மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் மீது மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷீஷ் மிஸ்ரா காரை ஏற்றியதில் இதுவரை 9 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்து திவீர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.இது உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் கலவரச் சூழலை உருவாக்கியிருக்கிறது.
உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜகவின் ஆட்சி நடக்கிறது. யோகி ஆதித்யநாத் அங்கு முதல்வராக உள்ளார். இந்நிலையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் அங்கு தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையில் மத்தியில் ஆளும் மோடி அரசில் மத்திய இணை அமைச்சராக இருப்பவர் அஜய் மிஸ்ரா லகிம்பூர்கேரி மாவட்டத்தில் திகுனியா என்னும் ஊரில் அருகில் உள்ள பன்வீர்பூரை சேர்ந்தவர். இவர் நேற்று அப்பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இருந்தார். உத்தர பிரதேச மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவும் அங்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் துணை முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆயிரக்கணக்கான விவசாயிகள் அப்பகுதியில் திரண்டனர். அப்போது திரண்டிருந்த விவசாயிகளுக்கு மத்தியில் பாஜகவினரின் வாகனம் ஒன்று வேகமாக மோத சம்பவ இடதிலேயே நான்கு விவசாயிகள் உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் மருத்துவமனைகளில் உயிரிழந்தனர்.உள்ளூர் பத்திரிகையாளர் ராம் காய்சியப் என்பவரும் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தையடுத்து விவசாயிகள் பாஜகவினரின் வாகனங்களுக்கு தீ வைத்தனர். பல இடங்களில் பெரும் வன்முறை பதிவானது. உத்தரபிரதேச காங்கிரஸ் பிரியங்காகாந்தி தலைவர் நேற்று நள்ளிரவு கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களைச் சந்தித்தச் சென்ற போது தடுத்து நிறுத்தபப்ட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். லகிம்பூர்கேரி மாவட்டம் முழுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இணையம் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஹிட்லரின் ஆட்சியை விட கொடுங்கோன்மை ஆட்சியாக யோகி ஆதித்யநாத் ஆட்சி மாறி விட்டதாகக் கூறி எதிர்க்கட்சியினர் மாநிலம் முழுக்க போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.