம் காணாமல் போனபோது, அதில் பயணித்த உயிர்களுக்கு என்னவானது எனக் கேட்டு உலகமே ஆர்ப்பரித்தது. அவர்களுக்காகப் பிரார்த்தித்தது. Facebook, Twitter, Google plus போன்ற சமூக வலைத்தளங்களில் கூட, திரும்பிய பக்கமெல்லாம் அவர்களுக்கான பிரார்த்தனைகளும், உதவிகளும் பரந்திருந்தன. ஆனால், அதே போன்ற, கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையான உயிர்கள் இங்கும் காணாமல் போயிருக்கின்றன. மீட்கப்பட்டு, நிர்க்கதியான நிலையிலும் பல நூறு பேர் இருக்கின்றனர். ஆனால் மேற்சொன்ன சமூக வலைத்தளங்களிலோ, இணையத்தளங்களிலோ அவர்களுக்கான உதவிகளோ, பிரார்த்தனைகளோ கூட பரவலாக இல்லை. ஏனெனில், இவர்கள் இலங்கையின் ஒரு மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ்மொழி பேசும் ஏழைகள். பூர்வீக நாடற்றவர்கள். வந்தேறு குடிகள். விரல் முனையில் உலகைச் சுற்றிவரும் மேற்தட்டு மக்களுக்கு, இவர்கள் இருந்தாலும் ஒன்றுதான். இவர்களை இழந்தாலும் ஒன்றுதான்.
யார் இவர்கள்? ஒரு பக்கம் இவ்வாறான இயற்கை அனர்த்தங்களோடும், மறுபக்கம் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலாவணி, மிகக் குறைந்த ஊதியம், பாதுகாப்பற்ற குடிசைகள், நோய்நொடிகள், வறுமை எனப் பலவற்றோடும் போராட வேண்டியிருக்கும் இம் மக்கள் தென்னிந்தியாவிலிருந்து ஏமாற்றி அழைத்து வரப்பட்ட அப்பாவி மலையகத் தோட்டத் தொழிலாளர்கள். நூற்றாண்டுகளாக இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்திக்காக, எந்த அடிப்படை வசதிகளுமற்று அடிமைகளாக உழைக்கும் தமிழ் மக்கள் இவர்கள். எந்த அரசியல்வாதிகளாலும் கண்டுகொள்ளப்படாத ஏழைக் கூலி மனிதர்கள். யார், யாருக்காகவோ உழைத்துத் தேய்ந்து, தேயிலைச் செடிகளுக்கே உரமாகிப் போகும் அப்பாவி ஆண்கள், பெண்கள், குழந்தைகள்.
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தேர்தல்கால வாக்குகளுக்காகவும், ஏற்றுமதி வர்த்தகத்துக்கான உழைப்பாளிகளாகவும் மாத்திரமே இலங்கை அரசாங்கம் இவர்களைப் பார்க்கின்றது. இவர்கள் இந்திய வம்சாவளியினர் என்றபோதும், இந்திய அரசியல்வாதிகள் கூட இவர்களது உரிமைகளுக்காகவோ, இவர்களைத் தமது நாட்டில் மீள்குடியேற்றச் செய்யவோ எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் எல்லோரும் இலங்கைத் தமிழர்கள், ஈழத் தமிழர்களென மேடைகளில் கூச்சலிடுகிறார்கள். ஆர்ப்பாட்டங்கள் செய்கிறார்கள். அவர்கள் செய்வதுவும், இந்த அப்பாவிகளை வைத்து, தமது ஆதரவாளர்களை உசுப்பி விடும் பம்மாத்து அரசியலன்றி வேறென்ன?
இலங்கை அரசு, உலகத்துக்கு தனது பகட்டையும், ஆடம்பரத்தையும் காண்பிப்பதற்காக நீரில் மிதக்கும் நகரங்களை நிர்மாணிக்கிறது. அதிவேகப் பாதைகளை அமைக்கிறது. இவற்றின் செலவுக்கான பணம், மேற்குறிப்பிட்ட ஏழை மக்களின் உழைப்பிலிருந்துதான் கிட்டுகிறது என்ற போதிலும், நான் மேலே சொன்ன எந்த வசதிகளையும் அனுபவிக்கும் வாய்ப்பு இவர்களுக்கில்லை. அதிவேகப் பாதைகளை, பல மாடிக் கட்டிடங்களை, அதி நவீன ஹோட்டல்களை நிர்மாணிக்க முன்பு, தனது நாட்டிலுள்ள எல்லா மக்களுக்கும் எல்லா அடிப்படை வசதிகளும் கிட்டுகின்றனவா எனப் பார்க்க வேண்டியது ஒரு அரசாங்கத்தின் கடமை. ஆனால் ‘இவர்களை முன்பே இங்கிருந்து போகச் சொல்லிவிட்டோம்’ எனச் சொல்லி இன்று அரசாங்கம் தப்பிக் கொள்ளப் பார்க்கிறது.
