தீவிரவாதத்துக்கு எதிராக தொடர்ந்து போராட வேண்டும் என்று, ஐ.நா.சபை மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் வற்புறுத்தினார். ஐ.நா.பொதுச்சபையின் 66வது மாநாடு, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் இந்திய தூதுக்குழு நியூயார்க் சென்றுள்ளது. வெளியுறவு துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர்மேனன் உள்ளிட்டோர் இந்த தூதுக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக விரும்பும் இந்தியா, ஜி4 நாடுகளான பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசியபின், ஐ.நா.பொதுச்சபை மாநாட்டில் 15 நிமிடங்கள் உரையாற்றினார். அப்போது அவர், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலை விரைவில் சீரமைத்து விரிவுபடுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அவர் பேசுகையில் மேலும் கூறியதாவது
ஏழை, பணக்கார நாடுகள், சிறியபெரிய நாடுகள் என்ற பாகுபாடு இல்லாமல், அனைத்து நாடுகளின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் உணர்வுடன் கூடிய ஐ.நா.சபை அவசியமாகும். இதற்காக, ஐ.நா. சபை மற்றும் அதன் முக்கிய அங்கங்களான பொதுச்சபை, பாதுகாப்பு கவுன்சில் போன்ற அமைப்புகள் புத்துயிர் அளிக்கப்பட்டு சீரமைக்கப்பட வேண்டும்.
சமகாலத்திய உண்மை நிலையை ஐ.நா.சபை பிரதிபலிக்க வேண்டும் என்றால், சீரமைப்பும் விரிவாக்கமும் அவசிய தேவை ஆகும். இதன்மூலம்தான் சர்வதேச பிரச்சினைகளை கையாளும்போது ஐ.நா. அமைப்பின் நம்பகத்தன்மை மற்றும் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்யும். அவ்வப்போது தலைதூக்கி வரும் மிக மோசமான தீவிரவாதம், அப்பாவிகளின் உயிர்களை பலிவாங்கி வருகிறது. தற்போது சர்வதேச பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளன. மோதல் அல்லாத ஒத்துழைப்புடன் கூடிய அணுகுமுறையை மேற்கொண்டால் இந்த அச்சுறுத்தல்களை முறியடிப்பதில் நம்மால் வெற்றி பெற முடியும்.
வளரும் நாடுகள் மேலும் வளர்ச்சி அடைவதற்கு அமைதியான வெளியுறவு சூழல் அவசியம். தீவிரவாதத்துக்கு எதிராக இடைவிடாமல் தொடர்ந்து தீவிரமாக போராட வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிராக தெரிவு செய்யப்பட்ட அணுகுமுறைகளை மட்டும் மேற்கொள்ளாமல், அனைத்து கோணத்திலும் போராட வேண்டும். தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் மக்களுடைய சிறப்பான எதிர்காலத்துக்காக, தெற்கு ஆசியாவின் மற்ற நாடுகளுக்கு செய்ததை போல், இந்தியா தனது பங்கை செலுத்தும்.
வெளியில் இருந்து அழைக்கப்படும் ராணுவ பலத்தின் மூலம் ஒரு நாட்டில் அமைதியை ஏற்படுத்த முடியாது. அதனால் ஆபத்துதான் விளையும். ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் தங்களின் தலைவிதியை, எதிர்காலத்தை நிர்ணயம் செய்து கொள்ளும் உரிமை உள்ளது. அதே நேரத்தில் இந்த பணியில் உதவி செய்வதில் சர்வதேச சமுதாயத்துக்கு பங்கு உள்ளது. ஐ.நா. அமைப்பின் உத்தரவின் கீழ் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், ஒரு நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் சுதந்திரத்துக்கு மதிப்பு அளிப்பதாக இருக்க வேண்டும்.
செங்கடல் மற்றும் சோமாலியா கடல் பகுதியில் கொள்ளையர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஒருங்கிணைந்த பயனுள்ள நடவடிக்கைகளை ஐ.நா.சபை மேற்கொள்ள வேண்டும். இந்த பிரச்சினையில் இந்திய பெருங்கடல் பகுதிகளில் மற்ற நாடுகளுடன் ஒத்துழைக்க இந்தியா தயாராக இருக்கிறது. சோமாலியா கென்யா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் கடுமையான பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மற்ற நாடுகளுடன் இணைந்து இந்தியாவும் மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்து வருகிறது. நமது நடவடிக்கைகளின் மூலம் வறுமையில் சிக்கித்தவிக்கும் நாட்டு மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும்.
தற்போது உலக பொருளாதாரம் நெருக்கடியான நிலையில் உள்ளது. கடந்த 2008ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை. மாறாக, பல அம்சங்களில் அது மேலும் மோசமான நிலையில் உள்ளது. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தம், உலக நிதி மற்றும் முதலீட்டுச் சந்தையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது சர்வதேச நிதி நிறுவனங்களின் செயல்பாட்டு முறையில் விரைவான பயன் உள்ள மாற்றங்கள் அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.