ஆசியாவின் மிக மோசமான விஸ்தரிப்பு நோக்கம் கொண்டு மனித உரிமைகளை காலில் போட்டு மிதிக்கிற ஒரு நாடாக உருவாகிக் கொண்டிருக்கிறது இந்தியா.போராடும் தேசிய இனங்களை நசுக்கி அடக்குவதும் ஏராளமான மக்களைப் படுகொலை செய்தும் இந்தியா அமெரிகாவின் ஆசிய அடியாளாக உருவாகி வருகிறது. இந்நிலையில் தனது அதிகாரத்தை வளர்ந்த நாடுகளைப் போல ஏனைய நாடுகள் மீதும் செல்வாக்குச் செலுத்த விரும்பும் இந்தியா ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவிக்காக பல நாடுகளின் உதவிகளையும் கோரி வருகிறது. சீனாவிடமும் இது தொடர்பான கோரிக்கை விடுத்து சம்மதம் பெற்றுள்ளது. இந்நிலையில் வாஷிங்டனில் நடைபெறும் இந்திய, அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் இடையிலான முதல் சந்திப்பின் பின்னர் பேசிய அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் பேசும் பேசும்போது ” ” இந்தியாவுடன் அமெரிக்காவுக்கு உள்ள உறவு குறித்து எந்தவித சந்தேகமும் தேவையில்லை. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகியவற்றைக் காட்டிலும் இந்தியாவுடனான உறவு வலுவானது. அந்தப் பிராந்தியத்தில் தனக்குள்ள பொறுப்பை மேலும் நிலைநாட்ட வசதியாக, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து பெறுவதற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் விலகத் தொடங்கிவிட்ட நிலையில், அடுத்தகட்டமாக அந்தப் பிராந்தியத்தில் வலுவான நாடான இந்தியா தன்னை நிலை நிறுத்திக் கொள்ள நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து உதவும். தற்போது ஆப்கானிஸ்தான் சீரமைப்புக்கு மிகத் தாராளமாக இந்தியா நிதி உதவி அளித்துள்ளது பாராட்டுக்குரியது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சில் விரிவுபடுத்தப்படும்போது, அதில் இந்தியாவை சேர்ப்பதில் அமெரிக்கா முனைப்புடன் செயல்படும். இக் கூட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் நிலவும் அரசியல் சூழல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் பாதுகாப்பு, அணுசக்தி, பருவநிலை மாற்றம், கல்வி மற்றும் விவசாயத் துறைகளில் எவ்விதம் அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து செயல்படலாம் என்றும் விவாதிக்கப்பட்டது. இந்தியாவுடனான அணுசக்தி உடன்பாடு 2008-ல் எட்டப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்கு 6 மாதம் முன்பாகவே அணுசக்தி மறு சுழற்சி ஒப்பந்தம் எட்டப்படும். சர்வதேச சவால்களை சமாளிப்பதில் அமெரிக்க மக்களுடன் இணைந்து இந்தியர்கள் செயல்படுகின்றனர். இத்தகைய சவாலை இந்தியாவின் துணையின்றி சமாளிப்பது மிகவும் கடினமானதாக இருக்கும். பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து செயல்படுகின்றன. பயங்கரவாதிகள் தொடர்பாகவும், சைபர் குற்றங்கள் குறித்தும் தகவல்களும் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. ஏற்கெனவே இரு நாட்டு ராணுவங்களும், ராணுவம் சார்ந்த தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன. அடுத்த ஆண்டு இதேபோல தில்லியில் இரு நாட்டுப் பிரதிநிதிகளும் சந்தித்து விவாதிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் ஹிலாரி.
ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் மாற்றம்– கிருஷ்ணா
வலியுறுத்தல்: கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் கிருஷ்ணா கூறியதாவது: சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார தேக்க நிலையைப் போக்க பன்னாட்டு நிதி அமைப்புகளில் சீரமைப்பு தேவை என உணரப்பட்டு, அது பின்பற்றப்பட்டது. அதேபோல பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்டவற்றை சமாளிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் மாற்றம் கொண்டு வர வேண்டும். இரு நாடுகளும் பயங்கரவாதிகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிப்பது குறித்தும், தற்போது கொரிய பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதிகரித்துவரும் பயங்கரவாத அச்சுறுத்தல், பயங்கரவாதிகளை எதிர்கொள்வதில் உள்ள சவால், எல்லை கடந்த பயங்கரவாதம் ஆகியவற்றைத் தடுப்பதற்காகவே இரு நாடுகளிடையிலான உறவு முன்னெப்போதைக் காட்டிலும் வலுவடைந்துள்ளது என்றார் கிருஷ்ணா. இந்திய குழுவில் மத்திய அமைச்சர்கள் கபில் சிபல், பிருத்விராஜ் சவாண், திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா, வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். அமெரிக்க தரப்பில் மின்துறை அமைச்சர் ஸ்டீவன் சூ, அரசியல் விவகாரங்களுக்கான துணை அமைச்சர் வில்லியம் பர்ன்ஸ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் ஃபோர்மேன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.