நாளை மறு நாள் 27-01-2021 அன்று சசிகலா நடராஜன் பெங்களூரு சிறை வாழ்க்கையில் இருந்து தண்டனைக்காலம் முடிந்து வெளியில் வருவதை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் தினகரன் உறுதி செய்துள்ளார்.
உடல் நலம் குன்றி விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை மருத்துவமனையிலேயே பெங்களூரு சிறைத்துறை அதிகாரிகள் விடுதலை செய்ய முடிவெடுத்துள்ளார்கள். அவரிடம் இது தொடர்பான கையெழுத்தும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் நான்காண்டு சிறையும் பத்து கோடி அபராதமும் விதிக்கப்பட்ட சசிகலா இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளி ஆவார். முதல் குற்றவாளி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர் இறந்து போனதால் தண்டனையில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
இந்த தீர்ப்பு வந்ததும் சசிகலா சிறைக்குச் சென்றதும் ஒரு அரசியல் பேரம் என்ற விமர்சனம் உள்ளது. அந்த வழக்கின் தீர்ப்பு வர நீண்ட மாதங்கள் ஆனது. ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அந்த வழக்கில் தீர்ப்பு வரவில்லை. சசிகலா தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்ற முயன்ற போது நான்கே நாட்களில் தீர்ப்பு வந்து சிறை சென்றார். சசிகலா மீதான ஊழல் தீர்ப்பை பாஜக பயன்படுத்திக் கொண்டது என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்து. ஆனால், அது உண்மைதான் என்ற போதும், சசிகலா குழுவினரை மன்னார்குடி கொள்ளைக் கும்பல் என்று சொன்னால் மிகையாகாது.
தமிழகம் முழுக்க அவர்கள் பெரும் கொள்ளையில் ஈடுபட்டார்கள். அவர்கள் பலரிடமிருந்து நிலங்களை அடித்துப் பறித்தார்கள். அவர்களிடம் நிலங்களை வசித்த வீட்டை இழந்தவர்கள் ஏராளம். அப்படி கொள்ளையடித்த பணத்தின் ஒரு பகுதியை தமிழ் அமைப்புகளுக்கும் சசிகலாவின் கணவர் நடராசன் கொடுத்து வந்தது வரலாறு.
நாளை மறுநாள் சொத்துக்குவிப்பு வழக்கின் முதல் குற்றவாளி ஜெயலலிதாவுக்கு நினைவில்லம் திறக்கப்படுகிறது. அதே நாளில் மருத்துவமனையில் இருந்து வெளிவருகிறார் சசிகலா.