நேற்று சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற ‘ஐ. நா. நிபுணர் குழு அறிக்கை – புவிசார் அரசியலெனும் நெருப்பாற்றில் தமிழீழ விடுதலைப் போராட்டம்’ கருத்தரங்கின் செய்திக் குறிப்பு:
இலங்கையில் ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்பட்டது இனப்படுகொலையே என்பதைச் சொல்லிக் கொண்டே இருப்பதுதான் அரசியல்பணி என சென்னை கருத்தரங்கில் அரசியலறிவியல் ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். சென்னை லயோலா கல்லூரியில், ஐ. நா. நிபுணர் குழு அறிக்கை புவிசார் அரசியலெனும் நெருப்பாற்றில் தமிழீழ விடுதலைப் போராட்டம் எனும் தலைப்பில் சனிக்கிழமை மாலை கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழர்களைக் காப்பாற்றுவோம் இயக்கம் இதற்கு ஏற்பாடு செய்திருந்தது.
நிகழ்வில் முக்கிய பேச்சாளர்கள் பேசியதிலிருந்து:
கலாநிதி பால் நியூமேன், (பேராசிரியர், பெங்களூர் பல்கலைக்கழகம்)முள்ளிவாய்க்காலில் முடிந்த போரில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையைப் பற்றி யாரும் சொல்லமுடியாத நிலைதான் இருக்கிறது. செயற்கைக் கோள் படங்களில் வெளியான பிறகு, சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் அழுத்தங்களை அடுத்து, ஐநா பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கைக்குப் பயணம் செய்தார். அப்போது இலங்கை ஜனாதிபதி மஹிந்தவுடன் கூடிப் பேசித்தான், ஒரு விசாரணைக் குழுவை அமைப்பது என முடிவுசெய்யப்பட்டது. அதன்படி மஹிந்தவின் ஒப்புதலுக்குப் பிறகே ஐ.நா பொதுச்செயலரால் மூன்று பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அதே குழுவின் கருத்துக்களை இன்று மஹிந்த எதிர்க்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது என்று கூறினார்.
கொடூரமான போரில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையை பல்வேறு விதமாக சொல்லிக்கொண்டு இருந்தார்கள். இது என்ன கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் எடுத்த ஓட்டங்களின் எண்ணிக்கையா, என்ன? மே 13 அன்று, ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டதாக பொதுவாக சொல்லப்பட்டது. இந்திய அரசு 70 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதாக கூறியது. இலங்கை அரசோ 10 ஆயிரம் பேர்தான் உயிரிழந்ததாக கூறியது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரோ தாங்கள் கப்பலில் சிகிச்சைக்காக எடுத்துச் சென்ற நோயாளிகளின் எண்ணிக்கை மட்டுமே 14 ஆயிரம் பேர் என்று கூறியது. இன்று வரை எத்தனை பேர் போரினால் கொல்லப்பட்டார்கள் என்று தெரியவில்லை என்று குறிப்பிட்டார்.
2008 செப்ரெம்பரில் உலக உணவுத்திட்டக் கணக்குப்படி, வன்னியில் 4 லட்சம் மக்கள் இருந்தார்கள். இதில் 70 ஆயிரம் பேர் குழந்தைகள் என்று யுனிசெவ் தெரிவித்தது. ஆனால், அரசோ ஒரு லட்சம் பேர்தான் அங்கு இருக்கின்றனர் எனக் கூறி, அந்த எண்ணிக்கை ஆட்களுக்கு மட்டுமே உணவு வழங்க உலக உணவுத் திட்டத்தினரை அனுமதித்தது. அதாவது ஒரு நபருக்குத் தரவேண்டிய உணவை நான்கு பேர் பகிர்ந்து உண்ண வேண்டிய நிர்ப்பந்தம் உருவாக்கப்பட்டது. அரசு இதைத் தெரிந்தே திட்டமிட்டு செய்தது. அரசு மட்டுமல்ல, விடுதலைப் புலிகளும் மனித உரிமைகளை மீறியதாகக் கூறப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை அரசோடு ஒப்பிடும் அளவுக்கு சொன்னாலும், அது அரசு அல்லவே. சர்வதேச மனித உரிமை தொடர்பான ஐ.நா. ஒப்பந்தங்களில் இலங்கை அரசுதானே கையொப்பம் இட்டிருக்கிறது. அங்கு ஒப்புகொண்டுவிட்டு மீறுவது தான் அரசுக்கு அழகா, அதுதான் அதன் பொறுப்பா? மக்களையும் போராளிகளையும் வேறுபடுத்திப் பார்க்காமல் இராணுவத் தாக்குதலை நடத்தியது அப்பட்டமான மனித உரிமை மீறல். கடைசியாக, எல்லாம் முடிந்த பிறகு, இலங்கை அரசு “வோர் டூரிஸம்” நடத்திக் கொண்டு இருக்கிறது. சிங்கள பிக்குகளுக்கும் பிற நாட்டுப் பயணிகளுக்கும் இதன் மூலம் தமிழர்களை நாங்கள் வென்றுவிட்டோம் என திரும்பத் திரும்பக் காட்டுவதன் மூலம் தமிழர்கள் தோல்வி அடைந்தவர்கள் என்பதை இன்னும் சொல்லிவருகிறது என்றார் பால் நியூமேன்.
