தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பது வெறும் உணர்ச்சிகளின் வினையாற்றலாகவே ஆரம்பமானது என்பது ஒபரோய் தேவனின் நாட்குறிப்பு விலாவாரியாகக் கூறுகிறது. நான்கு தசாப்தங்கள் அதே உணர்ச்சியை முன்வைத்து நடத்திச்செல்லப்பட்ட போராட்டம் நந்திக்கடலை இரத்தச் சிவப்பாக்கியது. உச்சி வெயிலும் உணர்ச்சிக் கதாபாத்திரங்களும் ஒபாரோய் தேவனின் ஒளிவு மறைவில்லாக் குறிப்புகளில் கண்முன்னே வந்து போகின்றன. தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வதையும் புதிய அரசியலையும் அதனை நகர்த்திச் செல்லும் முன்னணிப் படையையும் வளரவிடாமல் தடுப்பதற்கு இன்றும் வெறியூட்டப்பட்ட மனிதர்கள் தெருக்களில் உலாவருகிறார்கள். ஒபரோய் தேவனின் நாட்குறிப்பு முற்போக்கு அரசியல் சார்ந்ததல்ல. வெறும் சம்பவங்களின் தொகுப்பு மட்டுமே. ஒவ்வொரு சம்பவங்களின் பின்னாலும் துருத்தலாகத் தெரியும் அரசியல் முள்ளிவாய்க்கால் போன்ற அழிவை அப்போதே முன்னறிவிப்பது போலிருக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளால் கொலைசெய்யப்ப்பட்ட ஒபரோய் தேவனின் வாக்குமூலம் மறைக்கப்பட்ட பல்வேறு சம்பவங்களை மக்கள் முன் வைக்கிறது.
22.07.1982
மாத்தளையில் எட்டம் வகுப்புப் படிக்கும் போதே(1968 இல்) தமிழ்ப் பாடம் கற்பிக்கும் வாத்தியார், இஸ்லாமிய ஆசிரியர்களோடு தமிழரசுக் கட்சியை ஆதரித்து வாக்குவதப்படுவேன், 1974 ஆம் ஆண்டு தை 1ம் திகதி யாழ்ப்பாணத்தில் குடியேறினேன். தமிழர் விடுதலைக் கூட்டணியின் கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகளுக்குச் சென்று அவர்களது பேச்சால் கவரப்பட்டேன். 1974 ஆம் ஆண்டு தை 10 இரவு யாழ் நகரில் நடந்த சிறீலங்கா அரசின் வெறியாட்டத்தில் நானும் அகப்பட்டேன்.
தமிழ்ப் பெண்கள் துப்பாக்கி ஏந்திய படையினரால் காட்டுமிராண்டித்தனமாக நடத்தப்பட்டதை நேரில் கண்டேன். அதனைத் தொடர்ந்து 74 ஆனி எட்டம் நாள் சிவகுமாரனின் வீர மரணத்தால் உணர்ச்சியேற்றப்பட்டேன்.
பின்னர் அதே ஆண்டு கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி பயின்றுகொண்டிருந்த உரும்பிராய் குலசிங்கத்துடன் தொடர்பு ஏற்பட்டது. மிகவும் துடிப்பானவர். நாட்டு விடுதலையில் தீவிர பற்று உடையவர். எதற்கும் பயப்படாத நெஞ்சுரம் கொண்டவர். எப்போதும் அரசைப் பயப்படவைக்க ஏதாவது வன்செயலில் ஈடுபட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று அவாக் கொண்டவர். அவரின் தொடர்பில் கிடைத்த அறிவுரைகளினால் கவரப்பட்டேன். அவரின் தொடர்பு கிடைத்த சில நாட்களுக்குள்ளேயே அவர் சிறீ லங்கா அரசால் கைதானார். அப்போது நான் வயதில் மிகவும் சிறியவனாகையால் (16 வயது), ஆவலோடு இளைஞர் பேரவையைச் சேர்ந்தவர்களோடு தொடர்பு கொள்ளும் போதெல்லாம் என்னை சிறுவன் என்ற கணக்கில் ஏளனமாகப் பார்ப்பார்கள். சிலர் நேரடியாகவே என்னிடம் ‘நீ சின்னப் பையன், கவனாமாயிரு, போலிஸ் பிடித்து உள்ளே தள்ளிவிடும்’ என்பார்கள்.
இந்நாட்களில் தமிழர் கூட்டணியால் நடத்தப்பட்ட அத்தனை மாநாடுகள், சட்டமறுப்புப் போராட்டங்கள், ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொண்டேன். இப்படி இரண்டு ஆண்டுகள் கழிந்தன. 1976ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சிறையில் உள்ள இளைஞர்கள் தம்மை நீதி விசாரணை க்குட்படுத்து அல்லது விடுதலை செய் எனக் கோரி உண்ணாவிரதமிருந்தனர். அதற்கு ஆதரவாக வெளியில் (தமிழீழத்தில்) தமிழர் கூட்டணியும் பல இடங்களில் பரவலாக முழுநாள் உண்ணாவிரதப்போராட்டத்தைநடத்தியது. கொக்குவில் மஞ்சவனப் பதியிலும், நல்லூர் வீரமாகாளி அம்மன் கோவிலிலும் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தி கலந்து கொண்டேன். உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டதால் யாழ் மேயர் விசுவநாதன் முன்னாள் மேயர் நாகராசா,யாழ் எம்.பி.யோகேஸ்வரன், பல இளைஞர் பேரவைத் தலைவர்களின் தொடர்பு கிடைத்தது.
