போர்க்குற்ற விசாரணை நடத்துவதாக அமெரிக்கா தலைமையிலான குழு மக்களை ஏமாற்றிக்கொண்டு இலங்கையில் ராஜபக்ச பாசிஸ்டுக்களுடன் இணைந்து தெற்காசியாவின் இராணுவத் தளத்தை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது தெரிந்ததே. இப்போது ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ‘அமைதிகாக்கும் படையில்’ இலங்கை போர்க்குற்றவாளிகள் இணைந்து கொள்கிறார்கள். இலங்கையில் இனப்படுகொலையை நடத்தி மக்களைக் கொத்துக்கொத்தாகக் கொன்று போட்ட இலங்கை சிங்கள பௌத்த இனவெறி இராணுவம் ஐக்கிய நாடுகளின் அமைதிக்காக்கும் படையணியோடு செல்கிறது.
வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை இராணுவம் ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையில் இணைகிறது.
ஒடுக்கப்படும் மக்கள் போராடி மட்டுமே உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை ஐநாவும் அமெரிக்காவும் மறுபடி மறுபடி நிறுவி வருகின்றன.
தமிழ்த் தேசிய இனத்தின் ஒரு பகுதியையே சாட்சியின்றி அழித்துப்போட்ட இராணுவம் அமைதிகாக்கும் கேலிக்கூத்தை அரங்கேற்றுவதற்காக தென் சூடானிற்கும் மத்திய ஆபிரிக்கக் குடியரசிற்கும் செல்கிறது.
போர்க்குற்றவாளிகளை எப்படி அமைதிகாக்க அனுமதிக்கலாம் என்று ஐ.நா வை நோக்கிக் கேள்வியெழுப்பக் கூட இயலாத தமிழ் அரசியல் தலைமைகள் குறித்துக் கேள்வியெழுப்ப மாட்டார்கள் என்பது வெளிப்படை.