கோத்தாபயவால் உருவாக்கப்பட்ட அவன்கார்ட் மரிடைம் என்ற இராணுவ நிறுவனத்திற்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது தெரிந்ததே. அதன் பின்னர் கொழும்பில் இன்று நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், அமெரிக்க தூதரகத்தின் துணைப் பாதுகாப்பு அதிகாரி ரொபர்ட் ரோஸ் உள்ளிட்ட முக்கிய ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரித்தல், இலங்கையின் பாதுகாப்பு தொடர்பில் தொடர்ந்தும் இணக்கப்பாட்டுடன் செயற்படுதல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக முப்படைகளின் பிரதம அலுவலர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வன்னி இனப்படுகொலை முடிந்த மறுகணமே கோத்தாபயவுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்காவின் உதவி அரச துறைச் செயலாளர் பேச்சுவார்த்தை நடத்திய போது இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்பை நாடினார். கொலைகளில் கைதேர்ந்த இலங்கை இராணுவத்தை ஆப்கானிஸ்தானில் முன்னரங்க இராணுவ நிலைகளில் பயன்படுத்துவதற்கு அனுமதி கோரினார். பின்னதாக பலாலி இராணுவ முகாமிலிருந்து வன்னிப் பகுதிவரை கண்ணி வெடிகளை அகற்றுவதாகக் கூறி அமெரிக்க இராணுவம் நிலைகொண்டுள்ளது.
அதேவேளை அரபு நாடுகளில் தலையிட்டது போன்று ஆசியாவில் தலையிடாமை தமது தவறு எனக் கூறும் அமெரிக்கா, ஒபாமா நிர்வாகத்தின் கீழ் ‘ஆசிய மாற்றம்; என்ற கொள்கையை வடிவமைத்தது. அமெரிக்காவின் ஆசியப் பசிபிக் கொமாண்ட் என்னும் இராணுவப் பிரிவு, ஆசியா முழுவதும் தனது இராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்த ஆரம்பித்தது.
இந்த இராணுவ விரிவுபடுத்தலில் மையப்புள்ளியாக இலங்கை அமையலாம் என்ற எதிர்வுகூறல்கள் போர் நடைபெற்ற காலத்திலிருந்தே வெளிவந்தன.
போர்க்குற்ற விசாரணை என்ற தலையங்கத்தில் அமெரிக்கா இலங்கையை தனது அடிமையான நல்லாட்சி அரசுடன் இணைந்து இராணுவ மயப்படுத்தும் ஆபத்தை மறுக்க முடியாது. இலங்கை அரசும் அமெரிக்காவின் தமிழ் அடிமைகளும் இதற்குப் பச்சைக்கொடி காட்டுவார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. வியற்னாம் மீது போர் தொடுத்த காலத்தில் இடைத்தங்கல் நாடாகப் பயன்பட்ட தாய்லந்தின் தலைநகரை உலகின் பாலியல் தொழிலின் மையமாக மாற்றிய அமெரிக்காவின் இராணுவத் தலையீடு மீள முடியாத அழிவுகளை ஏற்படுத்தும்..