11.04.2009.
இலங்கை நிலைவரம் தொடர்பாக இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அடுத்த வாரம் புதுடில்லிக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு விடுக்கப்பட்ட அழைப்பு தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை வெளியான செய்தி குறித்து அந்தக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் துணைத்தலைவர் மாவை சேனாதிராஜா விளக்கமொன்றைத் தெரிவித்திருக்கிறார்.
“இந்திய வெளியுறவுச் செயலாளருடன் பேசுவதற்கு சந்தர்ப்பம் தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே புதுடில்லியிடமிருந்து எமக்கு அழைப்பு வந்திருக்கிறது. எதிர்வரும் 15, 16 ஆம் திகதிகளில் மேனனைச் சந்திப்பதற்கு வாய்ப்பு தரப்படுமென்று எமக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த அழைப்பு தொடர்பில் தற்போது கொழும்பில் இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் 10 பேர் வியாழக்கிழமை கூடி கலந்தாலோசனை நடத்தினர். அதை ஒரு முழுமையான பாராளுமன்றக் குழுக் கூட்டம் என்று கருதிவிட முடியாது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் புதுடில்லியின் அழைப்பு தொடர்பில் தங்கள் அபிப்பிராயங்களை வெளியிட்டனர். எந்தவிதமான திட்டவட்டமான தீர்மானமும் அக்கூட்டத்தில் மேற்கொள்ளப்படவில்லை. அவ்வாறான தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டிருக்குமேயானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பராளுமன்றக் குழுவின் சார்பில் உத்தியோகபூர்வ அறிக்கையொன்று விடுக்கப்பட்டிருக்கும்.
எமது பாராளுமன்றக் குழுவில் மொத்தமாகவுள்ள 22 பேரில் பலர் வெளிநாடுகளில் தற்சமயம் இருக்கிறார்கள். அந்தக் குழுவின் தலைவர் இரா. சம்பந்தனும் சென்னையிலேயே இருக்கிறார். வியாழனன்று கொழும்பில் இடம்பெற்ற கூட்டத்தில் உறுப்பினர்களினால் தெரிவிக்கப்பட்ட அபிப்பிராயங்கள் சம்பந்தன் அவர்களுக்கு தெரிவிக்கப்படும். அதற்காக நான் இன்று (நேற்று) சென்னைக்கு பயணமாகவிருக்கிறேன். அவருடன் கலந்தாலோசித்த பின்னர் மேனனுடனான சந்திப்புக்கான அழைப்பு குறித்து பொருத்தமான தீர்மானமொன்றை நாம் மேற்கொள்வோம்’ என்று சேனாதிராஜா தெரிவித்திருக்கிறார்.
மாவை சேனாதிராஜா சம்பந்தன் மற்றும் பல கூட்டனி பாராளுமன்ற உறுப்பினர்களின் குடும்பங்கள் இந்தியாவில்தான் இருக்கின்றன.எனவே இவர்கள் இந்தியாவிற்கு எதிராக எந்த நிலையும் எடுக்கமுடியாது.மேலும் புலிகள் பலவீனம் அடையும்போது இவர்களின் உண்மை முகத்தை இன்னும் வெளிப்படுத்துவார்கள்.