இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கையில் “பழிக்குப்பழி’யானது பதிலீட்டுக் கொள்கையாக தோற்றம் பெற்றுள்ளதாகவும், இந்தியதேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்.கே. நாராயணன் தலைமையின் கீழ் அண்மைய வருடங்களில் இந்தப் பதிலீட்டுக் கொள்கை தோற்றம் பெற்றுள்ளதாகவும் இந்தியாவிலிருந்து வெளியாகும் “ரெலிகிராப்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.
வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் அதிகளவிலான ஞாபகங்களை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்துள்ளது. தெற்காசியாவில் இந்தியாவின் கௌரவம் வீழ்ச்சியுற்ற தினத்தை வரலாறு தீர்மானிக்குமேயானால் அது 1986 நவம்பர் 17 ஆகவே இருக்கும். இந்த வீழ்ச்சிக்கான நடவடிக்கை அசைவோட்டத்திற்கு காரண கர்த்தாக்களாக இருப்பவர்களில் விடுதலைப் புலிகளின் ஸ்தாபகர் பிரபாகரனும் ஒருவராக இருப்பார். இந்த வீழ்ச்சியை அஸ்தமனத்திற்கு தூண்டிவிட்டதற்கான பொறுப்பாளி ஒரு தனிநபரென வரலாறு கூறுமானால், அது அச்சமயம் ராஜீவ் காந்தியின் அரசாங்கத்தில் உள்நாட்டுப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக இருந்த பி.சிதம்பரமாகவே இருப்பார்.
1986 நவம்பர் 17 இல் பெங்களூரில் பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) இரண்டாவது உச்சி மாநாடு இடம்பெற்றது. சென்னையிலிருந்த விடுதலைப் புலிகளின் தளத்திலிருந்து இந்திய அரசாங்கத்தினால் பிரபாகரன் அங்கு அழைத்துச் செல்லப்பட்டார். அச்சமயம் இலங்கை ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்தனா தலைமையில் உயர்மட்ட இலங்கைத் தூதுக்குழு பெங்களூருக்கு வருகை தந்திருந்தது. அக்குழுவுடன் பிரபாகரனை சந்திக்க வைப்பதற்கான எதிர்பார்ப்புகளுடன் இந்திய அரசாங்கம் அவரை அங்கு அழைத்துச் சென்றது. அச்சமயம் இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சராக இருந்த நட்வார் சிங் தலைமையில் நான்கு உறுப்பினர்கள் அடங்கிய இந்திய அதிகாரிகள் குழு தமிழ் மக்களுக்கு ஜெயவர்தன வழங்க முன்வந்ததற்கு இணங்குமாறு பிரபாகரனைத் தூண்டும் முயற்சியில் நள்ளிரவு வரை தீவிரமாக ஈடுபட்டிருந்தது. குறைந்தது அரைவாசியையாவது ஏற்றுக்கொள்ளுமாறு இந்தியத் தரப்புத் தூண்டியது. ஆனால், பிரபாகரன் பிடிவாதமாக இருந்தார். எதற்கும் இணங்கவில்லை. இந்தியா விரும்பியிருந்த எந்தவொரு முன்னேற்றமும் காணப்படாமல் அவர் சென்னைக்குத் திரும்பிச் சென்றார்.
ராஜீவ் காந்தி உயர்ந்த எண்ணங்களைக் கொண்டிருந்த பிரதமராவார். அவர் துரிதமான பெறுபேறுகளை நாடியிருந்தார். தமது தாயார் ( இந்திரா காந்தி) இலங்கை தொடர்பாகக் கடைப்பிடித்த கொள்கைகளை அவர் உடைத்துவிட்டார். மிதவாதியாக செயற்பட விரும்பினார். படிப்படியாக இலங்கைத் தீவிலிருந்த தமிழர்களுக்கு இந்தியா வழங்கி வந்த ஆதரவை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டார். இதய சுத்தியுடனோ நம்பகரமான முறையிலோ இல்லாமல் பேசுவதில் வல்லவராக இருந்த ஜே.ஆர். ஜெயவர்தனவின் தூண்டுதலுக்கு அவர் (ராஜீவ்) இலக்காகிவிட்டார். தனது தந்திரமான நடவடிக்கைகளால் “நரி’ என்று அறியப்பட்டிருந்த ஜே.ஆர்.ஜெயவர்தனா இலங்கைக்குள் இந்தியாவை பின்னிப்பிணைக்கும் பொறிக்குள் ராஜீவை இழுத்துவிட்டிருந்தார். இந்திய அமைதிகாக்கும் படையினூடாக அவ்வாறு செயற்பட்டதன் விளைவுகள் இப்போது வரலாறாக மாறியுள்ளது.
