16.03.2009.
இலங்கையின் வடக்கே சேவையாற்றிவந்த தமது உள்ளூர் பணியாளர் ஒருவரையும் அவரது குடும்பத்தினரையும் இவ்வார இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது அமைப்பில் பலவந்தமாக ஆட்சேர்த்திருப்பதாக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் இன்று குற்றஞ்சாட்டியிருக்கிறது.
வன்னியில் பணியாற்றிவந்த பணியாளர் ஒருவரையும், 16 வயதுடைய அவரது மகள் உட்பட அவரது குடும்பத்தினரையும் அரசினால் அறிவிக்கப்பட்ட மோதல் தவிர்ப்புப் பிரதேசத்திலிருந்து புலிகள் ஆட்சேர்த்திருக்கின்றார்கள் என்று கொழும்பிற்கான ஐ.நா. அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தனது ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள ஐ.நா அமைப்பு, தாமதிக்காமல் இவர்களை புலிகள் விடுவிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது.
இதேபோன்று கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னரும் ஐ.நாவின் இன்னொரு உள்ளூர் பணியாளர் புலிகளினால் ஆட்சேர்க்கப்பட்டதாகவும், பலமுறை தாம் கோரிக்கை விடுத்தும் அவர் இன்னமும் விடுவிக்கப்படவில்லை என்றும் ஐ.நா மன்றம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
BBC