அரசாங்கமானது, வீடுகளைக் கட்டிக் கொடுத்து பாதுகாப்பாகக் குடியேற்ற வேண்டியது இவ்வாறான ஏழை மக்களைத்தானே தவிர, வசதியானவர்களையல்ல. வீண் ஆடம்பர அலங்காரங்களுக்காகவும், கிரிக்கட் வீரர்களுக்கும், நடிகர்களுக்கும் வீடு, வாகனம், காணிகளென பல கோடி ரூபாய்களைச் செலவழிக்கும் அரசாங்கம், இவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளதை என்னவென்பது?
உலகிலுள்ள எந்த மனிதரிடத்திலும், திடீரென எவரும் வந்து அவர்கள் பரம்பரையாக வாழ்ந்துவரும் இடத்திலிருந்து வெளியேறி ‘நீ வேறெங்காவது போ’ எனச் சொன்னால் அவர்கள் எங்குதான் செல்வர்? ஒருவரது இருப்பிடமென்பது பூமி மாத்திரமல்ல. அது அவர்களது உணர்வுகளோடும், வாழ்க்கையோடும் சுற்றிப் பிணைக்கப்பட்ட ஆன்மா. அந்த ஏழைகளை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குப் புலம் பெயரச் சொன்னால், அகதியாய் அலையச் சொன்னால், அதை விட்டும் அவர்களைத் தடுப்பது எது? ஜீவனோபாய வழி முறைகள்.
காலம், காலமாக தோட்டங்களையே நம்பி வாழும் ஏழைக் குடிகளுக்கு, அவர்களுக்கேற்ற ஜீவனோபாய வழிமுறைகளை அமைத்துக் கொடுத்து, தண்ணீர், மின்சார, கழிவறை வசதிகளோடு முறையான குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, அரசாங்கமே குடியேற்றி வைப்பதுதானே முறை? அதை ஒருபோதும் செய்யவில்லை. இப் பிரதேசத்தில் மண் சரிவு அபாயம் இருப்பதாக பல தடவைகள் எச்சரிக்கப்பட்ட போதிலும், இங்கு வாழும் அப்பாவித் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை இடம் மாற்றிக் குடியமைக்க அரசாங்கம் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. அண்மையில் நடைபெற்ற ஊவா மாகாண சபைத் தேர்தலுக்காக, இம் மலையகப் பிரதேசங்களில் போட்டியிட்ட வசதிபடைத்த அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் செலவிட்ட பணத்தில் ஒன்றிரண்டு சதவீதங்களைச் செலவழித்திருந்தால் கூட, இம் மக்களுக்கு ஆபத்தற்ற குடியிருப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்திருக்க முடியும்.