நல்லூர் வீரமாகாளி அம்மன் ஆலயத்தில் நடந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு உண்ணாவிரதம் இருக்கையில் பகல் 2மணி அளவில் குலசிங்கம் அங்கு வந்தார். (உண்ணாவிரதத்திற்கு முதல் நாள் 12 இளைஞர்களை சிறிலங்கா அரசு விடுதலை செய்தது) அவரும் விடுதலை செய்யப்பட்டது அப்போதே எனக்குத் தெரியும். அவரக் கண்டதும் நான் அடைந்த சந்தோசத்திற்கு அளவேயில்லை.பலமணிநேரம் இருவரும் எம்மை மறந்த நிலையில் பேசிக்கொண்டிருந்தோம். அப்போ இவருடன் சிறையிலிந்து விடுதலை செய்யப்பட்ட சிறியும் சிலரும் அங்கு வந்தனர். குலசிங்கம் அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தியதை அடுத்து அவர்களோடு பல விடயங்கள் பற்றியும் பேசினேன்.
அன்றிலிருந்து குலம்,சிறி ஆகியோரை சந்தித்து அடுத்து என்ன முறையில் இயங்கலாமென பேசுவோம். ஏனைய சிறை மீண்டவர்களையும் சந்தித்துப்பேசினேன். சிலர் மனதை சிறை வாசம் மாற்றியிருந்தது.தாம் போராட்டத்திலிருந்து ஒதுங்குவதாக மறைமுகமாகச் சொன்னார்கள்.
தொடர்ந்து குலம்,சிறியோடு தினமும் பல இடங்களும் சென்று விடுதலையில் ஆர்வமுள்ள இளைஞர்கள், ஏற்கெனவே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆகியோரைச் சந்தித்து பேசினோம்.
சிந்தித்த இளைஞர்களில் பலர் நாம் தொடர்பு கொள்ளும்போது தீவிரமாகப் பேசுகிறார்களே தவிர எம்மோடு சேர்ந்து இயக்க ரீதியாக இயங்கப் பின் வாங்கினர். இளைஞர்களின் இப் போக்கால் சிலர் மனவேதனை அடைந்து “சிறையால் வந்த நாம் மட்டும் தான் தொடர்ந்தும் போராடவேண்டும் போலுள்ளது” எனக் கூறினார்கள்.
என் பார்வையில் குலசிங்கம் மிக வேகமாக இயங்க வேண்டுமெனும் அவாவில் இருந்தார். அதன் காரணமாக சில பிழையான வன்முறையில் நாட்டமுள்ளவர்களோடு தொடர்பு கொண்டார். நானும் சிறியும் எவ்வளவோஎடுத்துக் கூறியும் அவர் தன் போக்கை மாற்றவில்லை. அதனால் அவர் திரும்பவும் தேடப்பட்டார். அப்போது அவருக்கு நான் முடியுமானவரை பாதுகாப்புக்கொடுத்தேன்.
1977 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் சிறையில் இருந்த ஏனைய இளைஞர்களும் விடுதலை செய்யப்பட்டனர். காசிஆனந்தன், வண்ணைஆனந்தன், சேனாதிராசா,சத்தியசீலன் போன்றவர்கள் விடுதலை செய்யப்பட்டபோது நான் மிகவும் மகிழ்ந்தேன். நம்மை அவர்கள் சிறந்தமுறையில் வழி நடத்துவார்களென நம்பினேன். விடுதலை செய்யப்பட்டு யாழ்தேவியில் யாழ்ப்பாணம் வந்தவர்களை ஏனைய தோழர்களோடு வவுனியா வரை சென்று உணர்ச்சிகர கோசங்களை முழங்கியவண்ணம் அழைத்து வந்தோம். அடிக்கடி சந்தித்து அடுத்து என்ன செய்யலாமெனப் பேசுவோம்.
அவர்கள் வார்த்தைகளால் மட்டும் எம்மைத் திருப்திப் படுத்தினார்களே தவிர செயலளவில் எவ்வித நடவடிக்கையிலும் இறங்கவில்லை. இப்படியிருக்கையில் 1977 பொதுத்தேர்தல் வந்தது. உடுப்பிட்டி, நல்லூர், மட்டுநகர், கல்முனை,பொத்துவில், சம்மாந்துறை தொகுதிகளுக்கு சென்று தங்கி தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வாக்களிக்கவேண்டிய அவசியத்தை மக்களுக்கு விளக்கினோம். பல கருத்தரங்குகளீல் கலந்துகொண்டுகொள்கை விளக்கமளித்தோம். அப்போ எனக்கு வயது 18. தமிழீழம் கோரிக்கைக்கு மக்கள் வாக்குமூலம் அளித்த அமோக ஆதரவை அடுத்து, த.வி.கூ.யினர் போராட்டத்தை நல்ல வழியில் எடுத்துச் செல்வர் என நம்பினேன்.
தொடரும்…
முதல் பகுதி:
ஒபரோய் தேவனின் நாட்குறிப்பிலிருந்து… (முதல் பாகம்)
இனியொருவின் சிறந்த போராளி ஒருவரின் இரத்த உணர்வை பகிர்வதற்கு கோடான கோடி வாழ்த்துக்கள்
வரலாற்றினை திரும்பி பார்ப்போம்.