ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் பிலிப் அல்ஸ்டனை இலங்கைக்கு வரவழைப்பதற்கு அரசாங்கம் தயாரில்லை. அவர் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு எவ்விதமான நம்பிக்கையும் கிடையாது என்று மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார். இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபை விடுத்த வேண்டுகோள்களை இலங்கை அரசாங்கம் அலட்சியம் செய்துவிட்டது என்று ஐ.நா.வின் விசேட நிபுணர் பேராசிரியர் பிலிப் அல்ஸ்டன் தெரிவித்துள்ளமை குறித்து வினவியபோதே, அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் சிவில் யுத்தத்தின் இறுதி மாதங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் பல சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்கென இலங்கைக்கு செல்ல தாம் நீண்ட நாட்களாக அரசாங்கத்திடம் அனுமதி கோரி வருவதாகவும் பிலிப் அல்ஸ்டன் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இவ்விடயம் குறித்து அமைச்சர் சமரசிங்க தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் கூறியதாவது:
முதலாவதாக ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் பிலிப் அல்ஸ்டன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் நிராகரிக்கின்றது. அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். அவரை எந்தக்காரணம் கொண்டும் இலங்கைக்கு வரவழைக்க நாம் தயாரில்லை. பிலிப் அல்ஸ்டனை இலங்கைக்கு வரவழைப்பதைவிட வெறுமனே ஒருவரை அழைத்து வரலாம். காரணம் அவர் மீது எங்களுக்கு எந்தவிதமான நம்பிக்கையும் இல்லை. அவர் போன்றவர்கள் இலங்கை மீது சுமத்துகின்ற குற்றச்சாட்டுகளுக்கு நாங்கள் மேற்கொள்கின்ற தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் ஊடாக பதிலளிக்க தயாராக இருக்கின்றோம். முக்கியமாக எமது நாட்டு விவகாரங்களில் பிலிப் அல்ஸ்டன் போன்றவர்கள் தலையிடுவதையும் கருத்து வெளியிடுவதையும் நாங்கள் விரும்பவில்லை.