மனித உரிமை பாதுகாவலர்களுக்குப் பெரும் அச்சுறுத்தல் காணப்படும் மோசமான சூழ்நிலை இலங்கையில் காணப்படுவதாக சுயாதீன பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது.
மனித உரிமை மீறல், ஊழல் மோசடி, படுகொலைகள், கடத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் இங்கு இடம் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஊடகங்கள் மீது கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் ஜனநாயக உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது பற்றி கருத்து வெளியிட்டுள்ள சிறீலங்கா மனித உரிமைகள் அமைச்சின் செயலர் ரஜீவ விஜயசிங்க, ஐக்கிய நாடுகள் சபை போரையும், மனித உரிமைகளையும் ஒன்றிணைத்து குழப்பமான தகவலை வெளியிட்டிருப்பதாக இன்று (செவ்வாய்க்கிழமை) கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிறீலங்கா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமது தேசயத்தின் குரல் எனவும், அதனை பிரபாகரனின் குரலாக ஒலிக்க விட முடியாது என, அந்தக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் ஹட்சன் சமரசிங்க பி.பி.சி தடைசெய்யப்பட்டது தொடர்பாகத் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை மீறல்களை மறைப்பதற்கு சிறீலங்கா அரசு போரை ஆயுதமாகப் பயன்படுத்தி வருவதாக, மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுவதுடன், தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் சிறீலங்கா அரசு தன்னிச்சையாக நடந்து கொள்வதாகவும் கூறுகின்றனர் என ருய்ட்டர் செய்தி அமைப்பு இவ்வறிக்கை தொடர்பான கருத்தைத் தெரிவித்துள்ளது.