இவ்வாறான ஆபத்தான பல பிரதேசங்கள் மலையகத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எல்லாவற்றிலுமே குடியிருக்கச் செய்யப்பட்டிருப்பது அப்பாவி ஏழைத் தோட்டத் தொழிலாளர்கள். இனியாவது அரசாங்கம் இவர்களைக் கருத்திற்கொண்டு உடனடியாக பாதுகாப்பான இடங்களில் இவர்கள் பத்திரமாகக் குடியேற ஏற்பாடு செய்ய வேண்டும். கேமராக்களின் முன்பும், ஊடகங்களின் முன்பும் இன்று பாய்ந்து பாய்ந்து உதவி செய்யும் அரசியல்வாதிகளும், தலைவர்களும் ஒரே நாளில் தமது தாய் தந்தையரை, சொந்தங்களை, இருப்பிடங்களை இழந்து நிற்கும் ஐம்பதிற்கும் மேற்பட்ட எல்லா சிறுவர், சிறுமிகளதும் எதிர்காலம் சிறப்பாக அமையவும் உதவ வேண்டும். மீட்கப்பட்டவர்கள் உடல் காயங்களைப் போலவே, மனதளவிலும் அதிர்ந்து போயுள்ளனர். அவர்களுக்கான தக்க சிகிச்சைகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
நேற்றைய அனர்த்தத்தைப் பார்வையிட, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அங்கு பூஞ்சிரிப்போடு வருகை தந்திருக்கிறார். கேமராக்களின் முன்னர் பரிசுகள் போலச் சுற்றிய பார்சல்களை யார் யாருக்கோ அள்ளி வழங்குகிறார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் திரும்பவும் போட்டியிடவிருக்கும் ஜனாதிபதிக்கு இந்த அனர்த்தத்தில் உதவிய புகைப்படங்களைக் காட்டியே வாக்குகளை அள்ளி விடலாம். அரசியல்வாதிகளுக்கு இவர்களது தேர்தல் கால வாக்குகள் மட்டும் போதும். இப்போதும் கூட அவர்கள், பல நூற்றுக்கணக்கான வாக்குகளை இழந்துவிட்டோமே என்றுதான் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்களே தவிர, பாவப்பட்ட இந்த உயிர்களுக்காகவல்ல !
For the lost MH 370 Malaysian Airline’s 239 passengers in the search they are spending $60 million…
All are Humans… hmm…
மண் சரிவால் மக்கள் அவதி பட பல புலன் பெயர்ந்த தமிழர்கள் முகநூலில் தஙகள் மனநிலை க்கு ஏற்ப எழுதி கொண்டுள்ளனர், ஒருவர் இது அர்சு வைத்த குன்டால், மலை சரிந்து வந்த்து என்று எழுதுகிறார், இன்னொருவர், ஆருமுகம் தொன்டமானுக்கு இது ஏன் தெரியவிலை முன்ன்ரே என்று கேள்வி .. மலையகம் என்ன ஆறுமுகத்தின் வீட்டு படலையா அஙேகு உல்ள எல்லா விடயஙலையும் தெரிந்து கொள்ள், மலையகம் 9 மாவட்டஙலை கொண்டது மிக பெரிய பிரதேசம், இது போன்ற இடர்களினை தவிர்து இருக்கலாம், அதில் உள்ளூர் அர்ச அதிபரின் அசமந்த போக்கே இந்த சோகத்துகு காரனம்,
Becaz of these people… humans… we are getting the big share of FOREX, but their live style…?
The main problem/ cause their… this kind of shelters…
எம்.ரிஷான் ஷெரீப் நல்ல ஒரு பதிவை எழுதியுள்ளார் ஆனால் அதற்க்கு பெரிய பின்னோட்டஙகள் வரவில்லை.என்னை கவர்ந்தது உலகிலுள்ள எந்த மனிதரிடத்திலும், திடீரென எவரும் வந்து அவர்கள் பரம்பரையாக வாழ்ந்துவரும் இடத்திலிருந்து வெளியேறி ‘நீ வேறெங்காவது போ’ எனச் சொன்னால் அவர்கள் எங்குதான் செல்வர்? ஒருவரது இருப்பிடமென்பது பூமி மாத்திரமல்ல. அது அவர்களது உணர்வுகளோடும், வாழ்க்கையோடும் சுற்றிப் பிணைக்கப்பட்ட ஆன்மா
தோழர் சேரிப் நெஞ்சை தொடும் வகையில் அந்த மக்களின் வாழ்கைகை அறியத் தந்தமைக்கு வாழ்த்துக்கள்.நாங்கள் எப்படி உதவி செய்வது?
If u like, u can help through these sources…
“Centre for Hope”
Counselling & Community Centre
Department of Philosophy & Psychology
University of Jaffna
Jaffna
Srilanka
Contact:
94 77 637 2458
94 77 633 6611
94 77 920 1344
or
Vavuniya Kovilkulam Youth Organaization
No: 58, 5th lane
Kovilkulam
Vavuniya
Contact:
94 75 772 9544 (Kaandeepan)
94 76 664 4059 (Nevethan)
Note: This is only a info, please contact directly & confirm it.
Irantha makkalaippatrikkavalai illai veeranukku aarumukanaaraik kutram sonnathuthaan kavalai