பெங்களூரில் இலங்கை இனப்பிரச்சினைக்கு மத்தியஸ்தம் வகிக்க தாம் மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்காததையிட்டு முன்கோபக்காரனான ராஜீவ் காந்தி விசனமடைந்திருந்தார். பிரபாகரனால் முயற்சிகள் பயனளிக்கவில்லையென்று அவர் சினமடைந்திருந்தார். இந்திய சமாதானப்படை இருந்த காலத்திலும் அதன் பின்னரான வருடங்களிலும் அதன் அதிகாரிகளுடன் இந்த பத்தி எழுத்தாளர் மேற்கொண்ட சம்பாஷணைகள் மூலமாக இதனை அறிய முடிந்தது. ராஜீவ் காந்தியின் இலங்கை தொடர்பான புதிய கொள்கைக்கும் கொழும்பு அரசாங்கத்திற்கும் எதிராக விடுதலைப் புலிகளின் தலைவர் உறுதியாக நின்றமை நான்காவது தடவையாகும். திம்புவில் இரு தடவைகள் அவர் (பிரபாகரன்) அவ்வாறு செய்திருந்தார். சென்னையிலும் ஒரு தடவை அவ்வாறு நடந்து கொண்டார். இந்த சந்திப்புகளை புதுடில்லியே ஏற்பாடு செய்திருந்தது.
ராஜீவ் காந்தியின் உள்வட்டாரங்களில் அங்கம் வகித்த சிதம்பரம் தமது பிரதமரின் விசனத்தை செயற்பாட்டிற்கு முன்னெடுக்கும் மாற்றத்தை மேற்கொண்டார். இந்தியாவில் சுதந்திரமாக செயற்பட முடியாதென பிரபாகரனுக்கு செய்தியொன்றை அனுப்பினார். இலங்கையிலுள்ள தமது உறுப்பினர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தப் பயன்படுத்தப்படும் மாநிலத்திலிருந்த சகல தொடர்பாடல் கருவிகளையும் முடக்குமாறு தமிழ்நாட்டுப் பொலிஸாருக்கு சிதம்பரத்தின் அமைச்சு அறிவுறுத்தலை விடுத்திருந்தது. ராஜீவ் அல்லது சிதம்பரத்திலும் பார்க்க அரசியல் ரீதியில் திறமையானவர் என்பதை பிரபாகரன் நிரூபித்திருந்தார். சென்னையில் அவர் உண்ணாவிரதமிருந்தார். அந்த உண்ணாவிரதம் தொடர்பாக அதிக அளவில் மக்கள் மத்தியில் அறியப்படுத்தப்பட்டது. அது இந்தியத் தமிழர்கள் மத்தியில் அதிகளவிலான அனுதாபத்தை ஏற்படுத்தியது.
எதனையும் அறியாமல் சிக்கிக் கொண்ட சிதம்பரம் மடமைத் தனமாக அறிக்கையொன்றை வெளியிட்டார். தமது அமைச்சுடன் கலந்தாலோசிக்காமல் தமிழ்நாட்டுப் பொலிஸார் தொடர்பாடல் உபகரணங்களைக் கைப்பற்றியதாக அவர் தெரிவித்திருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக உண்மையில் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இச் சம்பவத்தை அச்சமயம் கொழும்பில் இந்திய உயர்ஸ்தானிகராக இருந்த ஜே.என். தீக்ஷித் தனது “அசைன்மன்ட் கொழும்பு’ என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த விடயத்தில் ராஜீவ் காந்தி, சிதம்பரத்திலும் பார்க்க தான் அதிகளவில் செயற்படக் கூடியவர் என்பதை அச்சமயம் தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி. இராமச்சந்திரன் நிரூபித்திருந்தார். ராஜீவ் காந்தியின் இலங்கை தொடர்பான புதிய கொள்கையுடன் அவர் ஒத்துழைத்துச் செயற்பட்டார். அவரை ராஜீவ் காந்திக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால், தமிழ்நாட்டுப் பொலிஸாரைக் குற்றஞ்சாட்டிய சிதம்பரத்தின் அறிக்கையானது பயனற்றுப்போனது. இதனால், இலங்கைத் தமிழர் ஆதரவு வாக்கு வங்கியானது எம்.ஜி.ஆரின் எதிரியான திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதியின் கரங்களுக்குச் சென்றுவிடும் நிலைமை காணப்பட்டது. இதனால், எம்.ஜி.ஆர். தமது பொலிஸார் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றிய சகல தொடர்பாடல் உபகரணங்களையும் திரும்ப வழங்கினார்.
