வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் அமெரிக்கர்களுக்கு உணவு முத்திரைகள் வழங்கப்படுகின்றன. $1, $5, $10 பெறுமதியுள்ள உணவு முத்திரைகள் உணவுப் பொருட்கள் வாங்குவதற்காக வழங்க்கப்படுகின்றன. 2013 ஆம் ஆண்டில் ஐந்தில் ஒரு அமரிக்கர்கள் உணவு முத்திரை பெற்றுக்கொண்டனர். மொத்த சனத்தொகையில் 20 வீதமானவர்கள் இந்த உதவியை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொண்டு வாழ்க்கையை ஓட்டவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 2014 ஆம் ஆண்டில் இந்தத் தொகை மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்வு கூறப்படுகிறது.
2004ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது உணவு முத்திரை பெறுவோரின் தொகை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 722,675 மேலதிக தொகையான அமெரிக்கர்கள் 2013 இல் உணவு முத்திரை பெற்று வாழ்க்கை நடத்துகின்றனர்.
மக்களைக் கொந்தளிப்பில் இருந்து தடுப்பதற்காக 76.4 பில்லியன் டொலர்களை 2013 ஆம் ஆண்டில் அமெரிக்க அரசு செலவிட்டுள்ளது. உலகின் மிகப்பெரும் கடனாளி நாடான அமெரிக்கா அதிகரித்துச் செல்லும் இத் தொகையை நீண்ட காலத்திற்குச் செலுத்த முடியாத நிலை உருவாகலாம்.
முதலாளித்துவப் பொருளாதாரத்தின் தலைமையகமாகக் கருதப்படும் அமெரிக்காவில் ஐந்தில் ஒரு பகுதி நாளாந்த வாழ்க்கை வாழ்வதற்காகக் கூட உழைப்பில் ஈடுபட இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அந்த நாட்டில் உற்பத்தி அருகிப்போயுள்ளது.
தொழிற்சாலைகள் பல்தேசியப் பெருநிறுவனங்களால் விழுங்கப்பட்டு மூடப்பட்டுள்ளன. பணமும் மூலதனமும் ஒரு சிறிய குழுவை நோக்கிக் குவிந்துகொண்டிருக்கின்றது. முதலாளித்துவம் தவிர்க்க முடியாத நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளது. இந்த நிலைக்கு எதிரான மக்கள் புதிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தப் போராடத் துணிவதைத் எதிர்கொள்வதற்காக அமெரிக்க அதிகாரவர்க்கம் தனது பிரசைகளையே கண்காணிக்கிறது. ஒரு பகுதி மக்கள், மாதாந்தம் 200 டொலர்களுக்கும் குறைவான உணவு முத்திரையில் வாழ்கையை நடத்தும் அதே வேளை அதிகாரவர்க்கம் மக்களைக் கண்காணிப்பதற்கு பில்லியன் கணக்கில் செலவிடுகிறது. சொந்த மக்களை வறுமையின் விழிம்பிற்குள் தள்ளிவிட்டு அவர்கள் வாழ்வதற்கான உரிமைக்காகப் போராட முற்படும் போது தேசியப் பாதுகாப்பு என்று பயங்கரவாதத்தை அவர்கள் மீது திணிக்கிறது.
உள் நாட்டில் அமைதியாக வாழ்ந்த மக்களைச் சுரண்டி அழித்த அமெரிக்கா தலைமையிலான உலக அதிகார வர்க்கம் வறிய நாடுகளின் வளங்களைத் தமது பல்தேசிய நிறுவனங்களுக்காகச் சுரண்டுகிது. உலகம் முழுவதையும் பிணக்காடாக்கி வருகிறது.