பயங்கரவாதத்துடன் சேர்த்து, சமஷ்டியும், புதைக்கப்பட்டு விட்டதால் அந்த “சமஷ்டிச் சடலத்தை’ மீண்டும் தலைதூக்குவதற்கு ஒருபோதும் விடமாட்டோமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான விமல் வீரவன்ச சபையில் சூளுரைத்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாழ்க்கைத் தொழில்கள் தொழில்நுட்ப பல்கலைக்கழக சட்டத்தின்கீழான கட்டளை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு சூளுரைத்த அவர் மேலும் கூறியதாவது;
ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் ஜே.வி.பி. அரசுடன் இருந்திருந்தால் பயங்கரவாதத்திற்கு எதிரான வெற்றியை அவர்களும் கொண்டாடியிருக்கலாம்.
படையினர் தற்போது பயங்கரவாதத்தை குழிதோண்டிப் புதைத்துவிட்டனர். அதனுடன் சேர்த்து சமஷ்டியையும் புதைத்துவிட்டனர். எனவே,மீண்டும் “சமஷ்டி சடலம்’ தலை தூக்க நாம் ஒருபோதும் விடமாட்டோம்.
இந்தியாவிடம் மகிந்த அடிமைப்பட்டுவிட்டார். பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியாது. விமானக் குண்டுவீச்சு நிறுத்தப்பட்டுவிட்டது உள்ளிட்ட பல்வேறு எதிர்வு கூறல்களை கூறிய ஜே.வி.பி. இன்று வெற்றிக் கொண்டாட்டங்களில் பங்குபற்ற முடியவில்லை.
மக்கள் தேசியக் கொடியின் கீழ் ஒன்றிணைகையில் ஜே.வி.பி. தலைமைக் காரியாலயத்தை நடத்துவதற்கு அன்றைய தினம் தேசியக் கொடியை விற்றது தன்னுடைய எதிர்வுகூறல்களை நியாயப்படுத்த முயற்சிக்கின்றது.
சமஷ்டித் தீர்வு வரப்போகின்றதெனக் கூறி மக்களை முட்டாள்களாக்குவதற்கும் ஜே.வி.பி. முயற்சிக்கின்றது. எமது படைவீரர்கள் பயங்கரவாதத்துடன்சேர்த்து சமஷ்டியையும் புதைத்துவிட்டனர். அந்த சமஷ்டி சடலத்தை மீண்டும் தலைதூக்க நாம் விடமாட்டோம்.