07.01.2009.
எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா மீது போலீசார் நடத்திய தாக்குதல் சம்பவத்திற்கு தமுஎச கண் டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அருணன், பொதுச் செயலாளர் ச.தமிழ்ச்செல்வன் ஆகியோர் அறிக்கை விடுத்துள் ளனர்.
அறிக்கை விபரம் வருமாறு:
பல கவிதைத் தொகுதிகளும் ‘கன்னி’ என்கிற நாவலையும் படைத்த எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபாவை, கடந்த சென்ற சனிக்கிழமை சென்னை எம்.ஜி.ஆர்.நகர் காவல்துறையினர் சந்தேகத் தின் பேரில் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். நான் ஒரு கவிஞன், எழுத்தாளன் என்பதைப் பலமுறை கூறியும் செவி மடுக்காத காவல் துறையினர் அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். பூட்ஸ் கால்களால் நெஞ்சிலும், கால்களிலும் மிதித்துள்ளனர். நண்பருக்கு தொலைபேசியில் தகவல் சொல்லக்கூட அனுமதிக்க மறுத்து செல்போனை பறித்து வைத்துள்ளனர். அவருடைய நண்பர் தேடி வந்து அவரை அழைத்துச் சென்றுள்ளார். ஒதுங்கி வாழும் மனநிலையை கொண்ட ஒரு எளிய படைப்பாளியான பிரான்சிஸ் கிருபா மிகுந்த மன உளைச்சலுக்கும் உடற் காயங்களுக்கும் ஆளாகி கும்பகோணத்தில் நண்பர்கள் பராமரிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மனித உரிமைகளையும் ஜனநாயக மாண்புகளையும் புறந்தள்ளிவிட்டு காவல்துறையினர் நடத்தியுள்ள இக்காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை தமுஎச வன்மையாகக் கண்டிக்கிறது.
எம்ஜிஆர் நகர் காவலர்கள் மற்றும் காவல் ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எழுத்தாளரின் மருத்துவச் செலவை அரசே ஏற்க வேண்டும் எனவும் தமுஎச வலியுறுத்துகிறது.