இந்தச் சம்பவத்தின் பின்னர் நீண்ட காலத்திற்கு இந்தியாவில் தங்கியிருக்க முடியாதென்பதை பிரபாகரன் உணர்ந்து கொண்டார். கொழும்புக்கு எதிரான தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்த வேண்டுமென்றால், இந்தியாவிடம் அதிகளவிற்கு தங்கியிருக்க முடியாது என்று அவர் புரிந்துகொண்டார். ஒரு மாத காலத்திற்குள் சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு தமது தளத்தை நகர்த்த அவர் ஆரம்பித்தார். படிப்படியாக இலங்கைத் தமிழ் இயக்கத்தின் மீதான செல்வாக்கையும் கட்டுப்பாட்டையும் இந்தியா இழக்க ஆரம்பித்தது.
பிரபாகரன் பரிசீலனைக்கு எடுக்க விரும்பியிருக்காத போது அவரைப் பலவந்தமாக இணக்கப்பாட்டிற்கு வருவதற்கு இந்தியா முயற்சிக்காது இருந்திருந்தால் தெற்காசியாவின் வரலாறு வித்தியாசமானதாக அமைந்திருக்குமா? முக்கியமான தொடர்பாடல் உபகரணங்களைக் கைப்பற்றுவதற்கான முயற்சிகளை சிதம்பரம் ஆரம்பித்திருக்காதுவிடில் பிரபாகரன் யாழ்ப்பாணத்திற்கு நகர்த்த வேண்டிய நிர்ப்பந்தமான நிலைமை ஏற்பட்டிருக்குமா? அச்சமயம் பிரபாகரன் மீது இந்தியா அதிகளவிலான செல்வாக்கைச் செலுத்தும் நிலைமையைக் கொண்டிருந்தால் சில சமயங்களில் ராஜீவ் காந்தியின் படுகொலையைக்கூடத் தடுத்திருக்க முடிந்திருக்கும்? தெற்காசியாவில் தமிழரின் இனப்பிரச்சினையில் அதி முக்கியமான காலகட்டத்தை எட்டிதொரு காலகட்டமாக வரலாற்றாளர்களுக்கு இது உண்மையில் அமைந்திருந்திருக்கும்.
தீக்ஷித்தின் நூலில் “வைஸராய்’ பற்றிக் குறிப்பிடத்தக்க அளவு பதிவு காணப்படுகிறது. கொழும்பில் வைஸ்ராய் என அறியப்பட்டவர் தீக்ஷித். கிழக்கு மாகாணத்திலோ யாழ்ப்பாணத்திலோ இலங்கைப் படையினர் தமிழ் மக்களை அடக்கு முறைக்குள் உட்படுத்தினால் இந்தியா முட்டாள் தனமாக பார்த்துக் கொண்டிருக்காது என்று இலங்கை ஜனாதிபதிக்கு கூறியதன் மூலம் அவர் வைஸ்ராய் என அழைக்கப்பட்டிருந்தார். ஒரு நாட்டின் தலைவருக்கு உயர்ஸ்தானிகர் ஒருவர் “விளைவுகள் குறித்து பரிசீலனை’ செய்யுமாறு கூறியிருந்தார். இலங்கை தொடர்பான தமது பிரதமரின் அறிக்கையை அவர் தெரிவித்திருந்தார். கொழும்பில் மாத்திரமின்றி காத்மண்டு மாலே திம்பு மற்றும் குறைந்தளவில் டாக்கா, காபூல் ஆகியவற்றிலும் இந்தியா எப்போதும் முன்னணி நிலையில் செல்வாக்குச் செலுத்தியதை தீக்ஷித்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.
