ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவுக்கு போலி முறைப்பாடுகளை அனுப்பும் இலங்கை அரசாங்கத்தின் இரகசிய செயற்திட்டம் தற்போது அம்பலமாகியுள்ளது.
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவுக்கு இலங்கை அரசாங்கத்துக்கு நற்சான்றிதழ் கொடுக்கும் முகமாக ஏராளம் முறைப்பாடுகள் அனுப்பி வைக்கப்பட்டு;ள்ளன.
பாதுகாப்புச் செயலாளரின் திட்டத்துக்கு அமைவாகவே இவை அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. மேலும் பாதுகாப்பு அமைச்சுக்கு நெருக்கமானவர்களே அவற்றை அனுப்பி இருக்கலாம் என்றும் ஊகிக்கப்படுகின்றது.
இவ்வாறான போலி முறைப்பாடுகளின் மூலம் அரசாங்கம் தன் மீதான குற்றச்சாட்டுகளை மழுங்கடித்து திசை திருப்ப முயற்சி செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
அத்துடன் இறுதிக்கட்ட யுத்தத்தின் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் நடாத்த நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவுக்கு பல வருடங்களுக்கு முன் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பிலும் பல முறைப்பாடுகள் அனுப்பப்பட்டுள்ளன.
மின்னஞ்சல் மற்றும் பதிவுத் தபால் என்பன மூலமாகவே மேற்கண்டவாறான முறைப்பாடுகள் அனுப்பப்பட்டுள்ளன. பெரும்பாலும் அவற்றை தமிழ்ப் பெயர்களிலேயே அனுப்ப்பட்டு இருப்பதும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அது தொடர்பாக இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலக வட்டாரங்கள் மூலமாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
ஆயினும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டிருந்த முறைப்பாடுகளை அனுப்பியோர் தொடர்பாக தொழில்நுட்ப ரீதியான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போது அவற்றில் பெரும்பாலானவை ஒரே கணனியிலிருந்து (ஐ.பி. இலக்கம்) அனுப்பப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதன் காரணமாக பெரும்பாலான முறைப்பாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதன் பின் அவை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மேலதிக பரிசோதனைகள் மூலம் அவற்றின் அடையாள இலக்கத் தகவல்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் அரசாங்கத்தின் முக்கிய அலுவலகங்களின் இணையத்தள தொடர்புகளுக்குரியது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
அந்த வகையில் அரசாங்கம் தனக்குத் தானே கரிபூசிக் கொண்டுள்ளதாக ஐ.நா. அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே எதிர்வரும் வாரங்களில் இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவினர் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகளில் இறங்கினால் அவர்களுக்கு எதிராக பொதுமக்களை வீதிக்கு இறக்கும் பொருட்டுத் தயார் படுத்தி வைக்குமாறு அரசாங்கம் முக்கியமான அமைச்சர்கள் இரண்டு பேருக்கு உத்தரவிட்டுள்ளது.
அதற்கு மேலதிகமாக மக்கள் விடுதலை முன்னணியும் நிபுணர் குழுவின் வருகைக்கெதிராக ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ளலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.