இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் காங்கிரஸ் தலைவர்கள் யாராக இருந்தாலும் தமிழகம் வந்தால் ஆங்கிலத்தில் மட்டுமே உரையாற்றுவார்கள். காரணம் இந்திக்கு எதிரான தமிழர்களின் மனநிலை இதை புரிந்து கொண்ட தலைவர்கள் ஆங்கிலத்தில் உரையாற்ற அதை தமிழில் யாராவது மொழியாக்கம் செய்வார்கள். ஆனால், பாஜக தலைவர்கள் தமிழகம் வந்தால் இந்தியில் மட்டுமே பேசுவார்கள். பிரதமர் மோடி அமித்ஷா போன்றவர்கள் தமிழகம் வந்தாலும் இந்தியில்தான் பேசுவார்கள்.
ஆனால், தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால் இப்போது இந்திக்கு பதிலாக மோடி ஆங்கிலத்தில் பேசுகிறார். இந்தியை நேசிக்கும் மோடி இந்தியில் பேச வேண்டியதுதானே என்று சமூக வலைத்தளங்களில் பலரும் மோடியின் ஆங்கில உரை தொடர்பாக கேள்வி எழுப்பிய நிலையில், அமித்ஷா நேற்று தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உரையாற்றினார். அப்போது திமுகவை ஊழல் கட்சி என விவரித்த அமித்ஷா 2 ஜி, 3 ஜி. 4 ஜி என அலைக்கற்றைகளைக் குறிப்பிட்டு திமுக, மாறன் சகோதரர்கள், மற்றும் சோனியாகாந்தியை குறிப்பிட்டுத் தாக்க அமித்ஷாவின் இந்தி உரையை மொழியாக்கம் செய்த தமிழக பாஜக தலைவர் எச்.ராஜா அதை தவறாக மொழியாக்கம் செய்தார்.
இதை புரிந்து கொண்ட அமித்ஷா “என் உரையை மீண்டும் மீண்டும் தவறாக மொழிபெயர்க்கிறார் ராஜா” என்று கிண்டலாகக் குறிப்பிட திரண்டிருந்த தொண்டர்கள் சிரித்தனர்.அமித்ஷாவுக்கு ஆங்கிலம் தெரியாது. நாடாளுமன்றத்தில் பல மாநில உறுப்பினர்கள் கேள்வி எழுப்பும் போது கூட அவரது பதில்கள் இந்தியில் மட்டுமே இருக்கும் நிலையில் தமிழகத்தில் அவரது இந்தி உரையே மொழி பெயர்ப்பு கேள்விக்குள்ளாகி உள்ளது.