ஜே.வி.பி இலிருந்து பிளவுற்ற பிரிவைச் சார்ந்த பபுடு ஜெயகொட தனது கட்சி கடந்த காலத்தில் பல தவறுகளை இழைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களிடமிருந்து தம்மை அன்னியப்படுத்தியதனூடாக கடந்த காலங்களில் இலங்கையின் இடதுசாரி இயக்கங்கள் மிகப்பெரும் தவறிழைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்தகாலத் தவறுகளில் நவதாராளவாத்திற்குப் இடதுசாரி இயக்கங்கள் பலியாகியுள்ளமை உலகம் முழுவதுமே நடைபெற்றுள்ளதாக மேலும் தெரிவித்த அவர், லிபியாவின் புதிய நிர்வாகத்துடனான சீனாவின் இணைவு, தென் சூடான் மறு சீரமைப்பில் சீனாவின் பங்கு என்பன இதற்குச் சிறந்த உதாரணங்கள் எனக் குறிப்பிட்டார்.
தனது கட்சி பல தவறுகளை இழைத்துள்ளதாகக் கூறிய ஜெயகொட, சுயவிமர்சனங்கள் ஊடாக இதனை மாற்றியமைக்க வாய்ப்புண்டு எனவும் குறிப்பிட்டார்.
இலங்கையில் தமிழர்கள் இல்லையென்றால் சிங்களவர்களுக்கு இயக்கமுமில்லை, அரசியலுமில்லை. சிங்களவர்களின் அரசியல் சாணக்கியம் தமிழர்களின்மேலேயே கட்டப்பட்டுள்ளது. தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை சிங்களவர்களின் அரசியல் சாணக்கியம் அழித்ததாக ஒரு மாயத்தோற்றமும் உள்ளது. தமிழின விடுதலைப் போராட்டத்தை சிங்களம் அழிப்பதற்கு உதவியது தமிழர்களின் அரசியல் சாணக்கியமே. இதற்கு முக்கிய சாட்சி தமிழக முதல்வராக இருந்த முத்துவேல் கருனாநிதி.
தமிழர்கள் விடுதலைப் போராட்டம் ஒடுக்கப்பட்டதும் சிங்களப் பாட்டாளிமக்களின் முதுகெலும்பாக கருதப்பட்ட ஒரு அரசியல் கட்சி உடைந்து சிதறுகிறது. தமிழர்கள் ஒடுக்கப்பட்டமையே அது சிதறுவதற்கு காரணம் என்று காலம் அவர்களைக்கொண்டே கூறவைத்துள்ளது. கூர்ந்து கவனித்தால் இன்று சிங்களவர் கண்ணைவிற்று ஓவியம்வாங்கி கண்டுகளிக்கத் துடிப்பது தெரியும். ஆனாலும் இதனால் தமிழனுக்கு எந்த நன்மையும் விளையப்போவதில்லை.
தமிழினம் தற்போது கடைப்பிடிக்கும் சமூகப்பண்பாடுகள் தமிழனுக்குரியதாக மாற்றம்பெறும்வரை தமிழனுக்கு விடிவில்லை.