சுமார் ஐம்பது ஆண்டுகள் இந்தியாவை தொடர்ந்து ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி இன்னமும் மாநில தேர்தல்களில் மிக மோசமான தோல்விகளைச் சந்தித்து வருக்கிறது.
2014, 2019 நாடாளுமன்ற தேர்தல்களில் படு தோல்வியைச் சந்தித்த காங்கிரஸ் கட்சி .இப்ப்போது மாநிலங்களிலும் அதன் சட்டமன்ற பிரதிநிதித்துவம் குறைந்து வருகிறது. மேற்கு வங்கத்தில் கடந்த தேர்தலில் 44 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. புதுச்சேரியில் 14 இடங்களை வென்ற காங்கிரஸ் இம்முறை 2 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது. கேரள மாநிலத்தில் இம்முறை ஆட்சியை இடது முன்னணியிடம் இருந்து கைப்பற்றுவதற்கு பதிலாக தோல்வியடைந்து ஆட்சிக்கு வர முடியாமல் போயுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில் பாஜகவிடம் தோல்வியடைந்துள்ளது.
ஐந்து மாநில தேர்தல் முடிவுகளில் ஓரளவுக்கு தமிழகம் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு ஆறுதல் வெற்றியை கொடுத்துள்ளது. 2016 சட்டமன்ற தேர்தலில் 8 இடங்களை வென்ற காங்கிரஸ் இம்முறை 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளை வென்றுள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 421 தொகுதிகளில் இந்தியா முழுக்க போட்டியிட்ட காங்கிரஸ் 52 தொகுதிகளில் மட்டுமே வென்றது. அதில் பெரும்பாலானவை தென் மாநில தொகுதிகள். வட இந்தியா முழுக்க காங்கிரஸ் கட்சியை கைவிட்ட நிலைதான் நீடிக்கிறது. எதிர்க்கட்சியாக இருக்க வேண்டிய அந்தஸ்து கூட காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கவில்லை. இன்னும் மூன்று ஆண்டுகளில் அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் வலுவான கூட்டணி அமைத்து காங்கிரஸ் இந்த வீழ்ச்சியில் இருந்து மீளுமா என்பது கேள்விக்குறிதான்!