வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகள் மீது காரை ஏற்றிய விவகாரத்தில் 9 விவசாயிகள் கொல்லப்பட்டுள்ளார்கள். இந்தக் கொலையைக் கண்டித்து நிகழ்விடத்திற்கு செல்ல முயன்ற காங்கிராஸ் தலைவர் ப்ரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அதே போன்று முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில் போராட்டம் கை மீறிச் செல்வதால் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிப்போம் என்று பொத்தாம் பொதுவாக யோகி ஆதித்யநாத் அரசு அறிவித்துள்ளது. ஆனால், மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவரது மகனை கைது செய்ய வேண்டும் என்பது விவசாயிகள் கோரிக்கை.
உத்தரபிரதேச அரசு விவசாயிகள் அவசரமாக நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார்கள்.
தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர்களின் கட்சி தொண்டர்கள் மாநிலம் முழுக்க போராட்டங்களை நடத்தி வருவதால் உத்தர பிரதேச மாநிலம் முழுக்க பதட்டம் நிலவி வருகிறது.