இதனைத் தான் ஆங்கிலத்தில் டிஃபிட்டிசம்(defeatism) என்பார்கள். அதாவது வெல்லப்பட்ட மனநிலை என்று அர்த்தம். தமிழர்கள் மனத்தில் தாம் வெல்லப்பட்டு தோல்வியைத் தழுவிய ஒரு இனம் என்ற எண்ணத்தைக் கட்டி எழுப்பவே சிங்களம் முனைகிறது. அதனூடாக பல தமிழர்கள் மனமுடைந்து, இனி என்ன செய்வது ? எல்லாம் முடிஞ்சு போச்சு, இனி எங்களால் ஒன்றும் செய்யமுடியாது என்ற மனநிலைக்கு தள்ளப்படுவார்கள். இதனையே சிங்கள அரசு திட்டமிட்டுச் செய்துவருகிறது.








பறங்கியரின் பேச்சைக் கேட்டுத்தான் கப்பல்கள் கடலில் கவிழ்ந்தன்.இனியாவது வெள்ள அங்கிகளீன் வேசத்தில் ம்யங்காது தாமரைப் பூக்காரரின் கோசங்களூக்கு தாளம் போட்டால்தான் நாங்கள் சாமர்த்தியம் உள்ளவர்களாவோம்.
சந்திரசேகரன், அம்சா இவர்கள் அங்கு வந்திருப்பார்களே!?
ஊருக்கு உபதேசம் உனகில்லையடா?
போல் நியூமேன் வெளுத்தது வேசம்.
ஈழம்: சிங்கத்தின் நகங்கள்அன்பிற்குரிய வாசகர்களுக்கு,கடந்த அரை நூற்றாண்டுக் காலமாக நடைபெற்றுவரும் ஈழத் தமிழர்களின் அரசியல் வாழ்வுரிமைப் போராட்டங்களில் காலச்சுவடு செலுத்தி வந்துள்ள ஈடுபாடும் அக்கறையும் நினைவூட்டக்கூடிய அளவுக்குப் பழமையானதல்ல. இந்த உண்மையைக் காலச்சுவடோடு தொடர்புடைய வாசகர்கள், படைப்பாளிகள், அறிவுத் துறை நண்பர்கள் நன்கறிவார்கள். ஈழப் பிரச்சினையின் அனைத்துப் பரிமாணங்களையும் விருப்புவெறுப்பற்ற இதழியல் நேர்மையோடு பதிவுசெய்து வந்திருக்கிறது காலச்சுவடு. வாசகர்கள் தம் எதிர்வினைகள், விவாதங்கள் மூலம் அவற்றைச் செழுமைப்படுத்தி விரிவுபடுத்தியிருக்கிறார்கள். ஈழப் பிரச்சினை சார்ந்து முன்வைக்கப்பட்ட மாற்றுக் கருத்துகளுக்கான இடம் மறுக்கப்பட்டதுமில்லை. இதழியல் சார்ந்த பதிவுகள் தவிர காலச்சுவடு, கருத்தரங்குகள், விவாத அரங்குகள் வாயிலாகவும் அத்தகைய உரையாடல்களை ஒருங்கிணைத்து வந்திருக்கிறது. ஈழப் பிரச்சினை தொடர்பான உரையாடல்களைத் திமுக அரசு கடுமையாகத் தடுத்துவந்த ஒரு கட்டத்தில், சென்ற 2010 ஜூலை மாதத்தில் காலச்சுவடு பதிப்பகத்தால் நடத்தப்பட்ட எட்டு ஈழ நூல்கள் வெளியீட்டு விழா அத்தகைய உரையாடல்களுக்கான வெளியை உருவாக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்தது. 1988 முதல் 2009வரை காலச்சுவடில் இடம்பெற்ற ஈழம் தொடர்பான அரசியல் பதிவுகள் ‘சிங்கத்தின் நகங்களும் அசோகச் சக்கரமும்’, ‘போரும் வாழ்வும்’ என்னும் தலைப்புகளில் இரு தொகுதிகளாகச் சென்ற ஆண்டு வெளியிடப்பட்டமை, காலச்சுவடின் ஈழம் தொடர்பான அக்கறைக்கு வலுவான சான்று. அவ்வகையில் சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையால் வெளியிடப்பட்ட இலங்கைப் போர்க்குற்றங்கள் பற்றிய அறிக்கையின் மீதான ஒரு விவாத அரங்கை 08.05.2011 அன்று ‘ஈழம்: சிங்கத்தின் நகங்கள்’ என்னும் பெயரில் நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்தோம். எழுத்தாளர்கள் பா. செயப்பிரகாசம், இராஜேந்திர சோழன், பேராசிரியர் வி. சூரியநாராயண், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான ச. பாலமுருகன், டாக்டர் பால் நியூமென், பத்திரிகையாளர் ப்ரியா தம்பி ஆகியோர் அவ்விவாத அரங்கில் பங்குகொள்வதற்கு இசைந்தனர்.