இந்தியர்களின் அடுத்த தலைமையினர் இந்தியாவின் இந்த புகழ்பெற்ற நாட்களையிட்டு கவலையுடன் மட்டுமே மீள் பார்வையைச் செலுத்த முடியும். தெற்காசியாவில் இந்தியாவானது பிராந்திய பாதுகாப்பு மற்றும் இராஜதந்திரத்தில் மிகவும் முக்கியமான காரணியாக இருந்த அந்த புகழ்பெற்ற நாட்களையும் கவலையுடன் மட்டுமே பார்க்க முடியும். உண்மையான அரசியலிலும் பார்க்க நேர்மையாகச் செயல்படுவது மிகவும் முக்கியமானதென ராஜீவ் காந்தி தீர்மானித்திருந்தார். இந்தியாவின் தந்திரோபாய நலன்கள் பக்கத்திற்கு சரிந்து செல்வது நிறுத்தப்படவில்லை. இலங்கையில் ஆரம்பித்து தெற்காசியா பூராவும் இந்த நிலைமை பரவியது. தீக்ஷித்திற்கு பின்னர் பதவியேற்றவர் இலங்கை ஜனாதிபதியின் அறை வாசலில் நான்கு மணித்தியாலங்கள் காத்திருக்க வேண்டியிருந்ததை இந்தப் பத்தியாளர் அறிவார். இந்த உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியை சந்திப்பதற்காக காத்திருக்க வேண்டியிருந்தது. இதன் மூலம் ஜனாதிபதி ஒரு விடயத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். உயர்ஸ்தானிகர் காத்திருந்தமையானது இந்தியாவின் செல்வாக்கு மறைந்து கொண்டிருந்ததன் யதார்த்தத்தை வெளிப்படுத்தியதாக காணப்படுகிறது.
1986 இல் இலங்கையிலுள்ள சகல தமிழ்க்குழுக்களுக்கும் உதவுவதை இந்தியா முழுமையாக நிறுத்திக் கொண்டது. ஆனால், அதன் மூலம் இலங்கைத் தீவில் சமாதானத்தை ஏற்படுத்த உதவ முடியவில்லை. அத்துடன், சிங்களவர் மத்தியிலிருந்தோ தமிழர் மத்தியிலிருந்தோ இந்தியாவிற்கான நன்மதிப்பையும் இதன் மூலம் அதிகரித்துக் கொள்ள முடியவில்லை. இலங்கையில் இந்தியாவின் பிடி குறைவடைந்து போகும் நடவடிக்கையின் ஆரம்பமாக இது அமைந்தது. 1990 இல் முன்னாள் மொசாட் முகரவரான விக்டர் ஜே. ஒஸ்ட்ரோஸ்கி இஸ்ரேலிய வெளிநாட்டு புலனாய்வு நிறுவனத்துடன் தான் கழித்த ஆண்டுகளைப் பதிவு செய்து நூலொன்றை வெளியிட்டிருந்தார். அந்த நூலானது அதிகளவு விற்பனை செய்யப்பட்டது. “பை.வே.ஒப் டிசேப்சன்; த மேக்கிங் அன்ட் அன் மேக்கிங் ஒப் எ மொசாட் ஒவ்பிசர்’ என்பதே இந்த நூலாகும். இந்த நூலில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தின் விசேட படையினருக்கும் சமகாலத்தில் எவ்விதம் மொசாட் பயிற்சியளித்தது என்பது குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்படுவதற்கு குறைந்தது 5 வருடங்களுக்கு முன்பே இலங்கைத் தமிழர்களுடன் நடவடிக்கைகளை மேற்கொள்வதை இந்தியா நிறுத்திவிட்டது. தாங்கள் உதவி பெறக்கூடிய வேறு இடங்களில் இலங்கைத் தமிழர்கள் உதவியை பெற்றனர்.உலகில் குறிப்பிடத்தக்க பயங்கரவாதக் குழுக்கள் விடுதலைப் புலிகளுக்கு உதவினர். பணத்திற்காகவோ அல்லது வேறு நோக்கத்திற்காகவோ அவை உதவின. அதேசமயம் இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி பெறவும் ஆயுதங்களுக்காகவும் சிங்களவர்கள் பாகிஸ்தானியரின் பக்கம் திரும்பினர்.
அண்மைய வருடங்களில் இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கைக்குப் பதிலீட்டுக் கொள்கையாக “பழிக்குப்பழி’ உருவாகியிருக்கிறது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்.கே. நாராயணன் தலைமையில் இக்கொள்கை தோற்றம் பெற்றிருக்கிறது.