சென்னையில் மிகவும் காஸ்டிலியான அசோக்நகர் பகுதியில் பல கோடி ரூபாய் பெருமானமுள்ள நில அபகரிப்பு தொடர்பான சர்ச்சையில் சிக்கி நீதிமன்றம் வழக்கு போலீஸ் அடிதடி என கடந்த சில மாதங்களாகவே விடுதலைச் சிறுத்தைகளுக்கும் ரியல் எஸ்டேட் பேர்வழிக்குமான மோதல் உச்சத்தையடைந்துள்ளது. பல கோடி ரூபாய் பெருமானமுள்ள நிலங்களை யார் கைபற்றுவது என்கிற போட்டியிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஈடுபட்டது. ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியலில் இருந்து உருவான திருமாவளவன் கட்சியில் இன்று பெரும்பாலும் ரியல் எஸ்டேட் பேர்வழிகள், கட்டப்பஞ்சாயத்து செய்கிறவர்கள் என பலரும் அரசியல் தஞ்சமடையும் ஒரு இடமாக மாறி விட்டது. அதாவது எல்லாக் கட்சிகளைப் போலத்தான் விடுதலைச் சிறுத்தைகளும் இந்நிலையில் இன்று சென்னையில் சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் திருமாவளவனின் தாயார் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் கடந்த 2006ம் ஆண்டு அசோக்நகர் 100 அடி ரோட்டில் முதலாவது அவென்யூவில் உள்ள 3 கிரவுண்ட் நிலத்தை,( பலப்பல கோடி பெருமானம் உள்ள சொத்து. ஒரு கிரவுண்ட் விலையே சில கோடி ரூபாய் இருக்கும்) பாலகிருஷ்ணன் என்பவரது வாரிசுகளான மீனாட்சி, லட்சுமி, கற்பகம், சுந்தர மூர்த்தி ஆகியோரிடமிருந்து விலைக்கு வாங்கினேன். கோடம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் இது பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த சொத்து தொடர்பாக கே.வி.எஸ். பிரசாத் என்பவர், போலி ஆவணங்கள் மூலமாக வில்லங்கங்களை ஏற்படுத்தி வருகிறார்.இது தொடர்பாக வட்டாட்சியர் நடத்திய விசாரணையில், எதிர் தரப்பினர் போலி ஆவணங்கள் மூலம் பட்டா பெற்றது தெரியவந்துள்ளது.இந்த சொத்தை வேதா அருண் நாகராஜன் என்பவருக்கு ரூ.5 லட்சம் வாங்கி கொண்டு நான் அடமானமாக கொடுத்துள்ளேன். இந்த சொத்து தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவை ஏற்று, நாங்கள் காலி செய்தோம்.சொத்து வாங்கிய பின்னர் மாநகராட்சிக்கு தவறாமல் சொத்து வரியும் செலுத்தி வந்துள்ளேன். எனது மகன் விடுதலை சிறுத்தை கட்சி தலைவராகவும், எம்.பியாகவும் இருந்து கொண்டு சமுதாய நலனுக்காக போராடி வருகிறார்.எனது மகன் கேட்டுக் கொண்ட தன் பேரில் நான் சொத்தை அனுபவிப்பதில் இருந்து விலகியுள்ளேன். இருப்பினும் சட்டப்படியான ஆவணங்கள் மூலம் மறைமுகமாக நானே சொத்தை அனுபவித்து வருகிறேன்.எனவே எனது சொத்தை அபகரிக்க முயற்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.