கூட்டம் பற்றிய தகவல்கள் வந்தவுடனேயே இணையத்திலும் வலைப்பூக்களிலும் நேரடியாகவும் தொலைபேசி வாயிலாகவும் அதற்கெதிரான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டதை அறிந்தோம். கூட்டத்தில் பங்கேற்க இசைவு தெரிவித்திருந்த பால் நியூமென் காலச்சுவடு இலங்கைத் தமிழர்கள் நலனில் அக்கறையற்ற ஒரு இதழ் எனத் தன் நண்பர்கள் சொன்னதாலும் வி. சூரியநாராயண் அவர்களுடன் மேடையைப் பகிர்ந்துகொள்ள முடியாது எனக் கூறிக் கூட்டத்தில் பங்கேற்க முடியாது எனத் தெரிவித்தார். பிறகு நடைபெற்ற தீவிரமான எதிர்ப்பிரச்சாரத்தின் விளைவால் கூட்டத்தில் பங்கேற்கவிருந்த இராஜேந்திர சோழன் அவர்களும் தன் மறுப்பைத் தெரிவித்தார். ச. பாலமுருகன் தயக்கத்துடன் தன் மறுப்பைத் தெரிவித்தார். பா. செயப்பிரகாசம் கூட்டத்தை ஒத்தி வைக்கலாம் என ஆலோசனை கூறினார்.மிகக் குறுகிய கால அவகாசமே இருந்ததால் எங்களால் காவல் துறை அனுமதியும் பெறமுடியவில்லை. கூட்டத்திற்கெதிரான தீவிரப் பிரச்சாரம், பங்கேற்பாளர்கள்மீதான அவதூறுகள், நேரடியான, மறைமுகமான மிரட்டல்கள் முதலான எதிர்ப்பாளர்களின் பாசிசப் போக்குகள் கூட்டம் ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் என்னும் நம்பிக்கையை உருவாக்கவில்லை. கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை உருவாக்கப்பட்டிருப்பதையும் அனுமானித்தோம். பங்கேற்பாளர்களில் நான்கு பேர் வர மறுத்துவிட்ட நிலையில் மாற்று ஏற்பாடுகள் செய்வதற்கான அவகாசமும் எங்களுக்கில்லை. விவாத அரங்கை வன்மத்தின் ஊற்றுக் கண்ணாக மாற்றி அதன் மூலம் மாற்றுக் கருத்துகளுக்கான வெளியை அழிக்க நினைக்கும் முயற்சிகளுக்குத் துணைபோக எங்களுக்கு விருப்பமும் இல்லை. எனவே வரும் ஞாயிறன்று நடைபெறவிருந்த கூட்டம் ரத்து செய்யப்படுகிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.இலங்கை அரசின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்துவதற்கான வாய்ப்பைக்கொண்டிருந்த ஒரு கூட்டத்துக்குத் தமிழ் உணர்வாளர்களே தடையாக இருப்பது நகை முரண்.எங்கள் அழைப்பை ஏற்று வருகை தரச் சம்மதித்த பங்கேற்பாளர்களுக்கும் கூட்டம் நடத்துவற்கான அரங்கைத் தந்துதவிய செ. நெ. தெய்வநாயகம் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்துக்கும் ஒத்துழைத்த அனைத்து நண்பர்களுக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.தேவிபாரதி,