அமரிக்காவின் முன்னணி வலைப்பதிவாளரும், கணணி மேதையும், அமரிக்க அதிபர் பரக் ஒபாமாவின் கொலைப் பட்டியல் குறித்தும், ஈரானுக்கு எதிரான அமரிக்கவின் சைபர் தாக்குதல்கள் குறித்து தகவல் வெளியிட்டவருமான அரோன் சுவாட்ஸ் மரணமடைந்துள்ளார். 26 வயதான அரோன் நியூ யோர்க்கில் உள்ள அவரது வசிப்பிடத்தில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக அமரிக்க போலீஸ் அறிவித்துள்ள போதிலும் மேலதிக தகவல் எதனையும் வெளியிட மறுத்துவிட்டனர்.
‘ஒவ்வொரு வாரமும் அமரிக்க தேசிய பாதுகாப்பு பிரிவின் தெரிந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பாதுகாப்பான வீடியோ தகவல் இணைப்பு மூலம் ஒன்றின் ஊடாக ஒன்றுகூடி தகவல்களைப் பரிமாறிக்கொள்வர். பின்னதாக கொலை செய்யப்பட வேண்டியவர்களின் பட்டியல் தயார் செய்யப்படும். யெமென், பாகிஸ்தான், சோமாலியா போன்ற நாடுகளின் அரசியல் நடவடிக்கையாளர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஒபாமாவிற்கு அனுப்பப்படும். அனுமதி கிடைத்ததும் கொலை ஆரம்பிக்கப்படும்’ என வெளிப்படையாக எழுதியவர்.
இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் செய்தி ஓடையை முதலில் தயாரித்த குழுவில் அரோன் சுவ்வாட்சும் ஒருவர்.
‘தகவல் தொழில் நுட்பம் சக்தி வாய்ந்தது. ஆனால் ஏனைய எல்லாவற்றையும் போன்றே சிலர் தங்களுடைய அதிகாரத்திற்காக அதனைப் பயன்படுத்துகின்றனர்’. என்று கூறிய சுவாட்ஸ் அதற்கான குழு ஒன்றை 2011 இல் ஆரம்பித்து பல உள்ளகப் பாதுகாப்பு தகவல்களை வெளியிட்டவர்.